'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன்



'ஆயிரம் ஹைக்கூ'  
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
நூல்  விமர்சனம் : எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன்93, வைகை வீதி, சத்யசாய் நகர், மதுரை-625 003. 

வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com 184 பக்கங்கள் விலை ரூபாய் 100.


*****
அன்பு நண்பர் இரவியின் ஆயிரம் ஹைக்கூ நூலினை வாசித்திடும் வாய்ப்பு கிட்டியது.  பெரிதும் மகிழ்ந்தேன்.  ஹைக்கூ ஒரு புதிய கவிதை வடிவம்.  உழைப்புக்கு பேர் போன குட்டை ஜப்பானியர்களின் சிந்தனைகள் எடுத்த விசுவரூபம் தான் ஹைக்கூ....!  அதை தமிழும் தமிழகமும் தமிழனும் தத்தெடுத்துக் கொள்வதில் தவறே இல்லை.
ஜப்பானியப் பொருட்களுக்கு மட்டுமா நம் இல்லத்தில் இடம்?  அதன் கவிதா வடிவத்துக்கும் தான்.... ஹைக்கூ’வின் வடிவம் தான் குட்டை-ஆனால் அதனுள் அணுகுண்டுவுக்குள் அடங்கியுள்ள ஆற்றல் சக்தி போல ஏராளமான சிந்தனைகள் அடங்கியுள்ளன.
ஆயிரம் பக்கத்தில் ஒரு தடித்த புத்தகம் தரும் கருத்தை ஒரு ஹைக்கூ போகிற போக்கில் தந்து விட்டு போய் விடும்.  ஆனால் இந்த வடிவம் நமக்கு வசப்பட நமக்குள் வாழ்வியல் சிந்தனைகளும், கற்பனைகளும், பார்வைகளும் மிக விசாலமானதாக பெரும் ரசனையோடு இருத்தல் அவசியம்.  இல்லாவிட்டால் இந்த ஹைக்கூ எனும் மைனா கையில் பட்டு பறந்து விடும்.  இரவிக்கு இந்த ஹைக்கூ மைனா மேல் ஒரு கண்.
வாழ்விலும் இரவி ஒரு செயல் வீரர்.  திரு. இறையன்பு துல்லியமாக கணித்துச் சொன்னதைப் போல அவர் புலிப்பால் ரவி.  அதனால் மைனாவை பலசமயம் சுலபமாக பிடித்து வருடிக் கொடுத்து கொஞ்சி விட்டு பின் நம் வாசக வானத்தில் அதை பறக்க விட்டு விடுகிறார். 
அப்படி பறந்த மைனாக்கள் தான் ஆயிரம்!  ஆயிரம் மைனா பறக்கும் வானம் எத்தனை அழகானதாக இருக்கும்?  நினைக்கும் போதே சுகமாக இருக்கிறதே!
‘வாசக வானில்
      ஹைக்கூ மைனாக்கள்
      அடடே ரவி!’
- என்று அந்த சுக உணர்வே ஒரு ஹைக்கூவாக மலர முயல்வதை என்னென்று சொல்ல?

      ‘உழைக்கும் மாட்டுக்கு
      உதவுவதாக துன்பம்
      லாடம்’
’             - என்று ஒரு ஹைக்கூ

      அற்புதக் கவிதை
      படிக்காமல் தின்றது
      கரையான்         – என்று ஒரு ஹைக்கூ.

      இப்படி ஆயிரம் கவிதைகள் – அபார சாதனை!  அவ்வளவிலும் முற்போக்குச் சிந்தனை!  சில கவிதைகளில் ஹைக்கூவின் வடிவம் நேர்கருத்தால் மாறிப் போயிருந்த போதிலும் முயற்சி பெரிதும் பாராட்டுக்குரிய ஒன்று.  ஆயிரத்தையும் வாசித்து முடித்த நிலையில் இடைஇடையே சில எண்ணங்கள் எழுந்ததையும் சொல்லித்தான் தீர வேண்டும்.
      ஒரு தாய்க்கு பல பிள்ளைகள்.  இதில் ஒன்றிரண்டு ஆயுத கேஸ் ஆகவும் அமைந்து விடுவது உண்டு. அப்போது வயிற்றை கிழிப்பதை தவிர வேறு வழியில்லை.  அப்படி சுகப்பிரசவம் காணாத, வடிவம் பெறாத சில கவிதைகளும் கண்ணில் பட்டன.
      ஆயிரத்தை எட்ட வேண்டும் என்கிற கணக்கில் சுகபிரசவத்துக்கு எதிராகிவிட்டதோ என்று எண்ணச் செய்தது.
      மற்றபடி ரவி நிறைய வாசித்து நிறைய யோசித்து நிறைய கவனித்து வாழ்ந்து சென்றாலே போதும், உடம்பு வியர்த்து, வியர்வை பெருகுவது போல உள்ளம் விடைத்து கவிதை அரும்பி விடும்.  மெனக்கெடவே வேண்டாம்.

 நன்றி பிரசுரம் செய்த புதுகைத் தென்றல் மாத இதழ் !



.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்