கவித்துளி ! மாற்றுத்திறனாளிகள் குறும்பாக்கள் ! தொகுப்பு ஆசிரியர் கவித்துளி மு .குமார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
மாற்றுத்திறனாளிகள் குறும்பாக்கள் !
தொகுப்பு ஆசிரியர் கவித்துளி மு .குமார் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு சேலம் .636015. விலை ரூபாய் 40.
செல் 9944391668. kavignareagalaivan@gmail.com
37 மாற்றுத் திறனாளிகள் குறுந்செய்தி குறும்பாக்கள் தொகுப்பு நூல். இனிய நண்பர் கவிஞர் ஏகலைவன் மாற்றுத் திறனாளி மட்டுமல்ல மாற்றுத்திறனாளிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் வாசகன் பதிப்பகம் தொடங்கி சிந்தனை விதைக்கும் பல நல்ல நூல்களை தொடர்ந்து பதிப்பித்து வருகிறார் .இந்த நூலும் வாசகன் பதிப்பகம் நூலாக வந்துள்ளது .தொகுப்பு ஆசிரியர் கவித்துளி மு .குமார் அவர்கள் நூலை காணிக்கை ஆக்கிய விதத்தில் வித்தியாசப் படுகிறார் .அட்டைப்பட புகைப்படம் மிக நன்று .
சமர்ப்பணம் !
தரணியிலே
என்னை தவழ வைத்து
தவழ இயலாதபோது
தாங்கிப் பிடித்து
உலகத்தை
சுட்டிக் காட்டிய
சுட்டு விரல்களான
என் தாய் தந்தைக்கு ...
இனிய நண்பர்களும், ஹைக்கூ கவிஞர்களுமான மு .முருகேஷ், பொன் குமார் ,கன்னிக் கோவில் இராஜா ஆகியோரின் அணிந்துரை மிக நன்று .
நூல் எனும் மகுடத்தில் பதித்தவைரக்கற்களாக மிளிர்கின்றன.முழுக்க முழுக்க மாற்றுத் திறனாளிகள்களின் ஹைக்கூ கவிதைகள் மிக நன்று. சிந்தனைக் குவியலாக சுரங்கமாக உள்ளன .ஒன்றே முக்கால் ஆண்டுகளாக அலைபேசி வழி குறுந்செய்தியாக அனுப்பிய ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .தேனீ தேன் சேகரிப்பது போல சேகரித்து நூலாக்கி உள்ளார்கள் .தொகுப்பு ஆசிரியர் கவித்துளி மு .குமார் பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன் இருவரின் உழைப்பை உணர முடிந்தது .
உடலில் குறை இல்லாவிட்டாலும் உள்ளத்தில் குறையோடு வாழ்ந்து வரும் சராசரி மனிதர்கள் அல்ல இவர்கள் .உடலில் குறை இருந்தபோதும் உள்ளத்தில் குறை இன்றி உழைக்கும் ,சிந்திக்கும் சாதனையாளர்களின் சிந்தனை தொகுப்பு மிக நன்று .பாராட்டுக்கள். மாற்றுத் திறனாளிகளின் ஆற்றலை , திறமையை சிந்தனை நுட்பத்தை பறை சாற்றும் நூல் .
தொகுப்பு ஆசிரியர் கவித்துளி மு .குமார் அவர்களின் ஹைக்கூ கவிதையோடு தொடங்கி நூலின் பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன் ஹைக்கூ வோடு முடித்துள்ளனர் .
அலைபேசியின் நன்மை அதிகம் தீமை குறைவு .அதனை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
கவித்துளி மு .குமார் !
உலக உருண்டை
செவ்வக வடிவமானது
செல்போன் !
.
மனிதர்கள் வரிசையில் நிற்கும்போது சண்டை நடப்பதை பார்த்து இருக்கிறோம் .அக்ரிணைகள் உயர் திணைகளை விட உயர்வாக இருப்பதை உணர்த்தும் ஹைக்கூ .
கவிஞர் தகடூர் செவ்வியன் !
ஆறறிவு இல்லாது போயினும்
சட்டத்தை மீறுவதில்லை
வரிசையில் எறும்புகள் !
புகைப்பிடிப்பதால் வரும் தீமையை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
கவிஞர் இளசேட் சென்னி !
உன்னை மட்டுமல்ல
சுற்றியிருப்போரையும்
சுடுகாட்டுக்கு அனுப்பும் சிகரெட் !
சாதிச் சங்ககள் ,அரசியல் கட்சிகள் நடத்தும் பேரணிகள் பற்றி எல்லால் சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று .
கவிஞர் ம .பாலன்
பிராந்தி அரை பாட்டில்
பிரியாணி ஒரு பொட்டலம்
பேரணி !
ஹைக்கூ கவிதைக்கான விளக்கத்தையே ஹைக்கூவாக வடித்து சிறப்பு .
கவிஞர் இரா .சுமதி !
அண்டம் சுருக்கி
அணுவுள் புகுத்தும் முயற்சி
ஹைக்கூ !
மரத்தின் நன்மையை அவசியத்தை உணர்த்தும் ஹைக்கூ ஒன்று மிக நன்று .
கவிஞர் சு .லட்சுமணன் !
மரங்களை வெட்டாதீர்
குறைகிறது
மனித ஆயுள் !
ஹைக்கூ கவிஞரின் மனதை படம் பிடித்துக் காடும் ஹைக்கூ இதோ.
கவிஞர் சித்தை பா .பார்த்திபன் !
தேடுதல் வேட்டையில்
அரிதாய் சிக்கும்
சரியான ஹைக்கூ
மாற்றந்தாய் கொடுமை என்பது சொல்லில் அடங்காது .அனுபவதர்கல் மட்டும் உணரும் கொடிய வலி வேதனை .அதனை நன்கு உணர்த்தும் ஹைக்கூ .
கவிஞர் அ. இந்துமதி !
என் அப்பாவுக்கு கதாநாயகி
எனக்கோ வில்லி
மாற்றந்தாய் !
அழகியில் பாடுவதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பல ஹைக்கூ கவிதைகள் உள்ளன .
கவிஞர் கோட்டை மனோஜ் !
பூக்கள் மலர்வதை
நான் பார்த்ததில்லை
ஒரு முறை சிரி !
இயற்க்கையின் சினம் உணர்த்தும் ஹைக்கூ .
கவிஞர் தமிழ் இயலன் !
குடிசைகள் மூழ்கின
கோபுரங்கள் நீந்தின
பிழையானது மழை !
படிக்கும் வாசகர்களுக்கு பறவைகளை காட்சிப் படுத்தும் ஹைக்கூ .
கவிஞர் பவானி கண்ணன் !
பறவைகளின் கோடைக்கால
சுற்றுலாத்தலம்
வேடந்தாங்கல் !
மூட நம்பிக்கையில் ஒன்றாகி விட்ட தேர்தல் பற்றிய ஹைக்கூ .
கவிஞர் க .நீலவண்ணன் !
வெளிச்ச த்தைத் தேடி
இருட்டுக்குள் பயணம்
தேர்தல் !
சுற்றுச்சுழல் விழிப்புணர்வு விதைக்கும் ஹைக்கூ.
கவிஞர் மா .மாணிக்க சந்திரசேகர் !
முதுகில் குத்துகிறோம்
வெகுண்டெழுகிறது பூமி
பூகம்பமாய் !
மூட நம்பிக்கையை உணர்த்திடும் ஹைக்கூ .
கவிஞர் பெ .கவி .பெரியசாமி
உன் தொழுகைக்குப்பின்
எங்களூர் மைல் கல்லுக்கு
தினமும் பூஜை !
ஆலயத்தை விட உயர்வான நூலகம் பற்றிய ஹைக்கூ .
கவிஞர் நா .செல்வராஜ் !
சாதனைகளின் சங்கம்
சிந்தனைகளின் பிறப்பிடம்
நூலகம் !
எல்லோருக்கும் எதிர்காலம் சொல்லி கிளி தன் எதிர் காலம் அறியாத சோகம் உணர்த்தும் ஹைக்கூ .
கவிஞர் யாழினி ஸ்ரீ !
எந்தத் தவறும் செய்யாமல்
சிறைத் தண்டனை
கூண்டுக் கிளி !
இயந்திர மயமான உலகில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வரும் அவலம் .உறவுகளைப் பிரிந்து அயல் நாடுகளில் வாழும் சோகம் .
கவிஞர் ஜி .ஆஸ்டிரின் பிரிட்டோ !
அயல்நாடு மோகத்தில்
கனவாகிப் போயின
உறவுகள் !
கொள்ளையோ கொள்ளையாகி விட்ட மணல் கொள்ளை பற்றிய ஹைக்கூ . .
கவிஞர் கா .இளையராஜா !
பறிபோகும் நீர் ஆதாரம்
பகல் கொள்ளைக்கு நிகராய்
மணல் கொள்ளை !
கவிதைகளில் சுவையானது சுகமானது காதல் கவிதை .
கவிஞர் த .நளினி !
பொய்யெனத் தெரிந்தும்
மெய்மறக்கச் செய்கின்றன
காதல் கவிதைகள் !
எள்ளல் சுவையுடன் மூட நம்பிக்கையைச் சாடும் ஹைக்கூ .
கவிஞர் தில் பாரதி !
குறுக்கே மனிதன்
சகுனம் பார்த்தது
பூனை !
மாற்றுத் திறனாளிகளை சிந்திக்க வைக்கும் ஹைக்கூ .
கவிஞர் பி .கால்டுவெல் நியூட்டன் !
இபாடிதான் வாழவேண்டுமென
உடற்குறை த்தாண்டி
நீயே தீர்மானி !
தன்னம்பிக்கை தரும் விதமாக ஊக்கம் தரும் ஹைக்கூ .
கவிஞர் நா .முனியசாமி !
பூபாளம் இசைக்கவே
பூமிக்கு வந்துள்ளாய்
முகாரி ஏனோ ?
மாமழை போற்றுதும் ! மாமழை போற்றுதும் ! மாமழை போற்றும் ஹைக்கூ .
கவிஞர் க .அகிலா பாரதி!
மனிதநேயம்
மறவா இயற்கை
கோடை மழை !
மரத்தின் நேயம் உணர்த்தும் ஹைக்கூ .
கவிஞர் வேம்பை தி . பாலாஜி !
எனக்கான மூச்சுக் காற்றை
தினமும் தருகின்றன
மரம் மரங்கள் !
தீபாவளியை இவர் பார்க்கும் பார்வை மிக வித்தியாசமானது.
கவிஞர் ஜனசக்தி !
அகில இந்திய
சுற்றுச்சுழல் மாசு தினம்
தீபாவளி !
துணிவின் அபசையத்தை அவசியத்தை வாழ்வி அர்த்தத்தை உணர்த்தும் ஹைக்கூ .
கவிஞர் க .மாரிமுத்து
இறக்க ஒரு நொடி போதும்
வாழ ஒவ்வொரு நொடியும் தேவை
துணிச்சல் !
பெருகிவரும் கட்டடங்களின் தீமையை உணர்த்தும் ஹைக்கூ .
கவிஞர் இரா .ஆறுமுகம் !
பரிதவிக்கிறது பசுமை
கான்கிரீட் காடுகளின்
விரிவாக்கம் !
மனிதநேயம் மறந்து வருவதை உணர்த்தும் ஹைக்கூ .
கவிஞர் தி .சுபத்திரா !
எந்திரமான உலகில்
தேடப்படும் அறிய பொக்கிசமாய்
மனிதநேயம்
மாற்றுத்திறனாளிகளின் மாண்பை உணர்த்தும் ஹைக்கூ .
கவிஞர் உ .சின்னத்துரை !
மற்றவர்களைக் காட்டிலும்
திறமைகளால் உயர்கிறான்
மாற்றுத்திறனாளி !
காதலில் ஊடல் பற்றிய ஹைக்கூ நன்று .
கவிஞர் துளிர் !
நீயும் நானும் பேசாதபோது
நமக்காக பேசுகிறது
காதல் !
கவிஞர் ந .ஆனந்தஜோதி !
விலை கேட்டால்
தலை சுற்றும்
தங்கம் !
ராசிபலன் எழுதி பக்கம் நிரப்பி பணம் பார்த்து வருகின்றன பத்திரிகைகள் .மூட நம்பிக்கை விதைக்கும் ஊடகங்களை வெட்கப்பட வைக்கும் ஹைக்கூ .
கவிஞர் இளங்கோ வரதராசன் !
காடும் பகலாவுமாய் மகிழ்வு
பொங்குமென்று ராசி பலன்
சாலையோரப் பிச்சைக்காரன் !
கடவுளின் பெயரால் நடக்கும் கலவரங்களை கண்டிக்கும் ஹைக்கூ .
கவிஞர் செ. முருகேசன் !
விநாயகர் ஊர்வலம்
மரணத்தை நோக்கி
பிள்ளையார் !
குடும்பத்தின் ஏழ்மையை , குடும்பத்தலைவனின் பொறுப்பற்ற தன்மையை உணர்த்தும் ஹைக்கூ .
கவிஞர் சு .ஆரோக்கிய மேரி !
தாலி கட்டியவனோ எந்நேரமும்
டாஸ்மாக் தண்ணீரில்
மனைவியோ கண்ணீரில் !
விலைவாசி உயர்வு ஏழைகளை வாட்டுகிறது .விலைவாசி ஒருவழிப் பாதையாக ஏறுகிறது ஆனால் இறங்குவதே இல்லை .
கவிஞர் பொன் .முரு .காமராசன் .
மனிதநெரிசலில்
சிக்கி தவிக்கிறது
விலைவாசி !
சாலைகள் போடுவதிலும் ஊழல் நடக்கிறது .அதனால் குறுகிய நாட்களில் சாலை குண்டும் குழியுமாகி விடுகிறது .
கவிஞர் இரா .பாக்யராஜ் !
சின்னச்சின்ன குளங்கள்
சாலை முழுவதும்
தொடர் மழை !
இந்த நூலின் வெற்றியைப் பறை சாற்றும் ஹைக்கூ .
நூலின் பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன் !
முயற்சி ஊன்றுகோல் துணையுடன்
துளித்துளியாய் சாதனை
கவித்துளி பயணம் !
மொத்தத்தில் மாற்றுத்திறனாளிகள் மட்டற்ற படைப்பாளிகள் என்பதை பறை சாற்றும் நூல் .தொகுப்பு நூலில் பங்குபெற்ற 37 படைப்பாளிகளுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக