தாய்மொழி தமிழே ! தொகுப்பு ஆசிரியர் : மருத்துவ கலாநிதி முனைவர் வே.த. யோகநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
தாய்மொழி தமிழே !
தொகுப்பு ஆசிரியர் : மருத்துவ கலாநிதி முனைவர்
வே.த. யோகநாதன் !அலைபேசி : 94431 64467
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
வெளியீடு : அனைத்துலகத்தமிழ்மன்றம், செட்டியப்பட்டி பிரிவு, சின்னாளப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்,
விலை : ரூ. 75.
*****
வலி மிகுந்த புலம் பெயர்ந்த வாழ்க்கையிலும் ஈழத்தமிழர்கள் தமிழுக்காக தங்களால் முடிந்த பங்களிப்பை இன்முகத்துடன் செய்து வருகிறார்கள். ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து திருச்சியில் வாழ்ந்து வரும் மருத்துவ கலாநிதி முனைவர் வே.த. யோகநாதன் அவர்கள், "தாய்மொழி தமிழே" என்ற தலைப்பில் 49 கவிஞர்களிடமிருந்து கவிதைகள் பெற்று தொகுத்து தனது கவிதையும் சேர்த்து அழகிய நூலாக வெளியிட்டு உள்ளார்கள். மொத்தம் 50 கவிதைகள் உள்ளன.
"தாய்மொழியைப் பற்றி சிந்திக்கும் உணர்வை ஊட்டுவதற்காக உருவாக்கப்பட்டதே இத்தொகுப்பு"
நூலின் நோக்கத்தை எழுதி உள்ளார். கும்பம் கூ (பெப்ரவரி21) உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வெளியிட்டு உள்ளார்கள். பாராட்டுக்கள்.
சில தொகுப்பாசிரியர்கள் தனது கவிதையை முதலில் பிரசுரம் செய்வார்கள். ஆனால் இவர் எனது கவிதையை முதலில் பிரசுரம் செய்து அவரது கவிதையை இறுதியாக பிரசுரம் செய்துள்ளார்.இது அவருடைய பொதுநல நோக்கை பறைசாற்றுவதாக உள்ளது" பாராட்டுக்கள். தமிழன்னைக்கு அணி சேர்க்கும் விதமாக வந்துள்ளது. மிக நன்று.
உலக உருண்டையின் மீது உலகின் முதல் மொழியான தமிழின் தாய் தமிழ்த் தாய் அமர்ந்து இருப்பது போன்ற அட்டைப்படம் மிக நன்று. உலக வரைபடமும் கீழே உள்ளது. பின் அட்டையில் நூலின் நோக்கத்தை எழுதி உள்ளார். நூலின் இறுதி பக்கத்தில் 37 கவிஞர்களின் புகைப்படமும் உள்ளது. அடுத்த பதிப்பில் கவிஞர்களின் அலைபேசி என்னையும் பிரசுரம் செய்தால் நன்றாக இருக்கும்.
இந்நூலில் பங்குப்பெற்றுள்ள கவிஞர்கள் அனைவருமே தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளிகள். எனவே ஒரு சில கவிதையை மட்டுமே மேற்கோள் காட்டினால் மற்றவர்கள் வருந்தக்கூடும். எனவே எல்லாக் கவிஞர்களின் இரண்டு வரிகள் மட்டும் மேற்கோள் காட்டி உள்ளேன்.
1. கவிஞர் இரா. இரவி
ஈடு இணையற்ற இனிமையின் சிகரம் தமிழே!
எண்ணிலடங்கா சொற்களின் சுரங்கம் தமிழே!
2. செந்தமிழ் வாணி கவிஞர் ச. மல்லிகா, கோவை.
இன்றும் என்றும் அமுத மொழி!
அழிவு இல்லா வாழும் மொழி!
3. கவிஞர் வெற்றிப் பேரொளி திருக்குவளை
கலைகளில் வாழும் உயிராற்றல் – இன்று
வலைத்தளம் ஆளும் பேராற்றல் - செம்மொழிப் பேராற்றல்.
வலைத்தளம் ஆளும் பேராற்றல் - செம்மொழிப் பேராற்றல்.
4. கவிஞர் திருமதி சாந்தி யோகா, திருச்சி.
டும் டும் மென பொங்கு தமிழர் விழிக்கட்டும்
எம் தமிழ்ப் பண்பினை உலகம் அறியட்டும்.
5. கவிஞர் காசி, அருப்புக்கோட்டை.
ஆதி காலந் தொட்டே வடிவிலும்
ஒளியிலும் மேன்மை ஏற்றது தமிழே!
6. கவிஞர் த. அனந்தராமன், துறையூர்.
காலமெல்லாம் உன்னை சுவாசித்ததால்
தமிழே புகழுடம்பு அழியவில்லை!
தமிழே புகழுடம்பு அழியவில்லை!
7. ஒலிச்சித்தர் அரிமா சை. பிச்சை மொஹிதீன், பீமநகர்.
தந்தத்திற்கு இணையாகும் அதன் மதிப்பு - அது
தந்ததற்கு நாம் என்ன செய்தோம்? அதற்கு.
8. கவிஞர் த. கருணைச்சாமி, தேனி
மொழி வாழ்ந்தால் எந்த இனமும் இனிதே
அழியாமல் வேரூன்றி நிற்கும் செழித்த பலா.
அழியாமல் வேரூன்றி நிற்கும் செழித்த பலா.
9. கவித் தென்றல் பூவை. பெ.து. ராதா, சென்னை.
அன்னைத்தமிழே ஆருயிர் மருந்து!
அகிலமே போற்றும் சுவை விருந்து!
10. கவிஞர் ச. சேகர், மே.க. கோட்டை.
ஓராயிரம் மொழிகள் உலகினில் இருந்திட்டாலும்
ஒப்பில்லா மொழி நம் தமிழ் மொழி
ஒப்பில்லா மொழி நம் தமிழ் மொழி
11. கவிஞர் சையத் முகமது, கிருஷ்ணகிரி.
பெற்றவளாய் வளர்த்தாய் தமிழே!
கற்றவனை ஆக்கும் தமிழே!
12. முனைவர் மரிய தெரசா, சென்னை.
தொன்றுதொட்டு மிளிர்ந்திட்ட தமிழும் இன்று!
தொலைந்திடுமோ என்கிற அச்சம் நெஞ்சில்
13. முனைவர் பட்ட ஆய்வாளர் சு. சித்ரா புலியூர்
நாகரிகம் என்ற பெயரில்
நாடிதுடிப்பினை இழந்து வாடும் கூட்டத்தில்
14. கவிஞர் மு. இராம பாண்டியன், மதுரை.
கடையில் தமிழில்லை உடையில் தமிழில்லை
மடையனாய் வாழ்ந்து மாந்தமிழை உடைக்கிறாய்
15. கவிஞர் முனைவர் ந. கிருட்டினமூர்த்தி, காரைக்கால்.
இயற்கை, வானம்
நிலவுப் பெண்ணின் பஞ்சு மெத்தைப் படுக்கையறை.
16. கவிஞர் ஈழபாரதி, புலிவலம்
எலும்புக் கூடுகளோடும் பிணக்குவியலோடும்
நீதி கேட்டு நிற்கிறோம் கண்களைக் கட்டிக்கொண்டு
வேடிக்கை பார்த்த சர்வதேசமே கண்களைத் திறந்து பார்.
நீதி கேட்டு நிற்கிறோம் கண்களைக் கட்டிக்கொண்டு
வேடிக்கை பார்த்த சர்வதேசமே கண்களைத் திறந்து பார்.
17. கவிஞர் காற்று (எ) கலைவாணி கிருட்டிணன், கோவை
பல மொழிகள் பரந்து வரும் உலகில் - ஆதிப்
பழங்குடியின் முதல் மொழியாய்த் தேறி
18. கவிஞர் ம. பாவலன், புதுச்சேரி.
சாதிமத பிரிவற்றச் சமத்துவத் தமிழே!
சாகாத வரம்பெற்ற சரியான தமிழே!
19. மருத்துவர் கவிஞர் ஜெ. ஜெயந்தி, கடலூர்.
திகைப்பூட்ட வைக்கும் திருக்குறளை
திருவள்ளுவர் தந்திட உதவிய தமிழே!
20. பாவலர் சீனி. சுந்தரமூர்த்தி , ஆவடி, சென்னை.
வாழ்க்கைக்கு வழி கட்டும் புறநானூறாய்
வளம்கொழிக்க அகம் மகிழ அகநானூறாய்
21. கவிஞர் க. கிருஷ்ணன், கழுகுமலை.
வா வெண்ணிலா
ஆயிரம் கவிஞர்கள் பண்ணுடன் பாட
இளமைக் காதலர் புத்துணர்ச்சி பெற்றிட
22. கவிஞர் நா. பொன்னுச்சாமி, புதுச்சேரி
வள்ளுவர் வகுத்திட்ட மான்புகொள் நல்வழியில்
உள்ளத்தைப் பதித்தே உயர்ந்தோங்கி நாம் வாழ்ந்தால்
23. கவிஞர் அ.ம.ம. சண்முகலிங்கம், நீலகிரி.
அகரத்தில் உயிர்த்த ஆதிமொழித் தமிழே!
அகிலத்தின் மூத்தக்குடி நீ தானே தாயே!
24. முல்லைக் கவிஞர் இராதா கண்ண(தாச)ன், கோவை.
காட்டு வெள்ளம் தடுப்பதற்கு அணையா?
கழனி நெல்லை அளப்பதற்கு முறமா?
25. கவிஞர் குமுதா ஆறுமுகம், மதுரை.
தமிழ்த்தாயே! நீ வெல்வாய் இனியது கண்கூடு
ஆட்சி செய் நீயே! இவ்வுலகம் என்றும் உன் வீடு.
26. வள்ளுவர் அடிப்பொடி முனைவர் வி. ஆனந்தகுமார், திருப்பூர்.
செந்தமிழை தினம் படித்தால்
சிந்தனயில் பூ மலரும் தமிழே!
27. கவிமாமணி தகடூர்த் தமிழ்க்கதிர், தருமபுரி.
தாய்மொழி ஏற்கும் கீழ்மை
கண்டிடக் கூசும் நெஞ்சம்.
28. கவிதாயினி மணி அர்ஜுனன், நீலகிரி
வாழ - நல்வழி காட்டும் தெவிட்டாத தேன்மொழியே போற்றி!
வாழ்வின் ஒளியே! வாட்டமுறாத் தமிழே! போற்றி! போற்றி!
29. கவிஞர் தடாகம் காசு. குணசேகரன்
பாரதி! எட்டயபுரத்து எரிமலை அவர்
ஏழ்மையில் வாழ்ந்த பனிமலை.
30. கவிஞர் இரா. முத்தழகன், ஆரணி.
தலை தந்த வள்ளல் குமணனைக் குவலயம்
போற்றுவோம் போற்றுவோம் நாளும் நற்றமிழையே !
31. கவிஞர் ஒளவை இரா. நிர்மலா, காரைக்கால்
பெண்கள் தாலியை எரிவதை மறந்து
ஆணும் தாலி அணிந்திடச் செய்வோம்!
32. மருத்துவர் கவிஞர் அருணா, மதுரை.
ஆன்றோர் வாக்கினிலே அசீர்வதிக்கப்பட்டாயே !
அப்துல் கலாம் வார்த்தைகளில் செதுக்கப்பட்டாய்.
33. கவிஞர் அருமன் பாரதி, கரூர்
மதிப்பால் குதித்த குழந்தை நிமிர்ந்து பார்க்கையில்
அப்போது அடிப்பது அதற்கு அம்மாவின் வாடையல்ல. வாசனை.
34. கவிஞர் சு. பாரதி பாக்கியம், தேனி
முடக்கிப் போட்டான் நின்னை
முகமூடியாய் வந்த ஆங்கிலத்தால்
35. கவிஞர் கருவை வேணு, கரூர்
பாதகச் செயல் செய்துவிட்டு
பார்க்காதது போல் இருப்பவர்களா.
36. கவிஞர் எஸ். சுப்பையா, தஞ்சாவூர்.
முப்பால் குடித்து வளர்ந்து மூவேந்தர் வழி நடந்து
மூப்பால் சற்று தளர்ந்து முகநூல் கண்ட தமிழே!
37. கவிஞர் கே.ஆர். மூர்த்தி, கண்டியூர்.
என்னை எனக்குள் அறிய வைத்து
என் நெஞ்சமெல்லாம் நீயாக வாழ்ந்து விட்டு
38. புலவர் ஜெ. சண்முகம், சீர்காழி
மொழி வளரச் சிலை மட்டும் போத தென்பேன்!
மழலையர்க்கு முதற்கல்வி தமிழே வேண்டும்.
39. கவிஞர். நா. சக்தி மைந்தன், நன்னிலம்
ஆள்வேன் இந்த உலகை அன்னை அவள் மீதாணை - அடடா
மாளவில்லை அவள் மாண்பு மகிமை அதை சொல்ல.
40. கவிஞர் தா.பி. சுந்தர், விளாங்குடி, மதுரை.
செம்மொழிக் கீடாகா மொழிகளை
செவி மடுத்தாலும் இனிமை பிறக்காது.
41. கவிஞர். இரா. இரவிச்சந்திரன், சென்னை.
மாசறுபொன்னே வலம்புரி முத்தே!
என சொன்னது சிலப்பதிகாரம்!
42. கவிஞர் செ. வெங்கடேசன், புதுச்சேரி
சாமி பெயரால் நடக்கும் சங்கதிகள் மறையட்டும்
சங்கடங்கள் தீர்ந்து சமத்துவம் பொங்கட்டும்.
43. கவிஞர் சிவராசா. செல்வகுமார், தஞ்சாவூர்.
பிரபஞ்சம் உள்ள வரை நீ...!
நீ உள்ளவரை நாங்கள்.
44. கவிஞர் மு. சடகோபன், சேரன்மாதேவி
உலகமெங்கும்! உலகத்தமிழனின் தாய்மொழியால்
ஊக்கம் தரும்! ஆக்க செயல்களின் உயிராய்!
45. கவிஞர் இரா. கிரிஜா சுந்தர், திருவனந்தபுரம்
தமிழ் என்றால் அமுது என்றறிவோம்!
தமிழ் என்றால் நம் உயிர் என்றுணர்வோம்.
46. கவிஞர் மு. வடிவேல், பழனி
கள்ளமில்லாத் தாய்மொழி தமிழை!
எல்லாத் திசையிலும் எழுதி வைப்போம்!
47. கவிஞர் பழனிவேல் சேலம்
கிளி மொழியே என் தமிழ் மொழியே!
உன் வாய் மொழியே இனிக்குதடி
48. கவிஞர் கி. வசந்தா காஞ்சிபுரம்
பொதிகையின் தென்றலானது தமிழ்!
கவிதையில் மின்னலானது தமிழ்!
49. கவிஞர் நீலமலை ஜே. பி. உதகைமலை
தமிழனே நீ பெற்றிருக்கிறாய் தலை நிமிரு உனக்குண்டு வரலாறு
இனி உனக்குள் வர வேண்டாம் ஒற்றுமையின்றி தகராறு.
50. கவிஞர் ஆ.ச. செல்வராசு, தேவனூர்
தனிமனிதனுக்குத் தேவை தன்மானம்
வெகுமானம் தந்திடுமே வரு(ம்) மானம்
51. இந்த நூலின் தொகுப்பாசிரியர் கவிதை,
தமிழன்னை மைந் தன் வே.த. யோகநாதன்
வேணும் தமிழா தாயக வேட்கையின் வெற்றியதைக்
காணும் நாள் வரத் தோள் கொடுக்க தமிழர்களை மாற்றிடம்மா?
பெரும்பாலான கவிஞர்கள் தாய்மொழி தமிழே என்ற பொது தலைப்பிலேயே எழுதி உள்ளனர். ஒரு சிலர் மட்டுமே வேறு தலைப்பில் எழுதி உள்ளனர். கவிஞர் அருமன் பாரதி எழுதிய ஒரே கவிதை இரண்டு முறை வந்துள்ளது. அடுத்தப் பதிப்பில் தவிர்த்திடுங்கள். முயற்சிக்கு ப் பாராட்டுக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக