தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே ! கவிஞர் இரா .இரவி !தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது ! 

கம்ப இராமாயணமா ? திருக்குறளா ? 

தலைப்புத் தந்தவர்! தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் . 

தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே ! 

கவிஞர் இரா .இரவி !

தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களே இல்லாமல் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை தேடித் தந்தது திருக்குறள் .உலகில் தமிழ் மொழி அறியாதவர்கள் கூட திருக்குறள் அறிந்துள்ளனர்.அதனால்தான் தமிழ்ப்பாட்டி  அவ்வை சொன்னாள். 

  ."அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக் 
     குறுகத் தரித்த குறள் .

திருக்குறளை மொழி பெயர்க்காத மொழி இல்லை .திருக்குறளை மொழி பெயர்க்காத மொழி மொழியே இல்லை .பெரும்பாலான உலக மொழிகள் யாவிலும் மொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். திருக்குறள் அளவிற்கு பெரும்பாலான மொழிகளில் 
கம்ப இராமாயணம் மொழி பெயர்க்கப்பட வில்லை என்பது உண்மை .
பெற்ற தாய் பசியோடு இருந்தால் பஞ்சமா பாதகம் செய்தாவது  தாய் பசியினை போக்கிடு என்றுதான் வேதங்கள் சொல்கின்றன .ஆனால் திருவள்ளுவரோ .

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க    ( 656)
சான்றோர் பழிக்கும் வினை .

பெற்ற தாய் பசியோடு இருந்தாலும் தவறான செயல் செய்து பசி போக்க நினைக்காதே ! அறம் பற்றி இவ்வளவு உயர்வாக உலக இலக்கியம் எதிலும் சொல்லவில்லை என்பது உண்மை . 

திருக்குறளின் அருமை பெருமை நன்கு உணர்ந்த காரணத்தால்தான் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு "என்று பாடினான் மகாகவி பாரதி .

காந்தியடிகள் அடுத்தபிறவி என்று ஒன்று இருந்தால் தமிழனாகப் பிறக்க வேண்டும் .காரணம் திருக்குறளை எழுதப்பட்ட மூல மொழியான தமிழில் படித்து உணர வேண்டும் .என்று ஆசைப்பட்டார். காந்தியடிகள்  இராமனை வணங்கிய போதும் அவர் திருக்குறளை நேசித்த அளவிற்கு கம்ப இராமாயணத்தை நேசிக்கவில்லை என்பது உண்மை .காந்தியடிகளை அகிம்சை வழியில் நடக்கக் காரணமாக இருந்தது திருக்குறள் .  

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண    ( 314 )
நன்னயம் செய்து விடல் . 

விவிலியம்   கூட ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னம் காட்டு என்கிறது .திருவள்ளுவர் ஒருபடி மேலே சென்று உனக்கு தீங்கு செய்த பகைவனும் வெட்கப்படும் வண்ணம் நன்மை செய் .இதுபோன்ற ஒப்பற்ற அகிம்சை கருத்தை உலக இலக்கியம் எதிலும் சொல்லவில்லை என்பது உண்மை . கம்ப இராமாயணதிலும் சொல்லவில்லை .

மனிதனுக்கு அழகு ! நன்றி மறக்காதது .அதை வலியுறுத்தும் அற்புத திருக்குறள் .

நன்றி மறப்பது நன்றன்று ; நன்றல்லது    ( 108 )
அன்றே மறப்பது நன்று .

ஒருவர் உனக்கு செய்த நன்மையை ஒருபோதும் மறக்காதே .செய்த தீமையை உடன் மறந்து விடு .மனிதநேயம் கற்பிப்பது ஒப்பற்ற திருக்குறள் .வாழ்வியல் நெறி போதிப்பது உயர்ந்த திருக்குறள் .

இறுதி மூச்சு வரை தமிழ்ச் சமுதாயத்தின் எழுச்சிக்காகப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் இலட்சியப் பாதைக்குக் காரணமாக இருந்தது திருக்குறள் .

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்    ( 423)
மெய்ப்பொருள் காண்பது அறிவு .

எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் அப்பொருளின் மெய்யான பொருளை ஆராந்து அறிவதே அறிவு . 

தந்தை பெரியார் சொல்வார் " நான் சொல்வதற்காக எதையும் ஏற்க வேண்டாம் .உங்கள் அறிவுக்கு சரி என்று பட்டால் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் ." தந்தை பெரியார் கம்ப இராமாயணத்தைச் சாடியவர் திருக்குறளைப் போற்றி திருக்குறள் மாநாடு நடத்தினார் .

மாமனிதர் அப்துல்கலாம் நேசிப்பது திருக்குறள் .அதனால்தான் எங்கு பேசினாலும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசி வருகிறார் அவருக்கு மிகவும் பிடித்த திருக்குறள் .

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் ; மாந்தர்தம்   ( 595 )
உள்ளத்து அனையது உயர்வு .  

நீரின் உயரத்திற்கு ஏற்ப  மலரின் காம்பு உயரும் .மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப வாழ்க்கை உயரும் .

வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் சாதனையாளர்கள் அனைவரும் திருக்குறள் வழி நடந்தவர்கள் .இறந்தும் மக்கள் மனங்களில் வாழும் நல்லவர்கள் அனைவரும் திருக்குறள் வழி நடந்தவர்கள் என்பது உண்மை . திருக்குறளில் இல்லாத கருத்துக்களை இல்லை என்று சொல்லும் அளவிற்கு வாழ்வில் உள்ள  அனைத்து  பொருள்களிலும் எழுதி உள்ளார்.

தமிழண்ணல் , இரா .இளங்குமரனார் ,முனைவர் இரா .மோகன் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் யாவரும்  மிகவும்நேசிப்பது திருக்குறளே. அவர்கள் நடப்பதும் திருக்குறள்வழியே.  அதனால்தான் தமிழ் உலகம் போற்றுகின்றது .

சிறந்த சிந்தனையாளர் , பேச்சாளர் , எழுத்தாளர் முது முனைவர்  
வெ. இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் மிகவும் நேசிப்பது திருக்குறளே. அதனால்தான் முதல் முனைவர் பட்ட ஆய்வு " திருக்குறளில் உள்ள மனிதவள் மேம்பாடு " இரண்டாவது முனைவர் பட்ட ஆய்வு  " திருவள்ளுவரும் சேக்ஸ்பியரும் " ஆகும் .முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு தேர்ந்தெடுத்த தலைப்புகளேஅவரது  திருக்குறள் பற்றைப்  றை சாற்றும்.திருக்குறள் ஆய்வோடு நின்று விடாமல் திருக்குறள் வழி  வாழ்ந்து வருகிறார் . வெற்றி பெறுகின்றார் .

செக்கோஷ்லேவியாவில் இருந்து  தமிழ் படிக்க தமிழகம்  வந்தார் . ஒரு  அறிஞர் அவரிடம் உலக மொழிகள் பல இருக்க தமிழை தேர்ந்தெடுத்து படிக்க என்ன ? காரணம் என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் .

இனிய உளவாக இன்னாத  கூறல்     (  100 )
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று .
 
இனிய சொற்கள் எனும் கனிகள் இருக்கும்போது இன்னாத சொற்களான கடும் சொற்களான காய்கள் எதற்கு ?

" இந்த திருக்குறளை மொழி பெயர்ப்பில் படித்தேன் .இவ்வளவு நல்ல கருத்து உள்ள திருக்குறளை தமிழில் எழுதி உள்ளார்கள் என்ற காரணத்தால் தமிழைப் படிக்க விரும்பினேன் ."

திருக்குறள் என்பது மூலம்.ஆனால்  கம்ப இராமாயணம் என்பது வால்மீகி இராமாயணம் என்பதைத்  தழுவி எழுதப்பட்ட நகல் .கம்ப இராமாயணத்தில் நம்ப முடியாத கற்பனைக் கருத்துக்கள் உள்ளன. திருக்குறளில் நம்ப முடியாத கருத்து எதுவும் இல்லை .

மதுரையில் இருந்த இங்கிலாந்து வெள்ளையர் எல்லீசர் திருக்குறளின் அருமை உணர்ந்து அன்றே திருவள்ளுவர் உருவம் பொறித்து பொற்காசு வெளியிட்டுள்ளார் .  

திருக்குறளில் இன்பத்துப்பாலில்   கூட  இன்பம் உண்டு .ஆனால் ஆபாசம் இல்லை .ஆனால் கம்ப இராமாயணத்தில் ஆபாசம் உண்டு என்பதற்கு அறிஞர் அண்ணா எழுதிய கம்பரசம் நூலே சாட்சி .
இரசியாவில் பாதுக்காக்கப்பட்டு வைத்திருக்கும் உலக முக்கிய நூல்களில் திருக்குறள் உள்ளது .கம்ப இராமாயணம் இல்லை .
திருக்குறளின் அருமை பெருமை உலகம் அறிந்து வைத்துள்ளது. ஆனால் தமிழர்கள்தான் திருக்குறளின் அருமை ,பெருமை இன்னும் உணரவில்லை .திருக்குறள் படிக்க மட்டுமல்ல வாழ்வில் கடைபிடிக்க வழி காட்டும் நூல். வாழ்வியல் இலக்கியம் .

தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே என்பதை தமிழர்கள் யாவரும் உணர்ந்து திருக்குறள் வழி நடந்து வாழ்வில் வெற்றி பெறுவோம் .மனிதனை மனிதனாக வாழ வைப்பது திருக்குறள் .மகத்தான திருக்குறளைப் போற்றுவோம் .
நம் குழந்தைகளுக்கும் திருக்குறளைப் பயிற்றுவிப்போம். எந்நாட்டவர்க்கும் , எந்த மத்தவர்க்கும் , எந்த இனத்தவர்க்கும் ,எந்த மொழியினருக்கும் எக்காலமும்  பொருந்துவது திருக்குறள். 

ஒட்டுமொத்த மனித இனத்திற்காக எழுதப்பட்டது திருக்குறள் .ஈடு இணையற்ற இலக்கியம் திருக்குறள் .உலகப் பொதுமறை என்பது முற்றிலும் உண்மை .திருக்குறளை தேசிய  நூலாக அறிவிக்கத்  தயங்குபவர்களுக்கு தமிழர்களின் வாக்கு இல்லை என்று அறிவிப்போம் .

தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே ! திருக்குறளே !திருக்குறளே !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்