'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : முது முனைவர் வெ .இறையன்பு இ ஆ ..ப .

'ஆயிரம் ஹைக்கூ'  

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
அணிந்துரை : முது முனைவர் வெ .இறையன்பு இ ஆ ..ப .



------------------------------------------------------------------------------------------
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com 184 பக்கங்கள் விலை ரூபாய் 100.
      இதயத்தில் சிந்தனையோட்டத்தை ஏற்படுத்தும் கவிதைகள் !
*****
      எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பவர் இரா. இரவி.  அவரிடம் எந்தப் பணியைக் கொடுத்தாலும் அதை உடனே செய்து முடிக்கும் தகைமை பெற்றவர்.  அவரை நாங்கள் 'புலிப்பால் இரவி' என்று அழைப்பதுண்டு. சமூக அக்கறையும் தாய்மொழிப்பற்றும் நிரம்பப் பெற்றவர்.  பகுத்தறிவுவாதி.  ஹைக்கூ என்னும் வடிவத்தைக் கொண்டு பல விதங்களில் பங்களிப்பைச் செலுத்தி வருகிறார்.
       அவருடைய 'ஆயிரம் ஹைக்கூ' என்கிற நூல் பலவிதமான காலங்களில் இருக்கும் நுட்பங்களை வகுத்துத் தந்திருக்கிறது.  அந்நிய மொழியின் மோகம் அதிகம் நிரம்பப் பெற்றவனும் அடிபடுகிறபோது 'அம்மா' என்றே அலறுகிறான்.  காரணம் தாய்மொழி ஆழ்மனத்திலிருந்து வருகிறது.  ஆங்கிலம் மேல் மனத்திலிருந்து முளைக்கிறது.  அதை இரவி அழகாக சுட்டிக் காட்டுகிறார்.

       தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
'அம்மா' !

அதைப் போலவே சிலேடையாக எதார்த்தங்களை அவருடைய கவிதை சுட்டிக் காட்டுகிறது.

காசு கரியானது தீபாவளி
கரி காசானது
நெய்வேலி !

சுற்றுலாவைப் பற்றி அத்துறையில் அமிழ்ந்து பணியாற்றும் இரவியின் ஹைக்கூ.  இதில் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.  சுற்றுலா என்பது வெறும் பொழுதுபோக்கல்ல. அது பலதரப்பட்ட மக்களைச் சந்திக்கும் அறிய வாய்ப்பு.  நம்மிடம் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் உயரிய அனுபவம்.  அதிக நாடுகள் பயனப்பட்டவன் முதிர்ச்சி அடைகிறான்.  பட்டறிவால் பக்குவப்படுத்திக் கொள்கிறான்.  தொடர்ந்து கற்கிறான்.  உலக மனிதர்கள் அனைவரும் நம்மைப் போன்றவர்கள் என்கிற பரந்த மனப்பான்மையைப் பற்று வைக்கிறான்.

முட்டாளை அறிவாளியாக்கும்
அறிவாளியை மேதையக்கும்
சுற்றுலா !

குற்ற உணர்வுள்ளவர்கள் தங்கள் பாவத்திற்குப் பரிகாரம் தேட கோயில்களுக்குத் திருப்பணி செய்வதையும், உண்டியல்களில் திருட்டுத்தனமாகச் சேர்த்த பணத்தைப் போட்டு கடவுளையும் பங்குதாரராகச் சேர்ப்பதையும் இரவி நையாண்டி செய்கிறார்.

கறுப்புப் பணம்
வெள்ளையானது
உண்டியல் வசூல் !

வீடு மாறும்போதே எதையோ இழந்தது போன்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது.  பழகிய வீட்டை விட்டுப் பிரிகிற போது நமக்குள் உள்ள எதோ ஒன்று கொஞ்சம் இழந்து போவதைப் போன்ற எண்ணம் ஏற்படுகிறது.  அந்த அனுபவத்தைப் புலம் பெயர்ந்தோருடைய வலியோடு ஒப்பிட்டு இரவி நமக்கு உணர்த்துகிறார்.

வீடு மாறிய போது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி !

தூக்குத் தண்டனைக்கு எதிராக இரவியின் பார்வை ஆழமாகப் பதிகிறது. அவை பற்றிய கருத்துக்கள் பல்வேறாக இருப்பினும் அவருடைய பார்வை சிந்திக்கத்தக்கதாக இருப்பது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஒரு சிந்தனையைத் தூண்டுவது  தான் ஒரு நல்ல கவிதையின் வேலை.

கொலை செய்தவனை
கொலை செய்தது அரசு
தூக்குத்தண்டனை !

இயற்கை குறித்த இரவியின் பார்வைகளும் நேசிப்புக்குரியன.  பனித்துளிக்காகவும் அவருடைய நெஞ்சம் பரிதாபப்படுகிறது.

விடிய விடியத் தவம்
விடிந்ததும் மரணம்
மலரில் பனித்துளி !

அவருடைய கவிதைகள் தத்துவை பார்வையையும் உள்ளடக்கியதாக மலர்ந்திருக்கின்றன. இயற்கையின்  எல்லா பிரிவுகளும்  ஐக்கியத்தை அடையாளப்படுத்துவனவாக இருக்கின்றன.  இலைகள் மரத்தின் பாதத்திலேயே விழுந்து அது செழிக்க உரமாகி உதவுகின்றன.

மரத்திற்கு
உரமானது
உதிர்ந்த இலை !

மென்மையான உணர்வுகளும் இரவியின் குரும்பாக்களில் தெறிக்கின்றன.  காதலைப் பற்றியும் அவர் கணிசமான கவிதைகளை எழுதித் தள்ளுகிறார்.

புவிஈர்ப்புச் சக்தியை
விஞ்சிடும் அவள்
விழிஈர்ப்புச் சக்தி !

வாழைஇலையில் உண்பது உணவின் சுவையை அதிகப்படுத்துகிறது.  இயற்கை பாழ்படாத சுற்றுச்சூழலுக்கு உகந்த தட்டாய் இருப்பது வாழையிலை.  தண்ணீரின் தேவையையும் குறைக்கிறது. மக்கி மண்ணுக்கு எருவாகவும் மாறுகிறது.  வாழைஇலையைப் பற்றி இரவி எழுதியிருக்கிறார்.

கூடியது  சுவை
இலையில்  இட்ட
உணவு !

இரவியின் பேனா மையை மட்டுமல்ல.  கோபத்தையும் சில இடங்களில் கக்கியிருக்கிறது.

கட்டைவிரல் கேட்ட
நாக்கை வெட்டினான்
நவீன ஏகலைவன் !

கவிதை நூல் முழுவதும் சமூக அக்கறையும் சகோதரத்துவமும், எளியவர்களுக்கான குரலும் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.  இந்த நூல் அனைவராலும் வாசிக்கப்படும்.  அவர்கள் இதயத்தில் மிகப் பெரிய சிந்தனையோட்டத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.  கவிஞர் இரா. இரவிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !





கருத்துகள்