சிறு துளியில் சிகரம் நூல் ஆசிரியர் : கவிக்கோமான் மன்னை பாசந்தி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. *****

சிறு துளியில் சிகரம் !

நூல் ஆசிரியர் :  கவிக்கோமான் மன்னை பாசந்தி !
      அணிந்துரை  :  கவிஞர் இரா. இரவி. !
*****       கவிஞர் மன்னை பாசந்தி அவர்களின் மூன்றாவது நூலான  சிறுதுளியில் சிகரம் முத்தாய்ப்பாக முத்திரைப் பதிக்கும் விதமாக  வந்துள்ளது. பாராட்டுக்கள். அலுவலகப் பணியோடு இலக்கியப்  பணியும் செய்து வரும் இனியவர். பாசந்தி என்று ஒரு இனிப்பு உண்டு.  இவரும் ஒரு இனிப்பான மனிதர். ஓய்வின்றி படைத்து வரும் படைப்பாளி. சிறுதுளி பெருவெள்ளம், கேள்விப்பட்டு இருக்கிறோம். சிறுதுளியில் சிகரம் வித்தியாசமாக உள்ளது. சிறுதுளியிலும் சிகரம்  உண்டு.   
       இயந்திரமயமான உலகில் இன்று நீண்ட நெடிய மரபுக்  கவிதைகள் படிக்க நேரமும் , பொறுமையும் இருப்பதில்லை. ஆனால்  ஹைக்கூ கவிதைகள் மூன்றே வரிகளில் இருப்பதால் ஆறிலிருந்து அறுபது வரை எல்லா வயதினரும் விரும்பிப் படிக்கிறார்கள். ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வருபவர். நூலாசிரியர் மன்னை பாசந்தி.  அவரது எல்லா ஹைக்கூ கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச்  சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு. 
       முதல்ஹைக்கூ  கவிதையிலேயே முத்திரை பதித்து விடுகிறார்.   காட்சிபடுத்தும் ஹைக்கூ மிக நன்று.
       குழந்தையின் பாதம்
       கலசத்தின் மேல்
       கோபுர நிழல்.     
உலக ரவுடியாகி விட்ட இலங்கை இராணுவம் தமிழினத்தை  கொன்று குவித்து கொடூரம் நிகழ்த்தி கோரத் தாண்டவம் ஆடியும்   இன்னும் திருந்தாமல் தமிழக மீனவர்களைத் தாக்குவது சுடுவது சிறைப்பிடிப்பது தொடர்கதையாகி வருகின்றது. தட்டிக்கேட்க நாதி  இல்லை. அதனை உணர்த்தும் ஹைக்கூ.
       பரிதவிப்பில்
       மீனவர்கள்
       இலங்கை  அட்டூழியம்!
       திரைஉலகில் முயற்சி செய்து வாய்ப்பு  கிடைக்காமல் சொந்த  ஊர் செல்ல முடிவெடுத்த பொது கவியரசு கண்ணதாசன் மயக்கமா? பாடல் கேட்டு முடிவை மாற்றி திரை உலகில் திரும்பவும் முயற்சித்து மூன்று தலைமுறைக்கும் பாடல் எழுதிய காவியக் கவிஞர் வாலி  பற்றிய ஹைக்கூ நன்று.
       வாலிபக் கவிஞன்
       வாலி தந்த வலி
       வாலியின் மரணம்.
இயற்கையைப் பாடுவதில் ஜப்பானியக் கவிஞர்களை விஞ்சும் வண்ணம் தமிழகக் கவிஞர்கள் படைத்து விடுகிறார்கள் என்பதற்கு சான்று கூறும் விதமான ஹைக்கூ.
      
மழையில்  நனையாத
       இரயில்  பூச்சி
       காத்தது  நாய்குடை.
இன்றைய இளைய தலைமுறையினை கவனத்தில் கொண்டு கடைபிடிக்க வேண்டிய கருத்து. வேகம் விவேகமன்று என்பதை  உணர்த்திடும் ஹைக்கூ நன்று.
       துரித பயணம்
       விரைவில் மரணம்
       வாகன விபத்து.
       பேராசையில் ஆட்டம் போடும் மனிதனைப் பார்த்து ஆடாதடா  ஆடாதடா மனிதா என எச்சரிக்கை செய்வது போல வாழ்வின்  நிலையாமையை உணர்த்தும் வண்ணம் சித்தர்களின் பாடல் போல  உள்ள ஹைக்கூ.
       மனித மரணம்
       நொடியில் சாம்பல்
       மின்சார தகனம்.  
காதல் எப்படி வருகிறது? எதனால் வருகிறது? யாருக்கும்  யாருக்கும் வருகிறது? திட்டமிட்டு வருவதல்ல காதல். எதிர்பாராமல்  நிகழும் விபத்து காதல்.. காதலைப் பாடாத கவிஞர் உண்டோ? இல்லை. நூலாசிரியர் மண்ணை பாசந்தி அவர்களும் காதலைப் பற்றிப் பாடி  உள்ளார் பாருங்கள்.
       எப்படித்தான் வருகிறது
       யூகிக்க முடியுமா
       காதல்.
       காதல் திருமணங்கள் புரிந்தவர்கள் மனமுறிவுக்கும் நீதிமன்றத்தில் வரிசையில் நிற்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இந்தநிலை மாற வேண்டும். காதலித்து கரம் பிடித்து துணையுடன் சண்டைகளின்றி வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று புத்தி சொல்லும்  விதமான ஹைக்கூ.
       முன்னர் இனித்தது
       பின்னர் கசந்தது
       காதலி மனைவியானதும்.     
சில மனிதர்கள் பணம் பணம் என்று அலைகிறார்கள். பணமும்  சேர்த்து விடுகிறார்கள். பணத்தோடு நோயும் சேர்ந்து விடுகின்றன. பிடித்த இனிப்பைக் கூட உண்ண முடியாத அளவிற்கு நோய்  மிகுதியாகி விடுகின்றது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்  என்பதை உணர்த்திடும் ஹைக்கூ.
       நோயே இல்லை
       வாழ்ந்தான் ஏழை
       கோடீஸ்வரனாக.
       பல சிந்தனைகளை விதைக்கும் விதமாக வாசகரை  நெறிப்படுத்தும் விதமாக பண்படுத்தும் விதமாக ஹைக்கூ  வடித்துள்ளார்.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்