இதுவரை ... நூல் ஆசிரியர் ஆர் .என் .லோகேந்திரலிங்கம் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

இதுவரை ...

நூல் ஆசிரியர்  ஆர் .என் .லோகேந்திரலிங்கம் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வெளியிட்டோர்  கனடா உதயன் பத்திரிக்கை !

உலகில் தமிழர்கள் இல்லாத நாடே இல்லை .உலக நாடுகள் முழுவதும் தமிழர்கள் வாழ்கின்றனர் .அதிலும் குறிப்பாக ஈழத்தமிழர்கள் இல்லாத நாடே இல்லை .ஈழத்தில் நடந்த இனப் படுகொலை காரணமாக பலரும் புலம் பெயர்ந்தனர் .அப்படி புலம் பெயர்ந்ததில் கனடாவில் 
ஈழத்தமிழர்கள் இலட்சக்கணக்கில் வாழ்கின்றனர் .புலம்  பெயர்ந்த வலி மிகுந்த வாழ்விலும் தமிழை மறக்காமல் தமிழ்த் தொண்டு செய்து வருகின்றனர் .கனடா என்றதும் என் நினைவிற்கு வருபவர் இனிய நண்பர்  www.tamilauthors.com ஆசிரியர் அகில் தான் .ஈழத் தமிழர்களின் உழைப்பால்தான் இன்று உலக அளவில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக உலகின் முதல் மொழியான தமிழ் மொழிக்கு அதிக இணையம் உள்ளது .தமிழ் இனி என்றும் அழியாத வண்ணம் ஆவணமாகி வருகின்றது . 

கனடா  நாட்டில் விளம்பரங்களுடன் இலவசமாக வழங்கிடும் உதயன் வார இதழின் ஆசிரியர்  ஆர் .என் .லோகேந்திரலிங்கம் அவர்கள் எழுதிய தலையங்கத்தின் தொகுப்பே இந்நூல் .இந்த நூல் வெளியீட்டு விழா நகைச்சுவை மன்னர் இளசை சுந்தரம் ஏற்பாட்டில் நடந்தது. விழாவிற்கு சென்று நூல் வாங்கி வந்தேன் .


இதுவரை ஈழத்தில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பாக உள்ளது .இந்த நூல் ஈழத்தில்  நடந்த இனப் படுகொலைகளை எடுத்து இயம்பிடும் ஆவணமாக உள்ளது . வரலாற்று ஆவணமாக உள்ளது .மிக நுட்பமாக வந்துள்ளது . தலையங்கம் எழுதிய தேதிகளுடன் கட்டுரைகள் பிரசுரம் ஆகி உள்ளன .5.3.2004 அன்று தொடங்கி 5.7.2013 வரையில் முக்கியமான தலையங்களின் தொகுப்பு .  கதிரோட்டம் என்று தலைப்பிட்டு உதயன் இதழ் பிரதம ஆசிரியர் ஆர் .என் .லோகேந்திரலிங்கம் தனது எண்ண ஓட்டத்தை மனிதாபிமான முறையில் துணிவுடன் பதிவுசெய்துள்ளார் .
 
இந்த நூலிற்கு உலகத்தமிழர் உள்ளங்களில் இடம் பெற்றுள்ள அய்யா பழ .நெடுமாறன் அவர்களின் அணிந்துரையும் ,திரு பொ.கனகசபாபதி   அவர்களின் அணிந்துரையும் மிக நன்று .கவிதை உறவு மாத இதழின் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் அவர்களின் வாழ்த்துரையும் முத்தாய்ப்பாக உள்ளது .இனி நூலில் இருந்து சில துளிகள் .

2.1.2009 அன்று எழுதிய கதிரோட்டதின் தலைப்பே ஈழத் தமிழரின் பாதுகாவலராக இருந்தவர்களின் விபரம் பறை சாற்றும் விதமாக உள்ளது .

  "விடுதலைப் புலிகளின் இருப்பே புலம் பெயர்ந்த தமிழர்களின் விருப்பு .அதுவே உலகத் தமிழர்களுக்கு சிறப்பு ."  ஈழத்தமிழ் மக்கள் சிங்கள பேரினவாத அரசுகளினால் அடக்கப்பட்டும் உரிமைகள் மறுக்கப்பட்டும் அவமானப் படுத்தப்படுகிறார்கள் என்ற காரணத்தால் ஆயுதம் ஏந்திப் போராட புறப்பட்டவர்களே  தமிழீழ விடுதலைப் போராளிகள் கொடுமையான போராட்டத்தின் மத்தியிலும் ,தமது மக்களின் கலை மற்றும் கல்வி சார்ந்த விடயங்களுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் எவ்வளவு முன்னுரிமை கொடுத்துள்ளது. என்பதையும் கொடுமையான போராட்ட காலத்திலும் எத்தனை நல்ல இலக்கியங்களும் ,நல்ல திரைப்படங்களும் ,கலைப் படைப்புகளும் அந்த மண்ணிலிருந்து வெளிவந்துள்ளன என்பதையும் அவர்கள் கவனித்து வருகின்றனர் ".  

உடலுக்கு தீ வைத்து உலகின்  கவனத்தை ஈழத்தின் பால் ஈர்த்த தியாகி முத்துக்குமார் பற்றிய பதிவு 30.1.2009 உதயன் இதழில் பதிவாகி நூலில் இடம் பெற்றுள்ளது .

சிங்கள இன வெறி பிடித்த மிருகமான இலங்கை அதிபர் பற்றிய  ஈன குணங்கள் நூலில் உள்ளது .தலைப்புகளே உணர்த்துகின்றன .

அகிலமே அதிர்ந்து நின்றாலும் !
அடங்காத கொலை வெறியுடன் மகிந்த என்னும் பேய் ! 

தமிழ் இனப் படுகொகொலைகள்  புரிந்த கொடூரன் 
அய். நா .மன்றத்தால் உடன் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் என்பதே உலகத் தமிழர்கள் அனைவரின் விருப்பமாக உள்ளது .அல்லல் படும் ஈழத்தமிழர்களுக்கு தனி ஈழம் ஒன்றுதான் தீர்வு என்பதை உலகமும் உணர்ந்து விட்டது .

இந்த நூலில் ஈழத்தில் நடந்த மனிதாபிமானமற்றபடுகொலைகளுக்கான  
கண்டனத்தை உரக்க துணிவுடன் பதிவு செய்துள்ளார் .தமிழக அரசியல் தலைவர் செய்த துரோகத்தையும் தோலுரித்துக் காட்டி உள்ளார் . படித்து முடித்தவுடன் நெஞ்சம் கனக்கின்றது .

இலங்கையில் தமிழினப் படுகொலைகள் நடக்கின்றது என்று தெரிந்தும் உலகம் கண் மூடி இருந்த அவலத்தை சூட்டிக் காட்டி உள்ளார் .நூல் ஆசிரியர் ஆர் .என் .லோகேந்திரலிங்கம் அவர்கள் நெஞ்சில் உரத்துடன், நேர்மை திறத்துடன் எழுதி உள்ளார் .ஒரு பத்திரிகை ஆசிரியரின் கடமையை செவ்வன செய்துள்ளார் .பாராட்டுக்கள் .

19.10.12  அன்று எழுதிய தலையங்கம் !

 " யாருமே கவனிப்பாரற்ற நிலையில் சிறைகளில் வாடும் தமிழ் பேசும் உறவுகள் ." 17 வயதில் சந்தேகத்தின் பேரில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட சில இளைஞர்களுக்கு தற்போது 35 வயது ஆகின்றது. சிறையில் தங்கள் இதுவரையில் கழித்துள்ள 17 வருடங்களில் தங்கள் வாழ்வின் பல வாய்ப்புகளையும் , சுகங்களையும் அவர்கள் இழந்து விட்டார்கள் . இப்படி பல தகவல் நூலில் உள்ளன .இந்த நிகழ்வை படித்தபோது குற்றம் செய்யாத குற்றமற்ற பேரறிவாளன் சிறையில் வாழ்நாளைக் கழித்த நிகழ்வும் நினைவிற்கு வந்தது .சிங்கள இன வெறி பிடித்த சிங்கள அரசின் முகத்திரை கிழிக்கும் விதமாக நூல் வந்துள்ளது . 

உலகத் தமிழர்கள் யாவரும் படிக்க வேண்டிய நூல் .இனியும் தமிழினம் ஊமையாக இருக்கக்  கூடாது .உரக்கக் குரல் எழுப்புவோம் .ஈழத்தில் தனி ஈழம் மலர வேண்டும் .ஈழத் தமிழர் விடுதலைக்காற்றை சுவாசிக்க வேண்டும் .ஈழத் தமிழர் வாழ்வில் விடியல் விளைய வேண்டும் .இப்படி பல சிந்தனைகளை விதைக்கும் மிக நல்ல நூல். நூல் ஆசிரியர்  ஆர் .என் .லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

கருத்துகள்