கவிதை அல்ல விதை நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர்

கவிதை அல்ல விதை

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர்
*****
புத்தகத்தைப் படித்தேன்  மிகவும் அருமை.
புவனத்தில் விடுபட்ட தலைவர்களை எல்லாம் புத்தகத்தில் நிரப்பி விட்டார் கவிஞர்.  இந்தக் கணினி யுகத்திலும் கூட "காந்தியைக் கூட காகித நோட்டுக்களில் வருபவராகத்தாகத் தான் பலர் கணித்து வைத்திருக்கிறார்கள்".
வல்லிக் கண்ணன், நேதாஜி போன்றோரெல்லாம் பலரின் பார்வைக்கு தலைமறைவு! காமராஜர் முதல் கலாம் வரை அனைவரின் பெருமையையும் கவிஞர் கூறியிருப்பது இந்நூலின் சிறப்பு!  அதிலும் நேதாஜியை நினைவு கூறுவது.
"இந்தியாவில் நீ பிறக்கவில்லை என்றால்
       இந்தியாவிற்கு விடுதலை இல்லை"
என்ற வரிகள் மாவீரன் நேதாஜிக்கு மிகை வரிகள் அல்ல!  மிகச் சரியான வரிகள்.
       "எரிமலை வெடிப்புகளிலும் ஏறி வர நினைப்பார்கள்" ஆனால்
       பித்த வெடிப்புகளுக்கே பொத்தென்று விழுவார்கள்!
       ஒருவரின் எண்ணம் செயல் வடிவம் பெறுவதற்குள் அதன் உறுதித்தன்மை இழந்து விடுவதே அதற்கான காரணம், ஆனால் நம் நேதாஜியோ உறுதியுடைய மாவீரன் என்பதை மிக எளிய வரிகளிலேய விளக்கிருப்பது அருமை!
காமராஜர் பற்றி கவிஞர் :
குறிப்பிட்டுள்ள வரிகளில் காமராஜர் காலம் தமிழகத்தின் பொற்காலம்.  காமராஜர் காலமானதால் காலமானது பொற்காலம்.
இந்த வரிகள் "படித்தவர்களுக்கெல்லாம் பசுமரத்தாணியாய்" மனதில் பதிந்திருக்கும்.  ஆனால் எனக்கோ, "பசுமரத்தில் சூரிய ஒளியாய்" பதிந்தது.  சூரிய ஒளியை வைத்தே பச்சையம் தயாரிக்கும் இலைகளைப் போல இந்த வரிகளை வைத்தே இன்னும் சில வரிகளைத் தயாரிக்க எனக்கு உதவின.
ஒரு கவிஞருக்கு வெற்றி எதுவென்றால் தன் எழுத்துக்களை வாசிக்கும் 'வாசகனும்' படைப்பாளியாக வளர்ச்சி பெறுவதே ஆகும்.!
அதைக் கவிஞர் இரா. இரவி அவர்கள் இந்த இரண்டு வரிகளில் சாதித்து விட்டார்.
பெண் விடுதலை பற்றி கவிஞர் :
எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது.
       பெண்களுக்கு விடுதலை ஆண்களால் கிடைக்காது.
என்று ஒரு ஆண் கவிஞரே கூறியிருப்பது, இந்தப்பாரத தேசத்தில் ஆண்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை குற்றமாக குறிப்பிடாமல் "தெளிவடைய" தெரிவித்திருக்கிறார்.  
       திறமையாளர்கள் சாதித்து விடுவார்கள்! பண்பாளர்கள் தான்  அதைப்  பத்திரப்படுத்திக் கொள்வார்கள்! கவிஞர் இரா. இரவி பத்திரப்படுத்தியே பன்னிரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
விழித்தெழு பகுதியில்
படித்த பெண்கள் எல்லாம் பலர்
       அடுப்பில் ஆசையையும் சேர்த்தே எரிக்கின்றார்கள்!
என்ற வரிகளின் பொருள் பாமரனுக்கும் விளங்கிடும் வகையில் அமைந்து பெண்களின் வேதனையை எடுத்துரைக்கின்றது.
ஊனமுற்றோரைப் பற்றிக் குறிப்பிடும் கவிஞர்
பார்வையற்றவர்களின் உழைப்பைப் பாடமாகக் கொள்வோம்.
       பார்வையற்றவர்களின் உயர்வுக்கு பாலமாக இருப்போம்.
என்ற வரிகளில் விழி இழந்தவர்களின் உழைப்பை நாம் பாடமாக கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், அவர்களை உயர்த்த நாமும் உறுதுணையாய் இருக்க வேண்டும் என்றும் மிகச் சரியான வரிகளில் தெரிவித்த விதம் அழகு!
"சந்திக்க முடியாத நபர்களையும் தன்னை
சிந்திக்க வைக்க முடியும் என்றால் அது கவிஞர் இரா.இரவியின் எழுத்துப்பணிக்கு கிடைக்கும் சிறப்பு"
வளர்பிறையாகட்டும் கவிஞரின் எழுத்துப்பணி – அதில்
       விடுமுறை எடுக்கட்டும் களைப்பும் இனி!
       அட்சயப் பாத்திரத்திற்கும் - ஒரு பிடி
       அள்ளிக் கொடுக்கும் வாய்ப்பைப் பெற்ற வாசகி!

.

கருத்துகள்