உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி !





உனக்காகவே மயங்குகிறேன் !

நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா !

அணிந்துரை கவிஞர் இரா .இரவி !

பதிப்பாளர் கவிஞர் சோலை தமிழினியன் !

நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் மதுரையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க செந்தமிழ்க் கல்லூரியில் பயின்றவர். தற்போது குடும்பத்துடன்  காந்தியடிகள் பிறந்த மாநிலமான குஜராத்தில் வாழ்ந்து வருபவர் .தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள்தான் தமிழை மறந்து வருகின்றனர் .தமிழை நேசிக்க மறுத்து வருகின்றனர். ஆங்கில மோகத்தில் அலைகின்றனர் .ஆனால் தமிழகம் அல்லாது பிற மாநிலங்களிலும் , பிற நாடுகளிலும் வசிக்கும் தமிழர்கள் தமிழை நேசிக்கின்றனர் என்பது உண்மை .அதற்கு எடுத்துக்காட்டு கவிதாயினி யாத்விகா. நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் குஜராத்தில் வாழ்ந்த போதும் தமிழ் மீது மாறாத அன்பும் , பாசமும், நேசமும் வைத்துள்ளவர் .


இவரை நான்  முக நூல் வழியாகவே அறிவேன் .என்னுடைய கவிதைகளை முக நூலில் பார்த்தால் உடன் பாராட்டி கருத்தைப்  பதிவு செய்து விடுவார்கள் .என் கவிதை மட்டுமல்ல, இனியநண்பர் வித்தககவிஞர் 
பா .விஜய் உள்பட பலரின் கவிதைகளின் ரசிகை .கவிதையை ரசிப்பதோடு நின்று விடாமல் கவிதைகள் எழுதி நூலாக்கி விட்டார்கள். என்னுடைய கவிதைகளின் ரசிகைக்கு அணிந்துரை எழுதிட கிடைத்த வாய்ப்பை பெருமையாகக் கருதுகின்றேன் .இலக்கியப் பணிக்கு கிடைத்த அங்கீகாரம் .  

இவருடைய கவிதைகளை முக நூலில் படித்து விட்டுப் பாராட்டி இருக்கிறேன் .மொத்தமாக நூலாகப் பாரத்தபோது வியந்து போனேன் . கவிதை ரசிகர்களிடம் உங்களுக்கு கவிதைகளில் பிடித்தது எது? என்று கேட்டால் காதல் கவிதை என்றே சொல்வார்கள் .காரணம் காதல் கவிதை படிப்பது சுகம் .ரசிப்பது சுகம் .படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவுகளை மலர்விக்கும் ஆற்றல் காதல் கவிதைகளுக்கு மட்டுமே உண்டு . இந்த நூலில் உள்ள கவிதைகளுக்கும் அந்த ஆற்றல் இருக்கின்றது. இந்த நூலைப் படித்துப் பார்த்தால் நான் எழுதியது உண்மை என்பதை உணர்வீர்கள் .
எள்ளல் சுவையுடன் பல கவிதைகள் உள்ளன .கவிதைக்கு மட்டுமல்ல காதலுக்கும் பொய் அழகு என்பது காதலர்கள் அறிந்த உண்மை .

குடும்ப அட்டையில் 
உன் பெயர் 
சீனி தேவையில்லை ...

ஒருபெண்ணின் எண்ணம் பெண்ணிற்குதான் தெரியும் .பெண்ணின் இயல்பை படம் பிடித்துக் காட்டும் கவிதை நன்று .

பார்த்தும் பார்க்காதது 
போல் 
போகிறாய் !
நடிக்க தெரியாமல் 
நான் போனதும் 
திரும்பி பார்க்கின்றன 
உன் கண்கள் !

இந்தக் கவிதைஉலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவரின் இன்பத்துப்பாலையும் , கவியரசு கண்ணதாசன் கவிதை வரிகளையும் நினைவூட்டி வெற்றி பெறுகின்றன .  

நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் பெண்ணாக இருந்தபோதும் ஆண்களின் மன நிலையிலும் கவிதை எழுதி இருப்பது அவரது கவிதை ஆற்றலுக்குச்  சான்று . 

வேரிலும் 
பூ பூக்கிறதே ?
அட 
மரத்தடியில் 
நீ !

தேவதை என்பது கற்பனைதான் .ஆனால் தேவதைக்கு ஆடை என்றால் வெள்ளை என்று கற்பிதம் செய்ததை வித்தியாசமாக கவிதையில் வடித்துள்ளார் .

தேவதை 
வெள்ளை உடையில் 
மட்டுமே 
வரும் என 
யார் சொன்னது ?
நீ 
எல்லா உடையிலும் 
வருகிறாயே ...

.கவிதையின் மூலம் நவீன விஞ்ஞானக் கருதும் விதைத்து உள்ளார் .

நீ வேறெதுவும் 
செய்யவெண்டாம் !
உன் உடலில் உள்ள 
ஒரே ஒரு செல்லை 
மட்டும் தா !
உன்னைப்போல் 
ஒருத்தியை 
உருவாக்கி என்னுடனே 
வைத்துக் கொள்கிறேன் ! 

சொற்களின் நடை வசனம் .சொற்களின் நடனம் கவிதை .படிக்கும் வாசகர் சொக்க வைக்கும் சொல் விளையாட்டு கவிதை .அந்த ஆற்றல் காதல் கவிதைக்கு உண்டு .

பாறையில் 
உன் 
பெயரை எழுதினேன் 
சிற்பமாகியது கல் ...

ஆம் காதலியின் பெயர் உள்ள பாறை காதலனுக்கு சிற்பமாகவே தெரியும் .இது காதலித்தவர்களுக்கு  மட்டுமே புரியும் .

கவிதைக்கு உவமை அழகு .உவமையால்தான் கவிதைகள் உயிர் பெறும்.

நீ 
தங்கம் 
நான் நெருப்பு 
என் பார்வை படபடத்தான் 
மின்னுகிறது 
உன் அழகு ! . 

நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் யாரும் சிந்திக்காத விதத்தில்  வித்தியாசமாக சிந்தித்து கவிதை வடித்துள்ளார் .எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக எழுதி உள்ளார் .

உன்னை 
பின் தொடரும் 
உரிமை 
எனக்கு மட்டும்தான் 
உள்ளது .
இதை 
உன் நிழலிடம் 
சொல்லி வை .

நான் உன்னை காதலிக்கிறேன்  என்று அறிவித்து விட்டு  எந்தப் பெண்ணும் காதலிப்பதில்லை என்ற உண்மையை கவிதையில் உணர்த்தி உள்ளார் .பூ பூப்பது போல காதல் இயல்பாக மலரும் .காதல் மணி மனதிற்குள் அடிக்கும் .

சரியான முட்டாள் 
நீ 
நானா சொல்ல முடியும் !
நீயாதான் 
புரிந்துகொள்ள வேண்டும் .
நானும் உன்னை 
காதலிக்கிறேன் 
என்பதை !

கல்லூரியில் படிக்கும் காதலர்களின் மன நிலையை பிரிவின் வருத்தத்தை நுட்பமாக படசம் பிடித்துக் காட்டி உள்ளார் கவிதையில் 
.
விடுமுறைக்கு 
ஊருக்கு 
போக போகிறேன் 
என்றாய் !
மனது 
ஒப்பாரி வைக்க ஆரம்பித்தது
இன்னும் எத்தனை நாள்  
நடைப்பிணமாய் அலைய 
வேண்டுமோ ?

நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் சங்க இலக்கியம் படித்தவர் என்பதால் காதல் பிரிவின் வலியை  சங்க இலக்கியம்  போன்று வடித்துள்ளார் .

அணிந்துரையிலேயே அத்தனை  கவிதைகளையும் எழுதி விடுவோமோ ?என்ற அச்சம் காரணமாக இத்துடன் முடிக்கிறேன். அன்றும் இன்றும் என்றும் காதல் அழியாத ஒன்று .முக்காலமும் வாழ்வது காதல் .மேன்மையான காதல் உணர்வை மிக   மென்மையாக கவிதைகளில் வடித்துள்ளார் .காதலால்தான் இந்த உலகம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது .காதலால்தான் இந்த உலகம் சுட்டிக் கொண்டு இருக்கிறது .இந்த நூல் முழுவதும் காதல் ! காதல் ! காதல்  தவிர வேறு இல்லை ..நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் இல்லத்தரசி .அவரது பெற்றோர்களுக்கும் ,  இவர் எழுதிய கவிதைகளை நூலாக்க ஒத்துழைப்பு நல்கி உள்ள அவரது காதல் கணவர் கார்த்திக் அவர்களுக்கு  பாராட்டுக்கள். . 

எழுத்து டாட் காம் இணையத்தில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார்கள் . " நற்பா புனை நன்மணி-2013" எனும் விருது பெற்றுள்ளார்கள் .வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் .

கருத்துகள்