ஜப்பானிய ஹைகூ ! 100 குறிப்புரையுடன் ! நூல் ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
ஜப்பானிய ஹைகூ ! 100 குறிப்புரையுடன் !
நூல் ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
விழிகள் பதிப்பகம் !
8/எம் 139, 7 வது குறுக்குத் தெரு ,
திருவள்ளுவர் நகர் விரிவு ,
சென்னை .41.
விலை ரூபாய் 100.
தந்தை ஈரோட்டு பெரியாருக்குப் பிறகு ஈரோடு என்ற ஊரை பெயரோடு சேர்த்துக் கொண்டு ஈரோட்டுக்குப் பெருமை சேர்த்து வருபவர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் .மரபுக்கவிதை, புதுக்கவிதை ஹைக்கூ கவிதை மூன்று பாவும் எழுத வல்லவர்.
ஹைக்கூ திருவிழாவிற்காக சென்னை செல்லும் போதெல்லாம் விழாவில் நூல் ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்களை சந்திப்பது வழக்கம் .குழந்தை உள்ளம் கொண்டவர் அன்பாக நலம் விசாரித்து விட்டு தொடர்ந்து இயங்கி வருவதற்கு எனக்கு பாராட்டும் தெரிவித்தார்கள் .எனது ஆயிரம் ஹைக்கூ நாளை அவரிடம் வழங்கி வந்தேன் .தமிழ்த்தேனீ இரா .மோகன் அவர்களுடன் தொடர்வண்டியில் பயணம் செய்து சென்னை ஹைக்கூ திருவிழாவில் கலந்துகொண்டு தமிழ்த்தேனீ இரா .மோகன் ,ஈரோடு தமிழன்பன் இருவர் உரை கேட்டபின் ஹைக்கூ ஈடுபாடு விதை விருட்சமானது .
இந்த நூலை அமெரிக்காவில் உள்ள அவரது இனிய நண்பர் புத்தகக் காதலர் பொள்ளாச்சி நா .கணேசன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி இருக்கிறார்கள் .தமிழ் ஹைக்கூக்கவிதை வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஜப்பானிய ஹைகூ ! 100 குறிப்புரையுடன்படைத்தது உள்ளார்கள் .
நூல் ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் 80 வயதில் வாழ்நாள் சாதனையாக சரித்திரம் படைத்துள்ளார் .64 புகழ் பெற்ற நூல்கள் படைத்துள்ள கவிஞரின் படைப்பு .ஹைக்கூ கவிதை சென்றியு கவிதை தமிழ்நாட்டில் பரவிட , படைப்பாளர்கள் பெருகிட காரணமானவர். தமிழ் ஹைக்கூ கவிதையின் முன்னோடியாக மட்டுமன்றி தொடர்ந்து படைத்து வரும் படைப்பாளி .
ஜப்பானிய ஹைகூ கவிதையின் ஆசிரியர் பெயர் ,ஆங்கிலத்தில் கவிதை பின் அதன் தமிழாக்கம் அந்த ஹைக்கூ தொடர்பான குறிப்புகள் என்று உள்ளன .நூலின் அட்டைப்படம் உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .இந்த நூலில் நூறு முத்துக்கள் இருந்தாலும் ஒரு சில முத்துக்களை மட்டும் உங்கள் பார்வைக்கு .
.
யமாசகி சோகன் !
நிலாவே ! நாங்கள்
உனக்கொரு கைப்பிடி போட்டுவிட்டால்
என்ன அழகிய விசிறி நீ !
ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்கள் இயற்கைப் பாடுவதில் வல்லவர்கள்
என்பதை மெய்பிக்கும் விதமான ஹைக்கூ நன்று .
"நிலாவுக்குக் கைப்பிடி போட்டுப் பார்க்கும் கற்பனையில்கிடைக்கிற கவிதை இன்பத்தை மறுக்கவா முடியும் ." நூல் ஆசிரியர் கருத்து நன்று ..
