உன் பேச்சு கா. . தல் ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

உன் பேச்சு   கா. . தல் !




நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் !  thabushankar@yahoo.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  !

விஜயா பதிப்பகம் 20 இராஜ வீதி ,கோவை .1 
விலை ரூபாய் 40. vijayapathippagam2007@gmail.com

நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்களின் காதல் கவிதை நூல்களை விஜயா பதிப்பகம் தொடர்ந்து தரமாக வண்ண வண்ண புகைப்படங்களுடன் பதிப்பித்து வருகின்றனர்  .நூல்களின் விற்பனையின்  காரணமாக அடுத்த பதிப்புகளும்  வந்து விடுகின்றன.

காதல் கவிதைகளால் காதலர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் காதல் கவிஞர் தபூ சங்கர் அவர்களின் கவிதைகளில் காதல் இருக்கும் .ஆனால் இந்த நூலின் தலைப்பிலேயே  காதல் இருப்பதால் , காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதி உள்ளார். பாராட்டுக்கள் .நூலின் முன்னுரையிலேயே படிக்கும் வாசகர்களின் மனத்தைக் கவர்ந்து விடுகிறார் .

." கண்களின் மேலிமையும் கீழிமையும்  ஒரு போதும் இனி பிரியாத காதலர்கள் .ஒரு நொடிக்குப் பலமுறை முத்தமிட்டுக் கொண்டே இருக்கும் .கண்கள் உறங்கினால் .விழிக்கும்  வரை இமைகள் கட்டிப் பிடித்தபடியே கிடக்கும் ."

கண்களையும் இமைகளையும் இந்த கோணத்தில் இதற்கு முன்பு யாரும்  இப்படிப்  பார்த்து இருக்க மாட்டார்கள் . நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்களின் பார்வை மிக வித்தியாசமான காதல் பார்வை .கண்களைக் கூட காதல்  கண்ணாடி அணிந்து பார்க்கின்றார். காதலி ஒரு கவிதை போல இருக்கிறார் என்பதை எப்படி எழுதுகிறார் பாருங்கள். காதல் கவிதை மட்டும் படிக்க வாசகர்களுக்கு சலிப்பே வருவதில்லை .

ஒரு 
கவிதைப் புத்தகத்தின் பக்கம் 
திருப்பபடுகிறது !
நீ 
கண்களை மூடித்
திறக்கும்போது !  
 
உலகமயம் , தாராளமயம் , புதிய பொருளாதாரம் என்ற பெயரில் வந்த மாற்றங்கள் தமிழர்களின் உடையில் , உணர்வில், பண்பாட்டில் மாற்றங்களை விளைவித்து விட்டன .இன்று பாவாடை தாவணி என்ற உடைகள்  வழக்கொழிந்து வருகின்றன .இருந்தாலும் கவிதையை ரசிக்கலாம் .
.
பாவாடை தாவணியில் 
நீ அழகுதான் 
அதைவிட அழகு 
அடிக்கடி அதை நீ 
சரிசெய்து கொள்ளும் அழகு !

தமிழ்ப் பண்பாடு சார்ந்த இந்த நிகழ்வை அசைபோடும் விதமாக உள்ளது கவிதை .

கவிதைக்கு பொய் அழகு உண்மை .காதல் கவிதைக்கு பொய் அழகோ அழகு என்பதை உணர்த்தும் கவிதை நன்று .

சூரியன் வரும்போது 
பூக்கள் மலரலாம் 
நீ வரும் போதுதான் 
மணம் வீசத் 
தொடங்குகின்றன !

எள்ளல் சுவையுடன் உள்ள காதல் கவிதை வித்தியாசமானது .

கரும்பு கடிக்கும்போது 
உதட்டில் காயமாகி விட்டது 
என்றாய் !
எல்லோரையும் 
எறும்புதான் கடிக்கும் 
உன்னைக் கரும்பு கடிக்கிறதா ?

" ஏணி வைத்தாலும் எட்டாது" கேள்விப் பட்டு இருக்கிறோம் .அந்த சொற்களை வைத்து சொல் விளையாட்டு விளையாடி உள்ளார். பாருங்கள் .காதலியை உயர்த்தி தன்னை மிகவும் தாழ்த்திக் கொள்ளும் விதமாகவும் எழுதி உள்ளார் .

அழகில் 
உனக்கும் எனக்கும்  
ஏணி வைத்தாலும் எட்டாது 
ஆனால் 
காதல் வைத்தால் எட்டும் !

கும்பாபிசேகம் என்ற வட சொல்லிற்கு நல்ல தமிழில்  குடமுழுக்கு என்றார்கள் .அந்த சொல்லை இவர் காதல் கவிதைக்கு பயன்படுத்தி உள்ளார் .பாருங்கள் .

ஆற்றில் 
நீ குடத்தை முக்கி 
தண்ணீர் எடுப்பதுதான் 
குடமுழுக்கு எனக்கு !

காதலியைக் கவர்ந்திட காதலன் எப்படி எல்லாம் கவிதை வடிக்கிறான் பாருங்கள் .காதலன் எழுதியது பொய் என்று தெரிந்தும் காதலி ரசிப்பதால்தான் காதல் கவிதைகள் வந்து கொண்டே இருக்கின்றன .
பொம்மையை நீ கொஞ்சாதே 
அதற்கு உயிர் வந்துவிட்டால் 
யார் வளர்ப்பது ?

ஹைக்கூ வடிவில் உள்ள கவிதை நன்று .
.
காதலியை வர்ணிப்பதில் காதலனுக்குக் கிடைக்கும் சுகம் சுவைதான் .
உனக்கு 
சீசன் எல்லாம் கிடையாதா ?
ஆண்டு முழுவதும் 
அழகைக் கொட்டும் 
அருவியா நீ .. 

எவ்வளவு பெரிய கூட்டம் இருந்தாலும் தலைவியின் முகம் தலைவனுக்கு நன்றாக தெரிந்து விடும் .அதனை உணர்த்திடும் கவிதை நன்று .

அப்போது 
நூறு பேர் மத்தியில் வந்தாலும் 
நீ தனியாகத் தெரிந்தாய் !

இப்போது  
ஆயிரம்  பேர் மத்தியில் வந்தாலும் 
நீ மட்டும் தான் தெரிகிறாய் ! 

நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .காதல் கவிதைகளில் முத்திரைப் பதித்து காதலர்கள் பரிசளித்துக் கொள்ளும் நூலின் ஆசிரியராக இருப்பதற்கு பாராட்டுக்கள் .


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்