நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! poetramesh@gmail.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
அன்பு நிலையம் !
11.புண்ணியகோட்டி நகர்
சலவன் பேட்டை
வேலூர் .632001.
விலை ரூபாய் 150.செல் 9865224292.
பனித்துளியில் பனைமரம் வித்தியாசமான தலைப்பு .பனைமரத்தில் பனித்துளி பலரும் பார்த்து இருப்போம் .இது சராசரி பார்வை. பனித்துளியில் பனைமரம் பார்ப்பது கவிப்பார்வை .இயற்கையை மட்டும் பாடுவதுதான் ஹைக்கூ என்று இலக்கணம் வகுத்துக் கொண்டு அந்த எல்லையில் நின்று நூல் முழுவதும் இயற்கை இயற்கை இயற்கை தவிர வேறில்லை என்று முழுக்க முழுக்க இயற்கையை பாடு பொருளாக்கி சிந்திக்க வைக்கும் ஹைக்கூ படைத்துள்ளார் .பாராட்டுக்கள் .
ஹைக்கூ உலகில் தனி முத்திரை பதித்து வரும் கவிஞர் ந .க. துறைவன் அணிந்துரை மிக நன்று .படிக்கும் வாசகர் மனதில் காட்சிப் படுத்தும் வகையில் வடிப்பது ஹைக்கூ உத்திகளில் ஒன்று .நூலில் ஏராளமான காட்சிப் படுத்தும் ஹைக்கூ உள்ளன .
பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ .
பூக்களைப் பார்த்தும்
ஆனந்தம் அடைந்தது
வண்ணத்துப்பூச்சி !
படிப்பாளி உணர்ந்த உணர்வை வாசகருக்கும் உணர்த்தும் உன்னதம் தான் ஹைக்கூ .இந்நூலின் தலைப்பை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
புல்லில் பனித்துளி
பனித்துளியில்
பனைமரம் !
ஆமை என்றதும் அனைவரின் நினைவிற்கு வருவது அதன் ஓடு.ஆமையின் ஓடு அதற்கு நிழல் தரும் கூடு .தன் நிழலை தானே பயன்படுத்திக் கொள்ளும் கட்சியைப் பார்த்து வடித்த ஹைக்கூ .
கொல்லும் கோடை
நிழலில் இளைப்பாறும்
ஆமைகள் !
ஒன்றைச் சொல்லி மற்றொன்றை நினைக்க வைக்கும் யுத்தியும் ஹைகூவில் உண்டு . அந்த வகையில் வடித்த ஹைக்கூ ஒன்று .
பூக்களுக்கு அச்சம்
நெருங்கி வருகின்றன
வண்டுகள் !
சோகத்திலும் சுகம் காணலாம் .பானை உடைந்து விட்டதே என்று வருந்துவது விடுத்து அதையும், கவிதைக்கண்ணுடன் ரசிக்கும் ரசனை நன்று .
குயவனின்
உடைந்த பானை
பிறை நிலவு !
ரோஜாவை பாடாத கவிஞரே இல்லை .அனைத்துக் கவிஞர்களின் பாடுபொருள் ரோஜா.நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்கள் ரோஜாவைப் பார்க்கும் பார்வை தனி விதம் .புது ரகம் .
சிரிக்கும் ரோஜாவும்
கண்ணீர் வடிக்கும்
பனித்துளி !
நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்றார் காந்தியடிகள் .ஆனால் விவசாயிகள் இன்று மகிழ்வாக இல்லை .அண்டை மாநிலங்கள் தமிழக விவசாயிகளை மனிதாபிமானமற்ற முறையில் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன .நீதிமன்ற தீர்ப்புகளையும் மதிப்பது இல்லை தமிழக விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் இன்றி இரத்தக் கண்ணீர் வடித்து வருகின்றனர் .சிலர் மனம் வெறுத்து தற்கொலையும் புரிகின்றனர் .விவசாயிகளின் துன்பம் உணர்த்தும் ஹைக்கூ நன்று .என்னதான் இயற்கையை பற்றி பாடினாலும் பிரச்சனைப பற்றிப் பாடும் போது வாசகர் மனதில் அதிர்வுகள் அதிகம் உருவாகும் என்பதற்கு எடுத்துக்காட்டு .
உணவின்றி விவசாயி
வயிறு பெருத்திருக்கிறது
காவல் பொம்மைக்கு !
பறவைகளின் சோகத்தையும் ஹைக்கூ கவிதையில் உணர்த்தி உள்ளார் .
கூடு திரும்பவில்லை
கடைசி சுள்ளிக்காகப்
பறந்த பறவை !
இந்த ஹைக்கூ படிக்கும்போது நம் வீட்டில் இருந்து சென்ற வீடு திரும்பாத உறவை நினைவுப் படுத்தும் .ஒரு ஹைக்கூவை படைப்பாளி மனதில் தோன்றியது போக வாசகர்கள் தனக்குத் தோன்றும் பல பொருள்களில் பொருள் கொள்ளலாம் .ஹைக்கூ கவிதையின் தனிச் சிறப்பு .
நிலாவைப் பாடாத கவிஞரும் ஒரு கவிஞரா ? என்பார்கள் .நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்களும் நிலாவைப் பாடி உள்ளார் .
புள்ளிகளை வைத்துவிட்டு
கோலம் போடாமல் தவிக்கிறாள்
நிலவுப்பெண் !
நிலா நிலா ஓடி வா ! மல்லிகைப் பூ கொண்டு வா ! என்ற பாடல் யாவரும் அறிந்த ஒன்று .அதையே மாற்றி சிந்தித்து ஹைக்கூ வடித்துள்ளார் .
எத்தனை பேருக்கு
மல்லிகை கொண்டு வரும்
ஒற்றை நிலவு !
இயற்கையை ரசிப்பது ஒரு கலை .அந்தக் கலை கைவரப்
பட்டவர்களுக்கு கவலை காணாமல் போகும் .வாழ்க்கை இனிக்கும்.நோய்கள் வருவதில்லை . மின்மினி ரசிப்பதும் சுகமான அனுபவம்
யார் அணைப்பார்கள்
இரவில் ஒளிரும்
மின்மினி !
இலைகள் உதிர்ந்த மரம் பார்த்தும் ஹைக்கூ வடித்துள்ளார் .
வேண்டுதலின்றி
மரங்களும் மொட்டை
இலையுதிர் காலம் !
உற்று நோக்கினால் ஹைக்கூ வடிக்கலாம் என்பதை உணர்த்திடும் நூல் .இந்த நூல் படித்து முடித்தவுடன் படித்த வாசகரும் ஹைக்கூ எழுதத் தொடங்கி விடுவார்கள் . தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி படிப்பாளி நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக