கவிதைச்சுடர் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

கவிதைச்சுடர் !
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ 

முனைவர் இரா .மோகன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு .தியாகராயர் நகர், சென்னை .600017.விலை ரூபாய் 90 .மின்னஞ்சல்vanathipathippagam@gmail.com

நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் அவர்களின் கை வண்ணத்தில் உருவான ஹைக்கூ ஒளி வீசும் நூல் .

பதிப்புலகில் தனி முத்திரை பதித்து தமிழன்னைக்கு அணி சேர்த்து வரும் பெருமை மிகு வானதி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. நூலின் அட்டைப்படங்கள் உள் அச்சு வடிவமைப்பு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன . 

கவிதைச்சுடர் என்ற இந்த நூல் ஹைக்கூ ஒளிப்பரவல் எனலாம்.சூரிய ஒளி போல  ஹைக்கூ ஒளி  எங்கும் பரவிட வழி வைக்கும் நூல் .ஹைக்கூ கவிதை பிடிக்காத மரபின் தீவிர ஆதரவாளர்களுக்கும் இந்த நூல் படித்தால் இனி ஹைக்கூ கவிதை பிடிக்கும் .ஹைக்கூ கவிதையின் சிறப்பைப் பறை சாற்றிடும் அற்புத நூல் .ஹைக்கூ கவிதைகளின் முன்னோடி ஈரோடு தமிழன்பன் தொடங்கி இளைய தலைமுறைப் பெண்ணான புதுவை கு .எ .தமிழ் மொழி வரை 23 ஹைக்கூ கவிஞர்களின் ஹைக்கூ நூல்களைத் திறனாய்வு செய்து வடித்த நூல் .

 நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் 
இரா .மோகன் அவர்கள் தந்த அணிந்துரைகளும் இடம் பெற்றுள்ளது. நூல் முழுவதும் ஹைக்கூ ! ஹைக்கூ ! ஹைக்கூ தவிர  வேறு கவிதைகள் இல்லை .ஹைக்கூ கவிதையின் நுட்பம்,ஆழம் ,படிமம் சுவை, தாக்கம் அனைத்தையும் எடுத்து இயம்பி உள்ளார் .

ஹைக்கூ கவிதை ரசிகர்களுக்கு ஹைக்கூ   விருந்து இந்த நூல். ஹைக்கூ ஆய்வாளர்களுக்கு ஆய்வு வேலையை எளிதாக்கும் நூல் இது .பல்கலைக் கழகங்களில் கல்லூரிகளில் பாடமாகவேண்டிய அற்புத நூல் .துணைவேந்தர்களும்,தமிழ்த் துறைத் தலைவர்களும் பாடநூல் தயாரிக்கும் போது  கவனத்தில் கொள்ள வேண்டிய நூல்.

கவிதை உறவு மாத இதழ் ஆசிரியர் இனியவர் கலைமாமணி   
ஏர்வாடியாரின்  அணிந்துரை நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கின்றது .அணிந்துரை முத்தாப்பாக முத்திரைப் பதிக்கும் விதமாக உள்ளது .

படிக்கும் வாசகர்களை படைப்பாளியாக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைகளுக்கும் மட்டுமே உண்டு . இந்த நூல் படித்து முடித்தவுடன் படித்த வாசகரும் ஹைக்கூ எழுதத் தொடங்கி விடுவார் என்று உறுதி கூறலாம் .ஹைக்கூ பற்றிய புரிதலை , தெளிவை உண்டாக்கும் நூல். பெரிய கவிஞர் வளரும் கவிஞர் என்ற பாகுபாடு இன்றி எல்லோரையும் சமமாக பார்க்கும்  பார்வை நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் பார்வை .

23 கவிஞர்களின் நூல்களான மலர்களில் இருந்து தேன் எடுத்து தேன் விருந்து தந்துள்ளார்கள்  இந்த நூல் 15 வது கட்டுரையாக என்னுடைய "ஆயிரம் ஹைக்கூ " நூலிற்கு எழுதிய அணிந்துரையும் உள்ளது .அது மட்டுமல்ல நூலின் முகப்பு அட்டையில் ஈரோடு தமிழன்பன் ,பேராசிரியர் மித்ரா , கவிஞர் அறிவுமதி ஆகியோருடன் என் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது .நூல் ஆசிரியர் அய்யாவின் மனம் எனும் மந்திரி சபையில் எனக்கும் இடம் தந்து பெருமைப் படுத்தி  உள்ளார்கள் .மற்றவர்  நூலின்  அட்டையில்  எனது   புகைப்படமும்  இடம் பெற்ற முதல் நூல் இது . ஹைக்கூ கவிதைகளில் இருந்து தேர்ந்தெடுத்து முத்து மாலையாக்கி வழங்கி உள்ளார்கள் . 

படித்தால் மறக்க முடியாத நினைவலைகளை ஏற்படுத்தும் ஹைக்கூ கவிதைகளின் அணி வகுப்பு .மனதில் பதிப்பு .பிரமிப்பு .

ஒரு கவிஞருக்கு ஒரு ஹைக்கூ என்று பதச்சோறாகப் படைத்துள்ளேன்.

ஈரோடு .தமிழன்பன் !

ஓட்டுப் பெட்டியில்  
ஒரே துர்நாற்றம் 
வேட்பாளர் பிணமல்ல ..பின் !
------------------------------------
மித்ரா !

கல்மனசுக்காரகள் 
பாருங்கள் 
பாறைகளை உடைக்கிறார்கள் !
--------------------------------------
அறிவுமதி !

மரம் வெட்டிய  கோடரி 
பார்த்துக்கொள் 
கடைசி மழைத்துளி !
--------------------------------------
எஸ் .சங்கர நாராயணன் !

சவப்பெட்டி 
செய்கிறான் 
உயிர் வாழ !
--------------------------------
தங்கம் மூர்த்தி !

கலவரத்தில் 
வீடுகள் எரிந்தன 
பீனிக்சாய் சாதிகள் !
---------------------------------------
பொன் .குமார் !

தேர்தல் திருவிழா 
பலி ஆடுகள் 
அப்பாவி மக்கள் !
------------------------------------
தமிழ்மணி !

மூன்றுமுறை முகத்தில் குத்தினால் 
புத்தருக்கும் சினம் வரும் 
வரவில்லை தமிழனுக்கு !
-------------------------------------
செ. ஆடலரசன் !

கோவிலில் கூட்டம்  
தேவி தரிசனம் 
நடிகை !
----------------------------------
செந்தமிழினியன் !

விலை நிலங்கள் 
விளை நிலங்களாயின 
வீடுகள் !
-----------------------------------
வசீகரன் !

எந்தநாடு சென்றாலும் 
தாய் மொழிதான் பேசும் 
வலசைப்பறவை! 
-------------------------------------
நவதிலக் !

ஆடுவோமே பள்ளு பாடுவோமே 
ஆனந்த சுதந்திரம் 
அடைந்து  விற்றோமென்று  !
--------------------------------------------------
ந .முத்து !

பங்களா குழந்தைக்கு 
உயிருடன் பொம்மை 
வேலைக்கார சிறுமி !
-----------------------------------------------
பா .உதயகண்ணன் !

அவள் வரவில்லை 
கலங்கிக் கொண்டிருந்தது 
குளம் !
---------------------------------------------
க .இராமச்சந்திரன் !

தமிழர் திருநாள் 
வாழ்த்து வந்தது 
HAPPY PONGAL !
-----------------------------------
இரா .இரவி !

படித்தவன் பாட்டை 
எழுதியவன் ஏட்டை
அரசியல்வாதி நாட்டை !
------------------------------------
ஆர் .வி .பதி !

துச்சாதனனால் 
அவமானப்பட்டாள் பாஞ்சாலி 
தமிழனால் தமிழ் !
---------------------------------------
ரமா .ராமநாதன் !

சுற்றிலும் முட்கள் 
சிரிப்பதை நிறுத்தவேயில்லை 
 பூ !
-------------------------------------
இ .பரிமளா !

வாழ்நாளில் 
வாழ்ந்தனால் ?
விரல்களுக்குள் !
--------------------------------------------
இளவல் ஹரிஹரன் !

மிட்டாய் கொடுத்த 
இனிப்பைக் கூடத் 
தரவில்லை சுதந்திரம் !
-------------------------------------------
கம்பம் மாயவன் !

எம் .எல் .ஏ. மகன் 
அடிக்கடி வெளிநடப்பு செய்தான் 
கல்லூரி வகுப்பில் !
------------------------------------
கம்பம் எம் .பி .புதியவன் !

விவசாயத்தில் வரவேற்பு 
வீட்டில் எதிர்ப்பு 
கலப்புத் திருமணம் !
-----------------------------------------
கவிவாணன் !

கல் கல்லை உரச தீ 
மனிதன் மனிதனை உரச 
சாதீ !
-------------------------------------
கு .அ.தமிழ் மொழி !

கனவில் கூட 
வரவில்லை 
அரசியல்காரன் திருந்துவதாய் !
-----------------------------------------------------
23 ஹைக்கூ கவிஞர்கள் தம் ஹைக்கூ கவிதைகளால் சமுதாயத்தின் அவலத்தை தோலுரித்துக் காட்டும் நுட்பத்தை எடுத்து இயம்பி உள்ள நூல்.நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் 100 கவிஞர்களின் தலா பத்து கவிதை வீதம் 1000  ஹைக்கூ கவிதைகளை தொகுத்த ஹைக்கூ ஆயிரம் நூலை சாகித்ய அகாதெமி சார்பில் வெளியிட்டார்கள் ஹைக்கூ என்ற இலக்கிய வரலாற்றில் அளப்பரிய முத்திரை பதித்து வருகிறார்கள் பாராட்டுக்கள் .ஹைக்கூ கவிதையின் புகழை இன்னும் இன்னும் உச்சத்திற்கு கொண்டு சென்று உள்ளார்கள் . மிக நல்ல 
படிப்பால் வந்த படைப்பு .
  
ஹைக்கூ எழுதியபோது எழுதிய கவிஞருக்கு தோன்றாதவை எல்லாம் ஒப்பிலக்கியத் துறைத் தலைவராக  இருந்த நூல் ஆசிரியர் அவர்களுக்கு தோன்றி உள்ளது .மிகச் சிறப்பான ஹைக்கூ கவிதைகளை  மேற்கோள்கள் காட்டி வடித்த ஆய்வுக் கட்டுரைகள் மிகச் சிறப்பு .தமிழ் கூறும் நல் உலகம் வாழ்த்தி வரவேற்கும் .


அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்