ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! --

ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் !




நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் !
kavithaiuravu@gmail.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

சுதா பதிப்பகம் ,420இ . மலர்க் குடியிருப்பு ,அண்ணா நகர் மேற்கு, சென்னை .6000040. விலை ரூபாய் 70.
.
திருநெல்வேலி அருகே உள்ள ஏர்வாடி என்ற பிறந்த ஊருக்கு பெருமைகள் சேர்த்து வருபவர் நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் அவர்கள் .பெயரோடு பிறந்த மண்ணை இணைத்துக் கொண்டவர் .

இவரை இராதா கிருஷ்ணன் என்றால் சிலர் மட்டுமே அறிவர் .ஆனால் ஏர்வாடியார் என்றால் இலக்கிய உலகில் அனைவரும் அறிவர். கவிஞர், எழுத்தாளர் ,கட்டுரையாளர் ,கவிதை உறவு ஆசிரியர், பேச்சாளர் இவை எல்லாம் விட எல்லோருடனும் அன்பாகப் பழகிடும் பண்பாளர் .பன்முக ஆற்றல் மிக்கவர் .என்னைப் போன்ற தன்னை விட இளையவர்களையும் நீங்கள் என்று மரியாதையாக அழைக்கும் உயர்ந்த குணம் உடையவர் .மகாகவி பாரதி போல எழுத்துக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாதவர் . நூலின் தன்னுரையில் எழுதி உள்ளதைப் பார்க்கும் போது கவிஞன் என்பதையே விரும்புகிறார் . 

" நான் எழுத்தின் எல்லா வடிவங்களையும் முயற்சிக்கிறவன்.சிறுகதை ,நாடகம் ,கட்டுரை ,வானொலி உரைச்சித்திரம் ,நவீனம் என்றெல்லாம் எழுதி அவையெல்லாம் அறிந்தேற்கப் பட்டிருந்தாலும் ,நான் அதிகமாய் அறியப்பட்டிருப்பது   கவிஞனாகத்தான் ."

நூலின் அட்டைப்பட வடிவமைப்பு உள்அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன . இந்த நூலை அவரது நண்பர் கவிஞர் தியாரூ அவர்களுக்கு காணிக்கை ஆக்கி  நட்புக்கும் கவிதைக்கும் மேன்மை செய்து உள்ளார் .அறிஞர் அண்ணா கல்லூரி முன்னாள்   முதல்வர் முனைவர் கா .ஆபத்துக்காத்த பிள்ளை அவர்களின் அணிந்துரை மிக நன்று .நூலின் பின் அட்டையில் பிரசுரமாகி உள்ள திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் பழனி பாரதி வாழ்த்துரை நன்று இந்த நூலில் 38 தலைப்புகளில்  உள்ளன ..மரபுக்கவிதைகளும்  உள்ளன. புதுக்கவிதைகளும்  உள்ளன .நூலின் முதல் கவிதையிலேயே கவிதை எப்படி எழுத வரும் என்று வளரும் கவிஞர்களுக்கு பயிற்று விக்கும் விதமாக கவிதை உள்ளது .

எங்கிருந்து கவிதை ?

அழகினிலே மயங்கிடுங்கள் கவிதை ஊறும்
ஆத்திரமா .. கொதித்திடுங்கள்  கவிதை பொங்கும் 

பழகிடுங்கள் பலருடனே கவிதை தோன்றும் 
பண்புகளால் ஈர்த்திடுங்கள் கவிதை பூக்கும்

அழத்தோன்றும்  போதழுங்கள்  கவிதை சிந்தும் 
அன்பாலும் கவிதைவரும் அவ்வா றின்றி

எழுகின்ற  கவிதை நீங்கள் படைப்ப தில்லை 
இதயத்துள் இருந்துமையாள் செய்வ தாகும்  !

கவிஞர் அனைவருக்கும் தமிழ்ப்பற்று உண்டு .தமிழ்ப்பற்று இருந்தால்தான் கவிஞர் .நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி 
எஸ் .இராதா கிருஷ்ணன் அவர்களுக்கும் தமிழ்ப்பற்று உண்டு. அதனால்தான் கவிதைகளை குற்றால அருவி போல கொட்டி வருகிறார் .அவரது தமிழ்ப் பற்றைப்  பறை சாற்றும் கவிதை நன்று .

தமிழைப் போல இனிமையில்லை !

உலகத்தின் மிகப்பெரிய மொழிகளுக்குள் 
உயர்தமிழே மிகச்சிறந்த மொழியென் பார்கள் 

உலகத்தின் இன்பங்கள் யாவி னுக்கும் 
உயர்த்தமிழே எப்போதும் உச்சமாகும் !
 
கலைமாமணி ஏர்வாடியாரின் வெற்றியின் ரகசியம் என்னவென்று யோசித்துப் பார்த்தால் எல்லோருடனும் அன்போடு பழகுவது .மிகப் பெரிய முக்கிய  பிரமுகராக இருந்தாலும் , என் போன்ற வளரும் கவிஞராக இருந்தாலும் சமமாகவே அன்பு செலுத்துவார் .அவர் மதுரை வரும்போதெல்லாம்  தமிழ்த் தேனீ இரா .மோகன் அய்யாவோடு சென்று வரவேற்று  சந்தித்து உரையாடி மகிழ்வேன். உரையாடும் நிமிடங்களில் அன்பு மழை பொழிவார்கள் .பல அரிய செய்திகளும் பகிர்வார்கள் .மதுரை  புகைப்படக் கலைஞர் 
திரு .முருகன் அவர்களை சகோதரர் போல நடத்துவார். எழுத்தாளர் கவிஞர் இதழ் ஆசிரியர் என்ற கர்வம் துளியும் இல்லாத இனிமை மனிதர் 

வாழ்க்கையில் கடைபிடித்து வரும் அன்பு பற்றிய கவிதை நன்று .

அன்பின் வடிவம் !

அன்பான சொல் இனிக்கும்
அது சுவைக்கும் 

அன்பே நம் செவிகளுக்கு 
விருந்து மாகும் 

அன்பான வாய்மணக்கும் 
எனவே அன்பாய் 

என்றைக்கும் இருப்பதுதான்
இனிமை என்றேன் ! 

ஆம் அன்பால் உலகை ஆளலாம் .அதனால்தான் வள்ளுவர் அன்பை மிக உயர்வாக உணர்த்தினார்  திருக்குறளில் . 

விதி என்று நொந்து சாகாதே. வீணாய் காலம்  கழிக்காதே .முயற்சி திருவினையாக்கும் என்ற கருத்தை இறைவனால் அல்ல என்ற கவிதையில் உணர்த்தி உள்ளார் .இறைவா நீ வர வேண்டாம் என்ற கவிதையை எள்ளல் சுவையுடன் எழுதி உள்ளார் . 

இறைவா நீ வர வேண்டாம் !

இல்லையில்லை பக்தர்களைப் பார்க்க வேண்டும் 
என்றுனக்கு போதாத ஆசை வந்தால் 

சொல்லுகிறேன்  ஒரு நாளில் இறங்கி வந்து 
தேர்தலில் தனியாக நின்று பார் நீ 

சில்லறையும் செல்வாக்கும் செல்லும் வண்ணம் 
செயும்  வித்தை வெல்லும் நீ தோற்பாய் அன்று 

எல்லோருக்கும் அருள் சுரக்கும் இறைவா பக்தி 
எட்டத்தில் இருந்தால்தான் என்று ணர்வாய் !

அரசியல் அவலங்களை இறைவனுக்கு சொல்வது போல வாசகருக்கு சொல்லி உள்ளார் .

இந்தக் கவிதைகள்  கவிதை உறவு மாத இதழில் ஏர்வாடியாரின் ஏழாம் பக்கத்தில் படித்தவை .மொத்தமாக நூலாகப் படிக்கும் போது திரும்பத் திரும்ப வாசித்து மகிழ்ந்தேன் . 

இறைவா நீ வர வேண்டாம் ! என்று எச்சரிக்கை செய்தவர் மறு மாதம் கவிதை உறவில் இறைவா நீ வர வேண்டும் ! என்றும் எழுதினார். கவிஞரின் உள்ளத்தில் உருவாகும் கருப்பொருளுக்கு ஏற்றபடி கவிதை வரும் என்பதற்கு எடுத்துகாட்டு இவை .

இறைவா நீ வர வேண்டும் !

நகரம்தான் நரக வாழ்க்கை எனினும் கொஞ்ச 
நாள்களேனும் எங்களோடு தங்க  வேண்டும் !

வரப்போகும் நாள் தெரிந்தால் விழா யெடுக்க 
வசதியாக இருக்கும் ;ஒரு சேதி சொல் நீ !

அடுத்து கடவுளே பேசுவது போல ஒரு கவிதை இப்படிக்கு  இறைவன் என்று ஒரு கவிதை .கடவுள் என்றைக்கு பேசினார் என்று பராசக்தி வசனத்தை கேட்டு விடாதீர்கள்.கடவுள் பேசுவது போல ஏர்வாடியார் பேசி உள்ளார் .  

இப்படிக்கு இறைவன் !

சின்ன இதழ் மலர்கின்ற சிரிப்பி லெல்லாம் 
சத்தியமாய் நானிருப்பே ன் இன்னும் மேலாய்  !

அன்னையை நீ தெய்வமாக ஏற்றுக் கொண்டால் 
ஆலயமாய் அவள்பாத கமலம் காண்பாய் ! 

ஏழையின் சிரிப்பில் இறைவன் உள்ளான் .பெற்ற தாயே தெய்வம் என்றும் வலியுறுத்தும் விதமாக கவிதை எழுதி உள்ளார் ஏர்வாடியாருக்கு கடவுள் நம்பிக்கை  உண்டு . மதுரை வரும்போதெல்லாம் மீனாட்சியம்மன் கோவில் சென்று வருவார் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை .இருந்தபோதும் கடவுள் பெயரிலான கவிதைகளை ரசித்துப் படித்தேன் .கவிதைகள் படி தேன். நூல் விமர்சனத்தில் அனைத்து கவிதைகளையும் எழுத முடியாது .எழுதக் கூடாது என்பதால் பதச் சோறாக சில மட்டும் எழுதி உள்ளேன் .நூல் ப்வாங்கி படித்துப் பாருங்கள்
 .
இந்த நூல் சொற்களின் சுரங்கமாக உள்ளது .வளரும் கவிஞர்கள் அனைவரும் வாங்கி வாசிக்க வேண்டிய நூல் .படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் புரியும் விதமாக அனைத்து கவிதைகளும் உள்ளன. புரியாத புதிர்க்கவிதை ஒன்றும் இல்லை . கவிதைகள் எளிமையாகவும் , இனிமையாகவும் , புதுமையாகவும் ,அன்பை விதைக்கும் விதமாகவும் ,பண்பை வளர்க்கும் விதமாகவும், தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவும் உள்ளன .நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .உங்கள் இலக்கிய மகுடத்தில் பதித்த வைரக் கல்லாக மிளிர்கின்றது .


.

கருத்துகள்