.ஈழ ஏதிலியர் ஓர் அறைகூவல்! தொகுப்பாசிரியர்கள் : ஆ. குழந்தை, வா.மு.சே. ஆண்டவர் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

.ஈழ ஏதிலியர் ஓர் அறைகூவல்!



தொகுப்பாசிரியர்கள் : ஆ. குழந்தை, வா.மு.சே. ஆண்டவர்
நூல் விமர்சனம் : கவிஞர் இராரவி

சேதுச்செல்வி பதிப்பகம், பு.எண்-21, ப.எண்-26/2, நேரு நகர் முதன்மைச் சாலை, சாலிக்கிராமம், சென்னை-600 093. விலை ரூ.100,மின்னஞ்சல் : sethuandu@yahoo.co.in
*****
                இந்த நூல் படித்தவுடன் என் நினைவிற்கு வந்தது நான் எழுதிய ஹைக்கூ கவிதை!
            வீடு மாறிய போது
            உணர்ந்தேன்
            புலம் பெயர்ந்தோர் வலி !
      பேராசிரியர்கள், அறிஞர்கள், ஈழம் பற்றி நன்கு அறிந்தவர்களிடமிருந்து ஆய்வுக்கட்டுரைகள் பெற்று, தொகுப்பாசிரியர்கள் ஆ. குழந்தை, வா.மு.சே. ஆண்டவர் இருவரும் தொகுத்து உள்ளனர்.  நூலில் மொத்தம் 11 கட்டுரைகள் உள்ளன.  நூலின் முன்னுரையில் ஏதிலியர் என்றால் என்ன?  அவர்கள் படும் அல்லல்கள் யாவும் விளக்கமாக எழுதி உள்ளார்.  தலைப்புகளே உணர்த்தி விடுகிறது அவர்களின் துயரங்களை. அன்னியமாக்கப்பட்டோர், வறுமையில் வாடுவோர், வளர்ச்சியற்ற வாழ்வுடையோர், செயலிழக்கப்பட்டோர், முடிவெடுக்க முடியாதோர், ஆளுமை அழிக்கப்பட்டோர் - அகதிகள் என்ற சொல் பலரால் அறியப்பட்ட சொல். ஏதிலியர் என்ற சொல் சிலரால் மட்டும் அறியப்பட்ட சொல்.
      சொந்த நாட்டில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரே காரணத்திற்காக தமிழினப்படுகொலை செய்து எஞ்சியோரை ஏதிலியராக விரட்டியடிக்கப்பட்டனர்.  அவர்கள் இன்று உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழ்கின்றனர்.  புலம் பெயர்ந்த வலி மிக்க வாழ்க்கையிலும் தமிழை மறக்காமல் தமிழுக்குத் தொண்டு செய்து வருகிறார்கள்.   இலங்கையில் தமிழினப்படுகொலை நடந்த போது பலரும் அதைத் தடுக்க குரல் கொடுத்த போதும் அய். நா. மன்றம் அன்று கண்டு கொள்ளாமலே இருந்தது.
      ஈழத் தமிழர் வரலாறு என்ற தலைப்பில் தொகுப்பாசிரியர் பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர் எழுதியுள்ள கட்டுரை மிகச் சிறந்த ஆய்வுக்கட்டுரை.  ஈழமும் தமிழகமும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலப்பகுதியாகத்-தான் இருந்தன என்பதை சான்றுகளுடன் நிறுவி உள்ளார்.  புத்தமதம் தமிழகத்தின் வழியாகத்தான் இலங்கைக்கு பரவியது.  நாகப்பட்டினம் வழியாகத்தான் புத்தம் இலங்கைக்கு சென்றது. இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்கள்.  புத்தம் கடைபிடிக்கும் சிங்களர் இலங்கையில் வந்தேறிகள், குடி அமர்ந்தவர்கள்.  இடத்தைக் கொடுக்க மடத்தைப் பிடித்த கதையாகி விட்டது சிங்களர் கதை.  இந்த நூலில் உள்ள கட்டுரைகளை படிக்கப் படிக்க உள்ளம் கொதிக்கின்றது.  இந்த நிலை தமிழினம் தவிர வேறு இனத்திற்கு வந்து இருந்தால் உலகம் வேடிக்கை பார்த்து இருக்காது.  உலகில் தமிழினம் தான் நாதியற்ற இனமாகி விட்டது என்ற பல எண்ணங்களை உருவாக்கியது இந்நூல்.
            1976 முதல் 1998 வரை கண்ணீரும் இரத்தமும் கலந்த மிகத் துயரமான காலக்கட்டம்.  சிங்கள பேரின வாதத்தை உயர்த்திப் பிடிக்கின்ற ஜெ.ஆர். ஜெயவர்த்தனே கொடுங்கோன்மை செயல்பாடுகள் போராளிகள் ஆயுதம் ஏந்திய அமைப்பு வழி போராடவும் காரணமாயின. 

 ஈவிரக்கமற்ற 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலையினால் இலட்சக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்தனர்.  இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட உண்மை அறியும் குழு ஒரு இலட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக தகவல் கூறுகிறது.  ஆனால் இப்போரினால் நான்கு இலட்சத்து இருபதாயிரம் தமிழ் மக்கள் பட்டினியால் கிடந்து மிகப்பெரும்  துயரங்களுக்கு உள்ளாகினர்.  ஒட்டுமொத்த தமிழர்களையும் விடுதலைப் புலிகளாக எண்ணி கொலை செய்கிற செயல் நடந்தேறியது. 

2013 வரை முகாம்களில் 19622 குடும்பங்களில் 66509 ஏதிலிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  அவர்ககளின்  அவலங்கள் ,பல ஏதிலிகளின் துயர வரலாறும் பண்பாடும் தணித்து எழுதப்படவேண்டியவை.
      நூலில் உள்ள கட்டுரைகளில் மறுக்கமுடியாத புள்ளி விபரங்களுடன் உண்மையை உரக்கப்பதிவு செய்துள்ளனர்.  பதச்சோறாக நூலில் இருந்த சிலவற்றை மட்டும் பதிவு செய்துள்ளேன்.  இலங்கையின் கொடிய சிங்கள இராணுவத்தோடு இந்தியா உள்பட பல நாடுகள் சேர்ந்து கோரத்தாண்டவம் நடத்தி விட்டு இன்று வாய் கூசாமல் ஈழத்தமிழர்களுக்கு நன்மைகள் செய்தோம் என்று பேசி வருகின்றனர்.
      ஈழக்கவிஞர் நடிகர் திரு. ஜெயபாலன் கவிதை ஒன்று போதும் ஈழ ஏதிலியரின் துயர வாழ்க்கையை சுட்டிக்காட்ட,
      “யாழ் நகரில் என் பையன், 
கொழும்பில் என் பெண்டாட்டி,
      வன்னியில் என் தந்தை, 
தள்ளாத வயதில் தமிழ்நாட்டில் என் அம்மா,  
  சுற்றம் பிராங்க்போர்ட்டில், 
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்   
நானோ அலஸ்கா நாட்டில் 
வழி தவறி வந்து விட்ட ஒட்டகம்
      போல ஓஸ்லோவில்
      இது கவிதை அல்ல.  ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை.  உறவுகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் பிரிந்து வாழும் அவலம்.  இந்தக் கவிதையை திரு. த.நா. சந்திரசேகரன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார்.
      தொகுப்பாசிரியர்களில் ஒருவரான திரு. குழந்தை அவர்கள் மொழியால் சிதைந்த ஏதிலியர் என்ற தலைப்பில் அருமையான கட்டுரை வடித்து உள்ளார்.
      மொழியின் சிறப்பை, முக்கியத்துவத்தை மேன்மையாக நன்கு விளக்கி உள்ளார். தமிழ் பேசியதற்காக, தமிழராக வாழ்ந்ததற்காகவே ஈழத்தில் திட்டமிட்டு தமிழினப் படுகொலை நடத்தப்பட்டது. எஞ்சிய சிலரும் வெளியேற்றப்பட்ட அவலத்தை கட்டுரை உண்ர்த்துகின்றது.
வேதனை மொழி
     " ஈழ ஏதிலியர் தங்களுடைய தாய்நாட்டை விட்டு விரும்பி வெளியேறவில்லை.  கட்டாயத்தின் பேரில் வலுக்கட்டாயமாக பிடுங்கி எறியப்பட்டார்கள்.  அதனால் ஏன் எங்களுக்கு கடவுள் இவ்வாறு செய்தார்? என்றும் என்ன தவறு செய்தோம்? என்றும் வினாக்களை எழுப்புகிறார்கள்."
      ஈழத்தமிழர்கள் கடவுள் பக்தி உள்ளவர்கள்.  இலங்கையில் மட்டுமல்ல சென்ற நாடெல்லாம் ஆலயங்கள் கட்டி கடவுளை வணங்கி வருபவர்கள்.  அவர்கள் வணங்கும் எந்தக் கடவுளும் அவர்களை காப்பாற்றவில்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.  ஈழப்படுகொலைக்குப் பிறகு கடவுள் நம்பிக்கை எனக்கு சுத்தமாக அற்றுப் போனது.  அய் .நா .மன்றமும் அவர்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

நூலின் அட்டைப்படம் உண்மை புகைப்படம் .இலங்கை சிங்கள இராணுவம் ஆலயம் ,மருத்துமனை என்று பாராமல் வேனில் இருந்து குண்டு மழை பொழிந்தார்கள் .சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு வீசி கொன்ற அவலம் உலகில் வேறு எங்கும் நடந்தது இல்லை .முதியவர்கள் ,பெண்கள் ,குழந்தைகள் என்று பாராமல் கொன்று குவித்தனர் .காயப் படுத்தினர் .இவ்வளவு கொடூரம் நிகழ்த்திய கொடூரன் யோக்கியன் போல உலக வலம் வருகிறான் .இவனை ஆதரித்து சில நாடுகள் வாக்களிப்பது வேதனை

 உலகத்தில் இதுவரை எங்கும் நடக்காத அளவிற்கு இலங்கையில் நடந்த கொடூரத்தை நெஞ்சில் உரத்துடன், நேர்மை திறத்துடன் பதிவு செய்த நூல்.  இதுவரை இப்படி ஒரு நூல் வரவில்லை. மனிதநேய ஆர்வலர்களின் அறச்சீற்றம் தான் இந்த நூல்.    இலங்கையில் நடந்த கொடூரத்திற்கு காரணமான கொடூரன் தண்டிக்கப்பட வேண்டும். ஈழத்தமிழர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும்.  இவை நடக்க இந்த நூல் உதவும்.
*****








கருத்துகள்