SUCCESS OF THE DROPOUTS ஆங்கில நூல் ! நூல் ஆசிரியர் : பொறியாளர் கே. முத்துராஜ் . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
SUCCESS OF THE DROPOUTS
ஆங்கில நூல் !
நூல் ஆசிரியர் : பொறியாளர் கே. முத்துராஜ்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
*****
இனிய நண்பர் நூல் ஆசிரியர் பொறியாளர் கே. முத்துராஜ் அவர்கள், மதுரை மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் இயக்குனராக இருந்து கொண்டே பல்வேறு பணிகள் செய்து வருபவர். வாழ்வில் வெற்றி பெற்ற, சாதனை புரிந்த மிகச் சிறந்த ஆளுமையாளர்களின் வரலாறு எழுதி மாணவ சமுதாயத்திற்கு தன்னம்பிக்கை விதை விதைக்கும் விதமாக இந்த நூல் எழுதி உள்ளார்கள்.
நூலாசிரியருக்கு வாசிக்கும் பழக்கம் அதிகம் உண்டு. இணையம், முகநூல், பத்திரிக்கைகள் என்று சகல ஊடகங்களையும் உற்றுநோக்கும் ஆற்றல் மிக்கவர். இந்த நூலில் உலக பணக்காரர்களின் வரிசையில் முதலிடம் பெற்றுள்ள பில்கேட்ஸ், தோல்விகள் கண்டு துவளாமல் தொடர்ந்து முயன்று வெற்றிகள் பெற்ற அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன், புகழ் பெற்ற ஓபராய் விடுதி நிறுவனர் மோகன் சிங்க் ஓபராய், நடத்துனராக இருந்து பல கோடிகள் ஊதியம் பெறும் ரஜினிகாந்த், பெட்ரோல் பங்க்கில் ஊழியராக இருந்து கோடீஸ்வரராக உயர்ந்து இருக்கும் அம்பானி, ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்று தமிழர்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய எ.ஆர். ரகுமான், உயரத்திற்கு பின்னும் இன்னும் எளிமையாகவும், இனிமையாகவும், பண்பாகவும் இருக்கும் நடிகர் சாருக்கான், பள்ளி படிப்பில் மிக மிக சாதரணமாக படித்து இங்கிலாந்தின் பிரதமராக உயர்ந்த வின்ஸ்டன் சர்ச்சில், அறிவியல் மேதை விஞஞானி ஐன்ஸ்டீன், அறிவியல் அறிஞர் சார்லஸ் டார்வின், நூல்கள் எழுதி சாதனை படைத்த வால்டர், ஜான் மைனார்ட் கெயின்ஸ், சிறுவயதில் ஆசிரியர்களால் புறக்கணிக்கப்பட்டு பின்னாளில் பல கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், இலக்கியத்தில் தடம் பதித்த ஜியார்ஸ் பெர்னாட்ஷா - இப்படி வரிசையாக சாதனையாளர்களின் சுருக்கமான வரலாறு நூலில் உள்ளன. சோதனைகளை சாதனைகளாக்கிய மகத்தான மனிதர்களின் வரலாறு கூறும் நூல்.
மாணவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல். இந்த நூலை மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாட நூலாக வைக்கலாம். இந்த நூல் படித்தால் ஆங்கில அறிவும், பொது அறிவும், தன்னம்பிக்கையும் வளர வாய்ப்பாக அமையும்.
நூலாசிரியர் பொறியாளர் கே. முத்துராஜ் அவர்கள் ஒவ்வொருவரின் பிறந்த தேதி, ஊர், படித்த நிறுவனங்களின் பெயர் என மிக நுட்பமாக புள்ளி விபரங்களுடன் எழுதி உள்ளார். எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிய ஆங்கில நடையில் எழுதி உள்ளார். சிலர் யாருக்கும் புரியக் கூடாது என்றே பல கடினமான ஆங்கிலச்சொற்களைப் பயன்படுத்தி எழுதுவதுண்டு. இவர் கடினமான சொற்கள் எதுவுமின்றி எழுதி இருப்பது சிறப்பு.
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். சோகங்களுக்காக சோர்ந்து விடாமல் தொடர்ந்து இயங்கினால் சாதிக்க முடியும் என்பதை உணர்த்திடும் நூல். சாதாரண மனிதன் கடின உழைப்பின் காரணமாக சாதனை மனிதனாக உயர்ந்த வரலாறுகள் நூலில் உள்ளன.
படித்து முடித்தவுடன் படித்த வாசகர் மனதில் ஒரு உத்வேகம் பிறக்கின்றது. நாமும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியை உருவாக்குகின்றது. இந்த உணர்வு தான் நூலாசிரியர் பொறியாளர் கே. முத்துராஜ் அவர்களின் வெற்றி.
இந்த நூலை அவரது குடும்பத்தினருக்கு மனைவி, மகன்கள், மருமகன்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். தொ டர்ந்து நூல்கள் எழுதி வருகிறார்கள். முத்திரைப் பதி க்கும் முத்தாய்ப்பான நூல். பாராட்டுக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக