ஹைக்கூ ( சென்றியு ​ ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ  ( சென்றியு ​ )  
கவிஞர் இரா .இரவி !

ரசிப்பவர்களும் உண்டு 
உண்பவர்களும் உண்டு 
ரோஜா !

ரசனையற்றவனுக்கு  
வெறும் சொற்கள்தான் 
கவிதை !

வண்ணம் மாறவில்லை 
மழையில் நனைந்தும்
மயிலிறகு !

வெண்மை மாறவில்லை 
தீயில் சுட்டும் 
சங்கு !

தாத்தாவோடு சேர்ந்து 
ஓய்வெடுத்தது 
குடை !

மணமான அடையாளம் 
ஆண்களுக்கும் வேண்டும் 
அணியுங்கள்  மெட்டி !  

தோற்றது வாள்
எழுதுகோலிடம்  
ஆட்சி மாற்றம் !

எங்கும் இல்லை 
முற்றும் துறந்த 
முனிவர் !

இறந்தபின்னும் 
உதவியது கன்று 
பால் கரக்க !

மரம் வெட்ட வெட்ட 
மனம் சூடாகும் 
சூரியன் !

வரவில்லை 
வெளிநாட்டுப் பறவைகள் 
வெப்பமயம் !

மரித்த பின்னும் 
மத்தளம் 
மாடு !

உதிர்ந்தபின்னும்
உரம் 
இலை !

விழுந்தபின்னும் 
நதி 
அருவி  !

தீக்காயத்திற்குபின்னும் 
இசை 
புல்லாங்குழல் !

உருக்கியபின்னும் 
ஒளி
தங்கம் !  

சிதைந்தபின்னும் 
சிற்பம் 
கல் !

காய்ந்தபின்னும்
பசுவுக்கு இரை
வைக்கோல் !

இரக்கமின்றிக் 
கொன்றவருக்கும்  இரை
ஆடு ! 

கொக்கிடம் தப்பி 
வலையில் விழுந்தது 
மீன் !

தானாக வரும் 
தானாக மாறியும் 
வானவில் !

விற்றது விளங்காமல் 
வீடு வந்தது 
வளர்த்த  பசு ! 

இசைப்பதாக 
நினைத்துக் கொள்ளும் 
தவளை !

காந்தியடிகள்  உண்டது 
உடலுக்கு நல்லது 
கடலை !

மூன்று அடிகள்  
மூளையில் இடிகள் 
ஹைக்கூ  !

வாசிக்கக் கிட்டும் 
தடையில்லா மின்சாரம் 
ஹைக்கூ  !



கருத்துகள்