நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
அன்பு நிலையம் !
11.புண்ணியகோட்டி நகர்
சலவன் பேட்டை
வேலூர் .632001.
விலை ரூபாய் 150.செல் 9865224292.
நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் இணையத்தில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .இவரது படைப்புகளை பல்வேறு இணையங்களில் எழுதி வருபவர் .மின் அஞ்சல் குழுக்களிலும் எழுதுபவர் .என்னுடைய படிப்புகளுக்கு தொடர்ந்து கருத்துக்களைப் பதிந்து வருபவர் .
இயற்கையைப் பாடுவது ஹைக்கூ இயற்கையை அல்லாத மக்கள் பிரச்சனைகளைப் பாடுவது சென்ரியூ என்று இலக்கணம் வகுத்துக் கொண்டு இந்த நூல் சென்ரியூ எழுதி உள்ளார் .
ஹைக்கூ ,சென்ரியூ எப்படி அழைத்தாலும் உள்ளடக்கம் கருத்து மின்னல் இருந்தால் நன்று .படிக்கும் வாசகர்கள் மனதில் அதிர்வலைகளை, எண்ண அலைகளை ஏற்படுத்தும் விதமாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .
மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் .சில நேரங்களில் சில வழக்குகளின் தீர்ப்புகள் கடைசி நம்பிக்கையும் பொய்க்கும் விதமாக வந்து விடுகின்றன .அந்த ஆதங்கத்தை நன்கு பதிவு செய்துள்ள சென்ரியூ.
அடித்து துவைத்தேன்
வெளுக்கவில்லை
நீதிதேவதையின் கண்கட்டி !
பாமரனை மன்னிக்க சாமியார்
சாமியாரை மன்னிக்க ?
நீதிமன்றங்கள் !
பாடாத பொருள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்துப் பொருளிலும் பாடி உள்ளார் .வரதட்சணைக் கொடுமையைப் பற்றியும் எழுதி உள்ளார் . மணமகன் விலை நிர்ணயத்திற்குத்தான் பட்டப் படிப்புகள் பயன்படுகின்றன என்ற உண்மையையும் உணர்த்திடும் சென்ரியூ .
மருத்துவ படிப்பு
வரதட்சணை வேண்டாம்
மருத்துவமனை மட்டும் !
கவிதைக்கு பொய் அழகு என்பார்கள் .காதலுக்கும் பொய்யான கவிதை அழகு .என்று நினைத்து பொய்யாக கற்பனைக் கவிதை வடிக்கும் கவிஞர்கள் மிகுதி .அதனை உணர்த்திடும் சென்ரியூ .
காதல் கவிதைக்கு
அறிவே இல்லை
பொய் பேசுகின்றன !
பழமொழிகளை பொன்மொழிகளை ஒட்டியும் ,வெட்டியும் கவிதை படைப்பது ஒரு யுத்தி .அந்த யுத்தியிலும் வெற்றி பெற்றுள்ளார். பகுத்தறிவு சிந்தனையும் விதைத்து உள்ளார் .ஏழைகள் ஏழைகளாகவே இருக்கின்றனர் .பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகி வரும் அவலம் உணர்த்துகின்றார்
கொடுத்து கொண்டேயிருக்கிறது
கூரையைப் பிய்த்து தெய்வம்
கூரை வீடானுக்குத் துன்பம் !
எள்ளல் சுவையுடன் உள்ள சென்ரியூ .நன்று
விலங்கு வதை கூடாது
கண்டு கொள்ளவில்லை
மயில் மேல் முருகன் !
படிக்கும் வரிகளை வாசகர் மனதில் காட்சிப் படுத்தி கவிதை எழுதுவது ஒரு வகை நுட்பம் .அந்த வகையில் வடித்துள்ள சென்ரியூ .
புயல் இல்லை
கப்பல்கள் தரை தட்டியது
காகிதக் கப்பல்கள் !
இயற்கையை பாடுவது ஹைக்கூ இந்த நூல் முழுவதும் சென்ரியூ என்று அறிவித்து ஓராயிரம் சென்ரியூ தலைப்பிட்டு உள்ளார் . அவர் அறியாமலே அவர் இலக்கணப்படி ஹைக்கூவும் உள்ளது .
போகும்போது கண்கசக்கி
சிவப்பாக்கிக் கொள்கிறாய்
செவானம் !
நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் நல்ல படிப்பாளி அவரிடம் ஒரு வேண்டுகோள் இனி வரும் படைப்பில் ஆங்கிலச் சொல் கலப்பின்றி எழுதுங்கள் .ஆங்கிலச் சொல் கலந்துள்ள சென்ரியூகள் .
எதற்கு நாற்காலி ?
ஷ்டெச்சர்
வீல்சேர் போதும் !
வியர்வைக் கொட்டுகிறது
சாப்ட்வேர் என்ஜினியருக்கு
மின்சார துண்டிப்பு !
படித்தவர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் தவிப்பை உணர்த்தும் சென்ரியூ நன்று .
எந்த வேலைக்கு தயார்
மவுனம் சம்மதம்
முதுகலைப் பட்டதாரி !
வாக்களிக்க பணம் வாங்கும் அவலத்தை தொற்று நோயாய் பரவி விட்ட கேவலத்தை உணர்த்தும் சென்ரியூ நன்று .
உங்கள் ஓட்டு
எங்கள் ஓட்டு
ஐ நுறு ஆயிரத்திற்கே !
அங்கதச் சுவையுடன் அரசியல் குறித்த விமர்சனம் மிக நன்று .
வாலாட்டி சாப்பிட்டு
தெருவையே கடிக்கிறது
அரசியல் !
நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் கருத்துக்களை விதைக்கும் தாராளம் ஏராளம் .நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்களுக்கு படைத்ததற்காகப் பாராட்டுக்கள் . இனி படைக்கப் போவதற்காக வாழ்த்துக்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக