ஆயிரம் ஹைக்கூ'
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
நூல் விமர்சனம் : கோவை கோகுலன்
நூல் கிடைக்குமிடம்: வானதி பதிப்பகம், 23 தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 184 பக்கங்கள் - 17 .விலை: ரூ 100 .தொலைபேசி 044-24342810 , 044- 24310769. மின் அஞ்சல்
சிற்றுளி சின்னது தான். ஆனாலும் கையாளும் வகையில் அது பாறைகளைக் கூட பிளக்கும் வல்லமை பெற்று விடுகிறது. விரல் நுனிக்குள் அடங்கும் தானியமொன்று பல நூறு தானியங்களை ஒன்றாக்கி கதிர்களைத் தருகிறது. அப்படித்தான் கைகளுக்குள் அடங்கி விடும் காகித வரிகள் கூட மாபெரும் மாற்றங்களை விளைவித்திருக்கிறது. கையளவுகள், கடலளவுகளை உண்டாக்கும் நவீன உலகம் இது.
கவிதை இலக்கியங்களில் ஒரு வகையான மூன்று சின்ன வரிகளைக் கொண்ட துளிப்பாக்கள், இன்று தூண்களாய் எழுந்து நின்று இலக்கியக் கூரைகளை தாங்கி நிற்கிறது. ஆம். துளிப்பாக்களின் காலமிது. நேற்றைய முயற்சிகள் இன்று முடிவுகளைத் தருவது போல் துளிப்பாக்கள் இன்று எழுத்துப் பாக்களாக மாறி கவிதைக் களங்களில் கருத்துப்போர் நடத்தி வருகிறது.
தமிழக இலக்கிய மேடைகளில் இன்று துளிப்பாக்களுக்கு சரியாசனங்கள் கிடைத்திருக்கிறது. அவற்றின் சாதனைகள் இன்றைய இலக்கிய வீதிகளுக்கு புதிய பாதைகளை அமைத்து வருகிறது. அந்த வரலாற்றின் வழித்தடத்தில் இன்று குறிப்பிட்ட சில துளிப்பாக்களையே தங்களது ஆயுதங்களாக்கி கவிதைப் போராளிகளாக வளம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களில், தவிர்க்க முடியாதவராக, தன்னலமற்றவராக, துளிப்பா வல்லுனராகி விட்ட கூடல் நகரத்து முத்திரைக் கவிஞர் மதுரையின் மண்மைந்தர் இரா. இரவி அவர்கள். உற்சாகமுடன் உலா வந்து கொண்டிருக்கிறார். இவரின் வாழ்க்கையின் நாட்கள் ஒவ்வொரு விடியலும் இவரது துளிப்பாக்களாகவே விடிகின்றன. இவரது செயல் வடிவங்கள் அனைத்தும் துளிப்பா படிவங்களாக உருவெடுத்து வருகிறது.
இதற்க்கெனவே இணையதள மேடைகளை உருவாக்கி அவைகளில் (ஹைக்கூ) துளிப்பா வகைகளை , அதன் வளர்ச்சியின் பரிணாமங்களை, பலாக்க னிகளாக்கி, படைப்பாளர்களுக்கும், படிப்போருக்கும், அனைவரையும் அறிந்து, ஆய்ந்து, அவர்களையும் அவர்தம் படைப்புகளையும் இணையங்களிலேற்றி உலகெங்கும் உலா வரச் செய்து உவகையுடன் செயலாற்றி வருகிறார்.
நூல்கள் பலவற்றை பாங்குடன் படிப்பதுடன் இலக்கிய நிகழ்வுகள், ஊடகங்கள், நிகழ்வுகள் என சதா சர்வ காலமும் பணியாற்றி வருகிறார் திரு. இரவி அவர்கள். ஏறக்குறைய இவரது அனைத்து நூல்களையும் நான் படித்து மகிழ்ந்திருக்கிறேன். அந்த அணி வரிசையில் 'ஆயிரம் ஹைக்கூ' என்னும் இவருடைய நூலும் கிடைத்து நீண்ட இடைவெளிக்குப் பின் ஆர்வமுடன் புரட்டி படித்து, என் தினவுகளை ஆற்றிக் கொண்டேன். 'கணினி யுகத்துக்கான கற்கண்டு கவிதைகள்' என்கிற அய்யா திரு. முனைவர் இரா. மோகன் அவர்களின் பாராட்டுக்கள் பொருத்தம் ஆனது தான்.
இந்நூலின் தலைப்புக்கூறுகளே நூலின் சிறப்பைக் கட்டியம் கூறி விடுகிறது. தமிழ், தமிழர், தமிழ்நாடு எனத் தொடங்கி குமுதம், சிநேகிதி இதழ் பதிவு என்பதான இருபத்து மூன்று வகைக் கூறுகள் ஒன்றிணைத்து வாசிப்போரின் நேசங்களை மருவி மகிழ்வித்து இதம் தருகின்றதை ஒரு வாசகன், படைப்பாளன் என்கிற வகையில் என்னால் நன்றாக உணர முடிந்தது.
நூலெங்கும் நான் சுவைத்த சில தேன் துளிகளை சுட்டிக் காட்டி நூலின் சுவைக்கும் மெருகூட்டும் ஆசையில் சில துளிப்பாக்களை இங்கு குறிப்பிட விளைகிறேன்.
1.
|
வேகமாய் விற்கின்றது
நோய்பரப்பும் குளிர்பானம்
வருத்தத்தில் இளநீர்.
|
இயற்கையை இழிவுபடுத்திய
செயற்கையின் தாக்கத்தை
தட்டிகேட்கிறது இந்த துளிப்பா.
|
2.
|
உண்ணவில்லை சைவம்
உருவத்தில் பெரியது
யானை.
|
உணவின் மேன்மையை
உயிர்களுக்கு பொதுவாகியும்
உணராத மனிதரைச் சாடுகிறது கவிதை.
|
3.
|
துயரம்
தோள் தந்தது
நட்புக்கரம்
|
நட்பின் உன்னதத்தை
உரித்துக் காட்டும்
சிற்றுளியாய் விளங்குகிறது.
|
4.
|
எண்ணங்களால் அன்று
எண்ணிக்கையில் இன்று
கூட்டணி.
|
அரசியல்வாதிகளின் அவலங்களை
அளந்து பார்த்து அவனிக்குக் காட்டும்
அளவுமானி
|
5.
|
கிணற்றில் விழலாமா
விளக்கை ஏந்தியபடி
வாக்களிப்பு
|
மக்களின் மடமையைப் பாதைகளாக்கி,
அதில் பயணிக்க அரசியல்வாதிகள் மக்களிடம் அளிக்கும் கொள்ளை. |
6.
|
மூடநம்பிக்கை
முற்றுப்புள்ளியாக்கியது
ஈரோட்டு மை.
|
பகுத்தறிவு வெளிச்சத்தை பரப்பி
புதிய நம்பிக்கை ஊன்றுகோலை
தாழ்ந்தோர்களுக்குத் தந்த தந்தை.
|
7.
|
தமிழ் பண்பாடு சிதைப்பு
தமிழர் திருநாளில்
தொ(ல்)லைக்காட்சிகள்
|
பெண்களை பெட்டிகளுக்குள் பொருளாக
முடக்கி வைத்துவிட்டு இல்லறச் சுகங்களை
இழக்கச் செய்த ஊடகம் சாட்டையடி
|
8.
|
வன்முறைவேண்டாம் நம்பு
கொடி படரக் கொம்பு
குழந்தை வளர அன்பு
|
இதை விட இனிப்பான உதாரணத்தை குழந்தைகளுக்கு காட்ட வார்த்தைகள் தேவையில்லை. சுவை கூடியுள்ளது.
|
9.
|
கெடவில்லை பொருட்கள்
குளிரூட்டப்பட்ட அறையில்
மனிதர்கள் மூளை
|
அறிவியல் விளைச்சல்களில்
இருப்புக்களை விழுங்கும் இழப்புக்களை
எடுத்துக் காட்டும் கண்ணாடி இக்கவிதை.
|
10.
|
பல கோடி ஊழல்
பிணையில் வெளியே
ரொட்டித் திருடன் உள்ளே
|
இன்றைய அரசியல்வாதிகளை
அடையாளம் காட்டி விட இதை விட
நாசுக்காக குத்தல் இல்லை.
|
பானைச் சோற்றுக்கு பருக்கை அரிசி போதும் என்பது போல் நூலெங்கும் நிறைந்துள்ள அருமருந்துக் கவிதைகளை வாசிப்போரின் யோசிப்புக் கருதி சுருக்கமாக எனது எண்ண விதைகளை விதைத்திருக்-கிறேன்.
இரா. இரவி அவர்களின் இந்த துளிப்பா பயணங்களின் இலக்குகள் தொடுவானாய் அமையட்டும். வெற்றிகள் குவித்து கொற்றமாய் நிலைக்க வாழ்த்துக்கள்.
21.03.2014 அன்புடன் என்றும்
கோவை. கோவை கோகுலன்
கருத்துகள்
கருத்துரையிடுக