படித்ததில் பிடித்தது !சதுரகிரி ! எல்.முருகராஜ் --


படித்ததில் பிடித்தது !
சதுரகிரி !  எல்.முருகராஜ்
-- 
மதுரை- ஸ்ரீவில்லிப்புத்தூர் நெடுஞ்சாலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் இருக்கிறது கிருஷ்ணன் கோயில். இங்கிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது வத்திராயிருப்பு, வத்திராயிருப்பிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் இருப்பது தாணிப்பாறை.
இதுவே சதுரகிரி மலையின் அடிவாரம்.
சதுரகிரி பிரமிப்பு, மகிழ்ச்சி, இன்பம், பக்தி, சித்தி முதலியனவற்றை உண்டாக்கக்கூடிய பிரமாண்டம்.
இயற்கை வளங்களும், மூலிகைக் காடுகளும், நீர் நிலைகளும், விலங்குகளும், பறவைகளும், குகைகளும், கோயில்களும் நிறைந்த மலை. இதிகாசங்களிலும், புராணங்களிலும் இடம் பெற்றிருக்கும் ஆன்மிக சிறப்பும், பதினெட்டு சித்தர்களும், பற்பல ஞானிகளும், ரிஷிகளும் உருவமாய் வாழ்ந்த சிறப்பும், அருவமாய் உலவும் பெருமையும் கொண்டிருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்தில் சுமார் 66 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மலையின் அடிவாரத்திலிருந்து சுமார் 10 கி.மீ. மலை ஏறினால் மலைமேலிருக்கும் மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களுக்குச் செல்லலாம். சற்று கடுமையான மலையேற்றம்தான். சீரற்ற படிகள், சறுக்கும் பாறைகள், ஒத்தையடிப் பாதைகள், கரடு முரடான ஏற்ற இறக்கங்கள், செங்குத்தான வழுக்குப் பாறைகள்; கரடியும் குரங்கும், பாம்பும் தொந்தரவு தருமோ எனப் பயப்படுத்தும் காடுகள்; நீரோடும் வழித்தடங்களை தாண்டியபடி ஒருவித சாகஸத்துடன் கடக்க வேண்டியிருக்கும்.
இங்கு அமாவசை, பவுர்ணமி தினங்களிலும் ஆடி அமாவசை தினங்களிலும் திரளும் கூட்டம் இப்போது சாதாரண நாட்களிலும் வருகிறது.
நீண்ட நாட்களாகவே சதுரகிரி பயணம் செல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன். அது கடந்த வாரம் எதிர்பாராமல் வாய்த்தது. மனதுவைத்து அழைத்த சுந்தர மகாலிங்கத்திற்கு நன்றி சொல்லி விட்டு மேலேறினேன்.
மலை மீது உணவு இலவசமாக கிடைக்கும் ஆனால் வழியில் மினரல் வாட்டர் குடித்து பழகியவர்களுக்கு அந்த தண்ணீர் கிடைக்காது ஆகவே கையோடு எடுத்துச் செல்லுங்கள் என்ற அறிவுரையின்படி தண்ணீர் பாட்டிலுடன் மலையேறினேன். மலை ஏற, ஏற போட்டிருக்கும் சட்டையும் கையில் கொண்டு போன தண்ணீர் பாட்டிலும் கூட பெரும் சுமையாக இருந்தது.
அப்போதுதான் கவனித்தேன் சுமார் 30 கிலோ எடையுள்ள சமையல் கேஸ் சிலிண்டரை தூக்கிக் கொண்டு அநாயசமாக ஒரு பெண் மலையேறிக் கொண்டு இருந்தார், படம் எடுக்கும் போது சிரித்தார்.
பேச்சியம்மாள் என்ற பெயர் கொண்ட அந்த பெண்ணின் சிரிப்பிற்கு பின் வேதனையான கதை இருந்தது.
டாஸ்மாக்கிற்கு பலியான குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று.
ஒரு காலத்தில் உழைத்து தன்னையும், பிள்ளைகளையும் கவுரமாய் காப்பாற்றிவந்த கணவர் போதைக்கு அடிமையாகி, இப்போது டாஸ்மாக்கே கதி என்றாகிப் போனபின் பாதியில் நிற்கும் பிள்ளைகளின் படிப்பையும், பசியால் துடிக்கும் வயிற்றையும் கவனிக்க வேண்டிய கட்டாயம் பேச்சியம்மாளின் "தலை'யில் விழுந்தது.
மகாலிங்கம் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் பலர் மேலே போய் அன்னதானம் செய்வார்கள், அதற்கான சமையல் சாதனங்கள் அரிசி காய்கறிகள் மற்றும் பக்தர்களின் உடமைகள் என்று சுமார் 30 கிலோ எடை கொண்டதாக பிரித்துக்கொண்டு மலையேறிப்போய் இறக்கி வைக்க வேண்டும். இதற்கு கூலியாக இருநூறு ரூபாய் வாங்கிக்கொள்கின்றனர்.
இதை செய்யும் பெண் சுமைகூலிகளில் ஒருவராக பேச்சியம்மாள் இருக்கிறார், இவரைப்போல சுமார் ஐம்பது பெண்கள் சுமைக்கூலிகளாக பக்தர்களின் சுமைகளை எதிர்பார்த்து அன்றாடம் அடிவாரமான தாணிப்பாறையில் காத்திருக்கின்றனர்.
நான்கு மணி நேரம் சுமையுடன் ஏறி இறக்கி வைத்து விட்டு திரும்பவேண்டும், வழியெங்கும் பரவி கிடக்கும் கரடு முரடான கற்களையும், முற்களையும் பார்த்து நடக்கவேண்டும், அப்படியே நடந்த போதும் கற்களில் பட்டு கால்களில் கொட்டும் ரத்தத்தை மண் போட்டு துடைத்துவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும், தாமதமானால் கூலி கொடுப்பதில் பிரச்னை செய்வார்கள், கொஞ்சம் கால் பிசகினாலே அதலபாதாளத்தில் விழவேண்டிய அபாயம். உண்டு, மழைக் காலங்களில் இந்த ஆபத்து இரண்டு மடங்காகும். இவ்வளவு சிரமமும் ஆபத்தும் இருந்தாலும் இந்த தொழிலை இந்த சுமையை சுமந்தாக வேண்டிய கட்டாயம். காரணம் குடும்பத்தின் வறுமையை சுமைப்பதைவிட இந்த தலைச் சுமையை ஒன்றும் சிரமமில்லை என்பது இவர்களது நியாயம்.
டாஸ்மாக் அரக்கனின் அசுரத்தனமான வளர்ச்சியால் இப்போது இந்த சுமைதூக்கும் தொழிலுக்கு வரும் பெண்கள் அதிகரித்து வருவதால் இந்த தொழிலுக்கும் போட்டி உண்டு. போட்டிகளைத் தாண்டி ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒரு சுமை கிடைத்தாலே பெரிய விஷயம். பல நாட்கள் சுமை கிடைக்காமல் வெறும் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு பிள்ளைகள் பசிக்காக கடன் வாங்கிக் கொண்டு திரும்பும் "பேச்சியம்மாக்களும்' உண்டு.
சதுரகிரி மலைப்பகுதியில் கடுமையான மழை காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்தது என்றொரு செய்தியை பார்த்தபோது முன்பெல்லாம் சலனப்படாத மனதில் இப்போது வலி உண்டாகிறது.
எத்தனை "பேச்சியம்மாக்கள்' சுமை இல்லாமல் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து திரும்பினரோ...
- எல்.முருகராஜ்
-- .

கருத்துகள்