கதவு இல்லாத கருவூலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

கதவு இல்லாத கருவூலம் !


நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மணிவாசகர் பதிப்பகம் ,31. சிங்கர் தெரு ,பாரிமுனை ,சென்னை 600108.தொலைபேசி 044.25361039.விலை  ரூபாய் 60


திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்களை மலிவு விலையில் பதிப்பித்து முத்திரைப் பதித்த பதிப்புச் செம்மல் ச .மெய்யப்பன் வழியில் 'புலிக்குப் பிறந்தது பூனையாகாது ' என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் அவரது புதல்வர் திரு ச. மெ.மீனாட்சி சோமசுந்தரம் அவர்களும் பதிப்புலகில் தனி முத்திரைப் பதித்து வருகிறார்கள். பாராட்டுக்கள் .இன்றைய இலக்கியமான புதுக் கவிதைக்கும் உரம் சேர்க்கும் விதமாக இலண்டன் மாநகரில் கல்லூரியில்  உதவி முதல்வராகப் பணி புரிந்துகொண்டே கவிதைப்பணி, இலக்கிப்பணி செய்து வரும்  கவிஞர் புதுயுகன் அவர்களின் கதவு இல்லாத கருவூலம் என்ற இந்த நூலை பொருத்தமான ஓவியங்களுடன் மிக நேர்த்தியாக அச்சிட்டு உள்ளனர் .பாராட்டுக்கள் .

நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் அவர்களைப் பற்றி கவிதை உறவு இதழில் தமிழ்த் தேனீ  இரா .மோகன் அவர்கள் எழுதிய மிகச் சிறப்பான அறிமுகக் கட்டுரை படித்தபோதே இவரது கவிதைகள் கண்டு வியந்தேன்.இவரைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது .தமிழ்த் தேனீ  இரா .மோகன் ,தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் இருவரும் இணைந்து எழுதியுள்ள சிற்பியின் படைப்புலகம் நூலிற்கு எழுத்து இணையத்தில் நான் எழுதிய விமர்சனம் படித்து விட்டு என்னைத் தொடர்புகொண்டு பாராட்டி விட்டு  மதுரையில் உள்ள அவரது  நண்பர் முருகன் மூலம் அவரது நூல்களை அனுப்பி வைத்தார் .படித்து விட்டு விமர்சனம் எழுதி உள்ளேன் .இலண்டன் உள்ள அவரை மதுரையில் உள்ள என்னோடு இணைத்த எழுத்து இணையத்திற்கும் .தமிழ்த் தேனீ இரா .மோகன்  அவர்களுக்கும் , கவிதை உறவு இதழ் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியாருக்கும், நன்றி .

 "பெயர் சொன்னாலே போதும் தரம் எளிதில் விளங்கும்". என்று விளம்பர வாசகம் ஒன்று உண்டு .இந்த நூலில் அணிந்துரை வழங்கி உள்ளவர்களின் பெயர் சொன்னாலே போதும் கவிதையின் தரம் நன்கு வழங்கும் .இந்த நூலில் அணிந்துரை வழங்கி உள்ளவர்கள் கவிஞர் வைர முத்து , கவிஞர் சிற்பி ,கலைமாமணி சாரதா நம்பி ஆரூரன் மூவரின் முதாய்ப்பான அணிந்துரை .நூல் என்னும்  மகுடத்தில் பதித்த வைரக்கற்களாக மிளிர்கின்றன .  

 கவிதை எழுதுவது என்பது சிற்பம் வடிப்பது போன்றது .தேர்ந்தெடுத்த சொற்கள் எனும் கல் கொண்டு மிக நுட்பமாக  சிற்பி சிலை வடிக்கும் கவனத்துடன்   தேவையற்ற பகுதிகள் நீக்கிட கிடைக்கும் அழகிய சிலை போன்ற நல்ல கவிதை . நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் பேராசிரியர் என்பதால் சிற்பியின் கவனத்துடன் கவிதை வடித்துள்ளார். அதனால்தான் கவிஞர் சிற்பி அணிந்துரை தந்துள்ளார். கவிஞர் சிற்பி அவர்களைப் பற்றி அறிவேன் .எளிதில் யாரையும் பாராட்ட மாட்டார்கள் . கவிஞர் புதுயுகன் கவிதைகள் நன்றாக இருப்பதால் பாராட்டி உள்ளார்கள் .

தமிழ் செம்மொழி என்று பாவாணர் வழியில் குரல் தந்த பரிதிமாற் கலைஞர் அவர்களுக்கு நூலை காணிக்கை ஆக்கி இருப்பது நூல் ஆசிரியரின் தமிழ்ப் பற்றை பறை சாற்றுகின்றது .  36 தலைப்புகளில் கவிதைகள் உள்ளன .புதுக் கவிதையின் தாத்தா மேத்தா அவர்களின் கண்ணீர் பூக்கள் விறபனையில் சாதனை படைத்தது .அவரை நினைவூட்டும் விதமாக புதுக்கவிதைகள் படைத்துள்ளார். பாராட்டுக்கள் .மிக வித்தியாசமாக தனி நடையில் கவிதை வடித்துள்ளார் .படித்தவுடன் மறப்பதல்ல கவிதை .படித்தவுடன் மனதில் பதிவதே  கவிதை .இந்த இலக்கணத்தில் நூல் முழுவதும் கவிதைகள் உள்ளன .கவிதைகள் யாவும் சிறப்பாக இருந்தாலும் 
பதச்சோறாக சில மட்டும் உன்கள் பார்வைக்கு .

முதல் கவிதையிலேயே முத்திரைப் பதித்து உள்ளார் .

சூரிய புத்திரன் !

அலையாய் ஆர்ப்பரிததவன்
ஆழ்கடலாய் அடங்கி விட்டேன் !

மலையோடு மல்யுத்தம் செய்தவன் 
மழைத் துளிகளை எண்ணுகிறேன் !  

புயலையும்  தென்றலாக்கும் ஆற்றல் காதலிக்கு உண்டு என்பதை உணர்த்தும் கவிதை நன்று .

மனிதாபிமானமுள்ள எந்த ஒரு படைப்பாளியும் ஈழக்கொடுமை கண்டு கொதித்து கவிதை எழுதாமல் இருக்க முடியாது .அப்படி  எதுவும் எழுத வில்லை என்றால் மனிதாபிமானம் இல்லாதவர்கள் என்றே அர்த்தம் கொள்ளலாம் .கவிஞர் புதுயுகன் ஈழக்கொடுமை குறித்து கவிதை வடித்துள்ளார் .

உலகின் ஊனம் !

இலங்கையில் 
போர்க் கொலைகள் இனக் கொலைகள்
எங்கள் கண்களைக் கிழித்தன
பின்னர் கண்கள் ஊனமடைந்தன !

உலகின் மௌனத்தைத்  தட்டிக்கேட்கும் கவிதை நன்று . 

ஒரு குடிசையின் தாலாட்டு கவிதையை கிராமிய மொழயில் பண்பாடு எழுதி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் இலண்டனில் வசித்தபோதும் தமிழக மண்  மணம் மாறாமல் இருக்கிறார் என்பதை பறை சாற்றும் கவிதை நன்று .

ஒரு குடிசையின் தாலாட்டு !

ஒத்தப்புள்ள செல்லமினு
ஓடிச்சேர்க்கும் ஒலகில 

சொத்துபத்து அத்தனையும்
சேர்த்துத் தந்தேன்   பாலுல 

என்ன செய்ய கை நீட்டி 
எங்கும் கேட்க மனசில்ல 

தன்மானம்தான் உனக்கு 
அலங்காரம் என் மகளே ! 

தமிழ்க் காற்றின்  கதை கவிதையில் தமிழ்ச் சாதனையாளர்களின்  பெயரைப் பட்டியலிட்டு  நன்கு எழுதி உள்ளார் . 'தமிழன் என்று  சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ' என்று பாடிய  நாமக்கல் கவிஞரின் வைர வரிகளை நினைவூட்டி வெற்றி பெறும் கவிதை நன்று

கவிஞனுக்கு தன்னம்பிக்கை இருக்கலாம் ஆனால் கர்வம்  இருக்கக் கூடாது .என் கவிதையே சிறந்த கவிதை என்று கர்வும் கொள்ளும் கவிஞன் தலையில் கொட்டும் வண்ணம் ஒரு கவிதை இதோ .

உலகின் சிறந்த கவிதைகள் !

பூமி நாயகனின் சிகையாய்
புள் படர்ந்த பிரதேசம் 

இளங்காலைப் பொழுது 
இலவம் பஞ்சுத் தடவலாய் 

மழலைத் தென்றல் 
மஞ்சள் வெப்பமாய் 

சூரியச் சால்வை !

இயற்கை எனும் இனிய கவிதைகளை ரசிக்கக் கற்றுத் தரும் கவிதை நன்று .

பார்த்தாலே பிரமிப்பை வழங்கும் நயாகரா பற்றிய கவிதை மிக நன்று நயாகரா !

இமயம் நீரிலும் அமையும் 
அது நயாகரா !

இது கண்டம் விட்டு கண்டம் தாண்டி 
மூச்சிரைக்கும் நைல் !

இது தேன்நிலவுகளின் தலை நகரம் 
யெவனப் பழமை !

மண்ணில் வழிந்த வானம் 
யார் இந்தப் பேரழகி ? 

இப்படி வித்தியாசமான கவிதைகள் எழுதி நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் அவர்கள்வெற்றி பெற்றுள்ளார் .பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் 

.

கருத்துகள்

  1. இன்றைய பகிர்வில் சில பகுதிகள் உங்கள் தளத்திற்கும் உதவக் கூடும்... முக்கியமாக கீழ் உள்ள தலைப்பு :

    2. வாசகர்களை மனிதனாக நினைத்து, Word Verification-யை நீக்க...!

    4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!

    6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

    இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

    நன்றி...

    பதிலளிநீக்கு
  2. நூல் விமர்சனம் முழுமையாகவும் அருமையாகவும் இருந்தது. பதிப்பாளரிடம் தொடங்கி, வாழ்த்துகள் தொட்டு கவிதை வரிகள் ஊடாக தவழ்ந்து சென்று நெஞ்சில் அமர்ந்தது.
    புதுக்கவிதைத் தாத்தா மேத்தாவை, அவர்தம் 'கண்ணீர் பூக்களையும்' இணைத்து நினைவு படுத்தியதும் சிந்திக்க வைத்தது.
    மிக்க நன்றி.

    சிநேகமாய்
    புதுயுகன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக