ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் புதுயுகன் லண்டன்



ஆயிரம் ஹைக்கூ !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் விமர்சனம் கவிஞர் புதுயுகன் லண்டன்


தொல்காப்பியரின் ‘பா’ வகைகளில் தொடங்கிய தமிழின் கவிப்பயணம் நீளமானது. மகாகவி பாரதி வசனக்கவிதையை தமிழுக்கு அறிமுகம் செய்த பிறகு, அது பலநிலை பரிணாம வளர்ச்சி பெற்று ஹைக்கூ, சென்ரியு போன்ற ஜப்பானிய கவி வடிவங்களையும் வாங்கி விரிந்திருக்கிறது. நவீன வடிவமாகத் தோன்றும் ஹைக்கூ பிறந்தே நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. மூன்று வரிகளாக, 5-7-5 என்ற அசை அமைப்புகளில் ஹைக்கூ அமைய வேண்டும் என்றும், நவீன ஹைக்கூவில் அசை கட்டு தேவையில்லை என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு.

ஆக ஹைக்கூக்கள் எப்படி தான் இருக்க வேண்டும்?
இருவேறு கருத்துக்களின் குறுக்குவெட்டாக, மின்அதிர்வை ஏற்படுத்துவதாக, கடைசி வரியில் முப்பரிமாண படம்போல சட்டென்று மனதில் புதியதோற்றம் ஒன்றைக் காட்டுவதாகவும் ஹைகூக்கள் அமைய வேண்டும். இதன் உள்ளடக்கம் கவித்துவம், மெய்யியல், தொன்மம், படிமம் இவை சார்ந்திருக்கலாம். பகடி, நகைச்சுவை உணர்வோடு, அரசியல், சமூக கேலி கொண்டதாக விளங்குவது சென்ரியு.

புகழ்பெற்ற வானதி பதிப்பகத்தாரின் 2013ஆம் ஆண்டின் வெளியீடாக, கவிஞர் இரா. இரவி அவர்கள் எழுதி இருக்கும் 'ஆயிரம் ஹைக்கூ' என்ற நூல் மேற்சொன்ன ஹைக்கூ, சென்ரியு இரண்டும் கலந்த நவீன இலக்கியமாக விளங்கி மகிழ்விக்கின்றது.

1992ஆம் ஆண்டு 'கவிதைச் சாரல்' என்ற தொகுப்பின் வாயிலாக இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்த இவரின் 12ஆவது நூல் இந்த முத்தான நூல்.

இவரைப் பற்றி ஒரே வரியில் இப்படிச் சொல்லிவிடலாம்:
'பாரதியார் பணியாற்றிய பள்ளியில் பயின்ற இந்தக் கவிஞரின் கவிதைநூல்கள், பாரதிதாசன் பல்கலைகழகத்தில் இன்று பாடநூல்களாக இருக்கின்றன'.

பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் இடையே நடைபோடுகிறார் இவர்.

'எழுத்து'விலும் எழுதுகிற இவரைப் போன்ற கவிஞர்கள் இந்த எழுத்து தளத்திற்கு பெருமை சேர்க்கிறார்கள்; பிற கவிஞர்களால் இன்னும் உற்று நோக்கப்பட வேண்டியவர்களாகிறார்கள்.

‘மக்கள் வாசிக்காமல் விட்டுவிடும் வரிகளை எழுதாமல் விட்டுவிட முயற்சி செய்கிறேன்’ என்பார் அமெரிக்க எழுத்தாளர் லியோனார்ட். வெறும் உணர்ச்சிக் கொட்டல் அல்ல கவிதை. தேவையற்ற சதைகளை விலக்கிய திடகாத்திர தேகம் போல இருக்கவேண்டும் நல்ல கவிதை.
ஓர் உதாரணம்...

மொட்டு
மலர் விற்றது
ஏழைச்சிறுமி
[கவிஞர் இரா. இரவி, 'ஆயிரம் ஹைக்கூ': பக்: 133]

அழகிய படிமங்களாக மொட்டு, மலர் இவற்றைக் காட்டி, கடைசிவரியில் அந்த மென்மை உணர்வை உடைக்கிற 'ஏழைச்சிறுமி' என்ற இறுக்க உண்மையைச் சொல்லி அதிர்ச்சி விளைவை ஏற்படுத்தும் இக்கவிதையை இத்தொகுதியின் சிறந்த கவிதை என்றே சொல்லலாம்.

இதே தன்மை கொண்ட மற்றொரு கவிதை;

அட்சயப் பாத்திரம்
திருவோடானது
பட்டச் சான்றிதழ்
['ஆயிரம் ஹைக்கூ': பக்: 113]

அள்ள அள்ள குறையாத அரிய செல்வம் கல்வி. ஆனால் அதை வைத்துக் கொண்டு பிச்சை எடுக்கிற நிலையில் தான் தேசம் இருக்கிறது என்ற அவல உண்மையை எத்தனை அழகாய் காட்டுகிறது இந்த ஹைக்கூ.

‘காகிதம் காலியாகவே இருக்கிறது; அதில் உங்கள் சுவாசங்களை எழுதுங்கள்’ என்பார் ஆங்கிலக்கவி வில்லியம் வோட்ஸ்வோர்த்.
அப்படி கவிஞரின் சுவாசங்கள் சில:

இல்லாத நாடு இல்லை
இவனுக்கென ஒரு நாடில்லை
தமிழன்
['ஆயிரம் ஹைக்கூ': பக்: 17]

குஞ்சுகள் மிதித்து
கோழிகள் காயம்
முதியோர் இல்லம்
['ஆயிரம் ஹைக்கூ': பக்: 32]

விளையாடித் திரியும் வயதில்
வெடியும் திரியும் கையில்
சிவகாசிச் சிறுவர்கள்
['ஆயிரம் ஹைக்கூ': பக்: 145]

அணிலின் முதுகில் இருக்கிற ‘மூன்று வரிகள்’ இராமர் வரைந்தவை என்று தானே அறிந்து வைத்திருக்கிறோம். அதையே ஹைக்கூவுக்கு விளம்பரமாக எப்படி மாற்றுகிறார் பாருங்கள் கவிஞர்!

ஹைக்கூ கவிதைகளின்
விளம்பரத் தூதுவர்கள்
அணில்கள்
['ஆயிரம் ஹைக்கூ': பக்: 141]

இதைப் போல புத்திசாலித்தனம் மிளிரும் சில உதாரணங்களையும் கீழே தருகிறேன். நெய்வேலி ஹைக்கூவின் முரண் ரசிக்கும்படி உள்ளது;

காசு கரியானது தீபாவளி
கரி காசானது
நெய்வேலி
['ஆயிரம் ஹைக்கூ': பக்: 22]

காவல்துறை அனுமதியின்றி
ஊர்வலம் நடந்தது
எறும்புகள் அணிவகுப்பு
['ஆயிரம் ஹைக்கூ': பக்: 74]

வானத்திலும்
வேலை நிறுத்தமோ?
அமாவாசை
['ஆயிரம் ஹைக்கூ': பக்: 54]

அமைப்பு முறையில் ஹைக்கூவின் சரியான வடிவமாக அமைந்திருக்கிறது பின்வரும் ஹைக்கூ. ஹைக்கூ பாடம் நடத்துகிறவர்கள் உதாரணமாகச் சொல்கிற ‘பழைய குளம்; குதித்தது தவளை; நீரின் ஒலி' என்ற புகழ்பெற்ற ஜப்பானிய ஹைக்கூவின் பிள்ளையாக தோன்றுகிறது இந்தப் பிள்ளை;

குளத்தில் கல்
குதூகலத்தில் சிறுவன்
உடைந்தது நிலா
['ஆயிரம் ஹைக்கூ': பக்: 149]

‘புத்தகங்களே சமர்த்தாக இருங்கள், குழந்தைகளை கிழித்து விடாதீர்கள்’ என்பார் கவிக்கோ அப்துல் ரஹ்மான். புத்தகங்கள் குழந்தையை கிழிப்பதைப் போலே இங்கே அரசு கொலை செய்கிறது; குடும்பம் தள்ளாடுகிறது

கொலை செய்தவனை
கொலை செய்தது அரசு
தூக்குத் தண்டனை
['ஆயிரம் ஹைக்கூ': பக்: 37]

குடிபோதையில்
குடும்பத் தலைவன்
தள்ளாடும் குடும்பம்
['ஆயிரம் ஹைக்கூ': பக்: 129]

அறிவியல் சிந்தனைகளை சிந்திக்கச் செய்கிற கவிகளும் இந்தத் தொகுதியில் நிறைய இருக்கின்றன;

சாம்பலாவாய்
உணர்த்துகின்றது
சிகரெட்
['ஆயிரம் ஹைக்கூ': பக்: 81]

நேரம் பார்த்துத் தோல்வி
நேரம் பார்க்காது வெற்றி
மூட நம்பிக்கை
['ஆயிரம் ஹைக்கூ': பக்: 104]

பயணிக்காமலே
உலக தரிசனம்
இணையம்
['ஆயிரம் ஹைக்கூ': பக்: 169]

மின்தடை நீக்கிட
ஒரே வழி
சூரியஒளி
['ஆயிரம் ஹைக்கூ': பக்: 170]

தமிழ், முற்போக்குச் சிந்தனை, தன்முன்னேற்றச் சிந்தனை, கல்வி உலகு, தத்துவத் தேடல் முதலான 23 தலைப்புகளின் கீழ் இந்த ஆயிரம் ஹைக்கூக்களும் அணிவகுத்து நிற்கின்றன.

முனைவர் இரா. மோகன் அவர்களும், முதன்மைச் செயலர் முனைவர் வெ. இறையன்பு அவர்களும் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி சிறப்பித்திருக்கிறார்கள்.

தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் இந்தக் கவிஞரின் பத்து ஆளுமைக் கூறுகளை தன் அணிந்துரையில் பட்டியலிடுகிறார்:

‘தமிழுணர்வு, அயலக தமிழர் பால் பரிவு, முற்போக்குச் சிந்தனை, மனித நேயம், வாழ்வியல் விழுமியங்கள், உறவுகளை போற்றுதல், இயற்கை ஈடுபாடு, திருக்குறள் பற்று, தன்னம்பிக்கை, நகைச்சுவை உணர்வு’.

ஆக நவரசம் தாண்டி பத்து ரசம் பருக விரும்புகிறவர்கள் 'ஆயிரம் ஹைக்கூ' நூலைப் பருகுங்கள்.

ஹைக்கூ திலகம், கவியருவி, கவிமுரசு என்றெல்லாம் பல்வேறு இலக்கிய கழகங்களின் விருதுகளை வென்றிருக்கிற கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு 'ஆயிரம் ஹைக்கூ' மேலும் ஒரு அழகிய அலங்காரம்.

அவருக்கு என் பாராட்டுக்கள்!

நூல் கிடைக்குமிடம்: வானதி பதிப்பகம், 23 தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை - 17
விலை: ரூ 100

கருத்துகள்