இது சரியான ஹைக்கூ அன்று விமர்சித்தவர்களும் உண்டு. ஆனாலும் இந்தக் கவிதை ஹைக்கூ உணர்வைத் தருகின்றது என்பது உண்மை
கவிதைக்கு பொய் அழகு .இயற்கை ரசிக்க கற்பனைக் கண்ணும் அழகு என்பதை உணர்த்தும் ஹைக்கூ மிக நன்று .இதோ .
அரிகிதா மொரிதகே !
வில்லோ மரங்கள்
மலையின் முகத்தில் புருவங்கள்
வரைகின்றன !
மரங்கள் புருவம் வரையுமா ? என்று கேள்வி கேட்பவர்களும் நம்மில் உண்டு .கவிஞன் தான் கண்ட இயற்கைக் காட்சியை கற்பனை கலந்து காட்சிப் படுத்தி வாசகனுக்கு கவி விருந்து வைக்கின்றான். இனி ரசித்துப் பார்த்தால் புருவம் போல தெரியும் .
நிஷியாமா சோயின் !
வாழ்க்கை
ஒரு பட்டாம் பூச்சி போல
அது என்னாவாயிருந்தபோதும் !
ஒரு பட்டாம் பூச்சி போல வாழ்க்கை வாழ்க்கையை ரசித்து வாழுங்கள் இன்பம் துன்பம் எது வந்தபோதும் இயல்பாய் இருங்கள் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளன .
இசா !
அதோ அந்த உழத்தி
அழும் தனது குழந்தை இருக்கும்
திக்கில் நடுகிறாள் நாற்று !
வயலில் வேலை செய்யும் பெண்ணின் குழந்தை பாலுக்காக பசியோடு அழுகிறது .தாயோ வயலில் நடவு செய்து கொண்டு இருக்கிறாள் .அவள் ஏழை இது போன்ற காட்சி இந்தக் கவிதை படித்தவுடன் வாசகன் மனக் கண்ணில் விரிந்து விடும் .இதுதான் படைத்த இசா அவர்களின் வெற்றி .பகிர்ந்த நூல் ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் வெற்றி.
சிய்யோ- நி !
பூக்கள் இல்லாமல்
நீ சுதந்திரமாய் இருக்கிறாய்
ஒரு வில்லோ மரம்போல !
இந்த ஹைக்கூ பூக்கள் இல்லாததற்காக மரம் வருந்த வில்லை .பணம் இல்லாததற்காக மனம் வருந்தாதே என்பதாகவும் உணர முடியும் .படைப்பாளி நினைத்து உருவாக்கிய பொருள் தவிர வேறு பொருளும் உள்ளடக்கியத்தான் ஹைக்கூ வின் சிறப்பு .
என்செய் !
என் உடலுக்கு விடைபெறு பரிசு
அது விரும்பும்போது விடுவேன்
என் கடைசி மூச்சு !
.
நம்மில் பலர் சாவு என்று வருமோ என்று அஞ்சி தினம் தினம் செத்து வருகின்றனர் .அவர்களுக்கான ஹைக்கூ இது . சாவு என்றுவந்தால் என்ன ஏற்றுக் கொள்ளும் மன நிலை பெறு.என்பதை உணர்த்தும் விதமான ஹைக்கூ நன்று .
சீய்ஷி யாமகுச்சி !
சவைத்துச் சாப்பிட
பிளம் புளிப்பில் மீண்டும்
பிறந்தேன் சிறுவனாக !
இந்த ஹைக்கூ கவிதை படிக்கும் வாசகனுக்கு அவனது சிறு வயது மலரும் நினைவுகளை மலர்விக்கும் விதமாக உள்ளது. பாராட்டுக்கள் .
நூல் ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதிய குறிப்புகளை எழுதாமல் நானும் ஒரு ஹைக்கூ கவிஞன் என்பதால் என் மனதில் பட்ட குறிப்புகளை எழுதி உள்ளேன் .அவர் எழுதியுள்ள குறிப்புகள் மிக நன்று .
பிற மொழி இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்து அணி சேர்க்க வேண்டும் என்றார் மகாகவி பாரதியார் .அது போல நூல் ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் ஜப்பானிய ஹைகூ ! 100 குறிப்புரையுடன் வழங்கி உள்ளார்கள் .பாராட்டுக்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக