நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் ! அலைபேசி 9442663637.
மின் அஞ்சல் kannandamodara03@gmail. com
தமிழ் மீரா வெளியீடு ,27.துரைசாமி புரம் விரிவு ,பாலக்கரை ,திருச்சி .620 001. விலை ரூபாய் 20.
தமிழ் மீரா வெளியீடு ,27.துரைசாமி புரம் விரிவு ,பாலக்கரை ,திருச்சி .620 001. விலை ரூபாய் 20.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
" சில நேரங்களில் சில இடங்களில் நூறு ரூபாய் தாளைவிட ஒரு ரூபாய் நாணயத்துக்கே அவசியம் ஏற்படும் .அப்படித்தான் ஹைக்கூ கவிதைகள் ."
ஹைக்கூ கவிதைக்கு இது வரை யாரும் சொல்லாத விதமாக வித்தியாசமாக சொல்லி உள்ளார் .பாராட்டுக்கள் .
அன்று மனிதனை நெறிப்படுத்துவதற்காக மதங்கள் தோற்றுவிக்கப்பட்டதாக சொன்னார்கள் .ஆனால் இன்று மனிதனை வெறிப்படுத்தவே மதங்கள் பயன்படுகின்றன .என்பதை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
சில நேரங்களில்
மனிதனும் யானைபோல
மதம் பிடித்துவிடும் !
இதே கருத்தை ஒட்டி நான் வடித்த ஹைக்கூ என் நினைவிற்கு வந்தது .
யானைக்கு மட்டுமல்ல
மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்து
மதம் !
அடுக்குமாடி வீ டுகள் ,உயரமான வீடுகள் என்று கட்டடங்கள் விரிவடைந்தபோதும் மனித மனங்கள் மிகவும் சுருங்கி விட்டது என்ற உண்மை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
நகரத்தில் அருகருகே
மனிதர்களின் வீடுகள்
தூரத்தில் மனிதநேயம் !
ஹைக்கூ கவிதை பற்றியே சில ஹைக்கூக் கவிதைகள் வடித்து உள்ளார் .அவற்றில் ஒன்று .
கஞ்சனாக எழுதினாலும்
வள்ளலாகச் சிந்திக்க வைக்கும்
ஹைக்கூக் கவிதை !
இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை பற்றி மனிதநேயர்களால் கண்டனத்தை பதிவு செய்யாமல் இருக்க முடியாது . நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் அவர்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் .
இலங்கையில் முதல் பலி
புத்தர் அப்புறம்
தமிழர்கள் !
பெண் குழந்தை பிறந்தால் வருந்தும் மக்கள் இன்றும் இருக்கின்றனர். பெண் குழந்தைகளைக் கொல்லும் அவலம் கிராமங்களில் இன்றும் நடந்து வருகின்றது .மகனை விட மகளே இறுதி வரை பாசமாக, அன்பாக இருக்கிறாள் என்பதை உணராதவர்கள். அவர்களுக்குகான ஹைக்கூ .
ஆண்பாலுக்கு எதிரான பால்
பெண்பால் பெண்பாலுக்கே
எதிரான பால் கள்ளிப்பால் !
மூட நம்பிக்கையைச் சாடும் விதமாக ஹைக்கூ வடித்துள்ளார். பூனை குறுக்கே சென்றால் அஞ்சும் மனிதர்கள் இன்றும் இருக்கின்றனர் .எள்ளல் சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று .
மனிதன் குறுக்கே வந்தான்
யோசிக்கிறது
பூனை !
பலர் வல்லரசு வல்லரசு என்று வீர வசனம் பேசி வருகின்றனர். ஆனால் ஒரு அரசு வல்லரசு ஆவதை விட வறுமை ஒழித்து தன் நிறைவு பெற்ற நல்லரசு ஆவதே நன்று என்பதை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
இரண்டாயிரத்து இருப்தில் வல்லரசு
எந்த ஆண்டிலிருந்து
நல்லரசு !
சிந்திக்க வைக்கும் விதமாக சமுதாய அவலங்களைச் சாடும் விதமாக ஹைக்கூ வடித்துள்ளார் .
குப்பைத்தொட்டியில் விளம்பரம்
குப்பைகளைப் போடுங்கள்
குழந்தைகளைப் போடாதீர்கள் !
இயற்கைப் பற்றி ஹைக்கூ வடிப்பதில் ஜப்பானிய ஹைக்கூக் கவிஞர்களையும் தமிழக ஹைக்கூக் கவிஞர்கள் மிஞ்சி விட்டார்கள் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக படைத்து வருகின்றனர் .இந்த ஹைக்கூ படிக்கும்போது வாசகர்க்கு மனக்கண் முன் ஆலமரம் வரும் என்று அறுதி இட்டுக் கூறலாம் .
எத்தனை ஜடை
இருந்தாலும் அழகுதான்
ஆலமர விழுதுகள் !
மரம் மழைக்கான வரம் .இது அறியாமல் பலர் மரங்களை கண்மூடித் தனமாக வெட்டி வீழ்த்தி வருகின்றனர் .அதனை கண்டிக்கும் ஹைக்கூ .
காடுகளை அழித்து
பெயர் வைத்தான்
பசுமை நகர் !
கோடை காலத்தில் இதம் தருபவை மரங்கள் .மரத்தின் மேன்மை உணர்த்தும் ஹைக்கூ .
கடும் வெயில்
குடை பிடிக்கிறது
மரம் !
மின்னல் என்ற பெயரில் ஹைக்கூ மின்னல்கள் வழங்கி உள்ள நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக