சிறிய மாற்றம் பெரிய வெற்றி நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
சிறிய மாற்றம் பெரிய வெற்றி
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
கண்ணதாசன் பதிப்பகம், கண்ணதாசன் சாலை,
*****
நூல் ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் அவர்கள் வருமான வரித்துறையில ஆணையராகப் பணிபுரிந்து கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருகிறார்கள். இந்த நூலின் தலைப்பே "சிறிய மாற்றம் பெரிய வெற்றி" மாற்றத்தை உணர்த்துவதாக உள்ளது. இந்த உலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதற்கு ஏற்ப மாற்றங்களை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்தும் நூல்.
இனிய நண்பர் பொறியாளர் சுரேஷ் அவர்களின் அழைப்பின் பேரில் இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று இந்த நூல் வாங்கி வந்தேன். குயின் மீரா பள்ளியில் மாநாடு போல் நடந்தது. கலைமாமணி கு. ஞானசம்பந்தன், தியாகராசர் கல்வி குழுமத்தின் தலைவர் கருமுத்து கண்ணன் உள்ளிட்ட பலரும் வந்து பாராட்டினர்.
"வெற்றியின் ரகசியம்" என்ற தலைப்பில், தினமலர் நாளிதழில் பிரசுரமான கட்டுரைகளின் தொகுப்பு. வாராவாரம் கட்டுரைகளாக படித்த போதும் ஒட்டுமொத்த நூலாக படித்த போது பரவசம். பழரசம். இந்த நூலை நூலாசிரியரின் தந்தை புலவர் அ. சின்னன் அய்யாவுக்கும், தாயார் தெய்வத்திருமதி அமிர்தம் அம்மாளுக்கும், அவரது அருமை மனைவி அகிலா பரத் அவர்களுக்கும், புதல்வன் அர்ஜுன் பரத்துக்கும் காணிக்கையாக்கி உள்ளார். 30 கட்டுரைகள் முத்தாய்ப்பாக உள்ளது.
நூலாசிரியர் தன்னுரையே தன்னம்பிக்கை உரையாக உள்ளது.
"நம்மால் முடியாது" என்று நம் உயரத்தை நாமே குறைத்துக் கொள்ளாமல் நமக்குள் இருக்கும் மாபெரும் சக்தியை நம்புவோம். நமது வளர்ச்சி பெரிய ஆலமரமாக விஸ்வரூபம் எடுப்பதற்குத் தேவையானதெல்லாம் நம் மனதில் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய எண்ணம் என்கிற சிறிய விதையே. "
இந்த புத்தகத்தைப் படிக்கும் போது அந்த விதை உங்கள் மனதில் விழுந்து வேர் ஊன்ற ஆரம்பித்து விடும்". இந்த நோக்கத்தின் விளைவே நன்மையை பறைசாற்றும் விதமாக என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
கட்டுரைகளின் தலைப்புகளே படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் வெற்றி விதை விதைப்பதாக உள்ளது.
திறமை தான் மூலதனம். புத்திசாலித்தனம், நம்மை விரைவில் உயர்த்தும், உற்சாகம் நமது வளர்ச்சியை தீர்மானிக்கும், திட்டமிட்ட வாழ்க்கை, ஒளிமயமான எதிர்காலம், நேர நிர்வாகம் ஒரு கலை, ஆரோக்கியம் பேணுவோம். பேசும் கலை பயில்வோம், கெட்ட குணங்களை அகற்றுவோம், எதிர்மறை குணங்களை அகற்றுவோம், நிகழ்காலத்தில் இருப்போம், மிக நுட்பமாக தலைப்புகளை எழுதியமைக்கு பாராட்டுக்கள்.
அக்னி சிறகுகள் நூலின் மூலம் விற்பனையில் சாதனை நிகழ்த்திய கண்ணதாசன் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. கவியரசு கண்ணதாசனின் புதல்வர் பதிப்பாளர் திரு. காந்தி கண்ணதாசன் அவர்களும் மதுரையில் நடந்த இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்து இருந்தார்கள். உரையாடி மகிழ்ந்தேன். நூலின் அச்சு உள்ளே உள்ள பொருத்தமான படங்கள் என நேர்த்தியாக உள்ளன. பாராட்டுக்கள்.
மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்றார். அந்தக் கருத்தை வழி மொழியும் விதமான கருத்து மிக நன்று.
"ஒவ்வொரு நிகழ்வும் இந்த உலகத்தில் இருமுறை நிகழ்வதாகக் கூறுகிறார்கள். ஒன்று மனத்திரையில் இன்னொன்று நிஜத்தில்".
"நாம் எந்த நிலையை அடைய வேண்டுமென்று மனதில் ஆழமாகப் பதிவு செய்கிறோமோ, அந்த நிலையை விரைவில் அடைவது உறுதி."
கட்டுரைகளில் முக்கியமான கருத்துக்கள் உள்ள பகுதியில் எழுத்து வேறுபடுத்திக் காட்டி இருப்பதால் நூல் படிக்கும் போது அவற்றைத் திரும்பவும் படித்தால் நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன. இந்த நூல் படிப்பதற்கு முன் வாசகர் மனநிலையும், இந்த நூல் படித்ததற்கு பின் வாசகர் மனநிலையும் உள்ள மாற்றம் முன்னேற்றமே நூலாசிரியர் திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ். அவர்களின் வெற்றி.
இதயேந்திரன் மூலமாக உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு நன்கு விதைக்கப்பட்டது. தன் முன்னேற்ற நூலாக இருந்த போதும் சமுதாயத்திற்கு பயனுள்ள பல கருத்துக்கள் நூலில் உள்ளன.
"இறந்த பின்னும் சமுதாயத்திற்கு நாம் பயன்பட வேண்டும் என்ற பொறுப்புணர்வு உள்ளவர்கள் தங்களது உடல் உறுப்புகளைத் தானம் செய்கிறார்கள்".
ஆம். இறந்த பின் தீக்கும் மண்ணுக்கும் இரையாகும் விழிகளை பார்வையற்ற இருவருக் குக் வழங்கி இறந்த பின்னும் இயற்கையை ரசிக்க உதவும் நல்ல கருத்துக்கு நன்றி.
காதலித்து கரம் பிடித்தவர்களே விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடும் அவலம் நாட்டில் நடந்து கொண்டு இருக்கின்றன. உறவுகள் பேனா வேண்டிய புத்திகளையும் நூலில் விளக்கி உள்ளார்.
"உறவுகளில் விரிசல் உருவாவதற்கு முக்கியமான காரணம் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியடையாமை. ஆரோக்கியமான உறவு, சம்பந்தப்பட்ட இரு சாராரையும் உயர்த்தி விடும்"
மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியரின் இயற்பெயர்
சி. தமிழ் திருமொழியன். இயற்பெயருக்கு ஏற்றபடி செந்தமிழில் மொழிந்து நல்ல கருத்துக்களை எழுதி உள்ளார். கணிப்பொறியாளர், சட்டம் பயின்றவர், தடகள விளையாட்டுவீரர், தேசியமாணவர்படைஅனுபவம், அமெரிக்கா சென்ற அனுபவம் இப்படி பன்முக ஆற்றலின் வெளிப்பாடே இந்த அரிய நூல். பாராட்டுக்கள்.
நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் அவர்கள் பரபரப்பான வருமானவரித்துறையில் ஆணையராகப் பணி புரிந்து கொண்டே இலக்கியத்திற்கும் நேரம் ஒதுக்கி நூல்கள் எழுதி வருவதற்கு பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .உங்கள் எழுத்து இளைய தலைமுறைக்கு தன்னம்பிக்கை விதைக்கும் எழுத்து .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக