தலைமுறைகள் ! ஒளிப்பதிவு இயக்கம் பாலு மகிந்திரா ! இசை இளையராஜா ! இணை தயாரிப்பு இயக்குனர் சசிக்குமார் ! திரைப்பட விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி !

தலைமுறைகள் !

ஒளிப்பதிவு இயக்கம் பாலு மகிந்திரா  !

இசை இளையராஜா !

இணை தயாரிப்பு  இயக்குனர் சசிக்குமார் !


திரைப்பட விமர்சனம்       ! கவிஞர் இரா .இரவி !


சராசரி மசாலாப் படம் இல்லை .மதுக்கடை காட்சிகள்  இல்லை. ஆங்கிலச் சொற்கள் கலந்த பாடல்கள் இல்லை .இரைச்சல் மிக்க பாடல்கள் இல்லை .குத்துப்பாட்டு இல்லை .நடிகையின் கவர்ச்சி நடனம் இல்லை .சண்டைகாட்சி இல்லை .வெட்டுக் குத்து  இல்லை துப்பாக்கிச் சூடு இல்லை .இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை. மொத்தத்தில் வழக்கமாக தற்போது வரும் திரைப்படங்களின் எந்த அம்சமும் இல்லை .

இந்தபடத்தில் பாசம் உண்டு ,நேசம் உண்டு ,பண்பாடு உண்டு ,மனித நேயம் உண்டு .நட்பு உண்டு ,இயற்கை உண்டு ,பசுமை உண்டு . 

காலத்தால் அழியாத பல நல்ல திரைப்படங்களை இயக்கி திரு .பாலு மகிந்திரா .அவர்கள் இந்தபடத்தில் தாத்தாவாக நடித்து உள்ளார்.இல்லை.இல்லை . தாத்தாவாக வருவது பாலு மகிந்திராவா? நம்ப முடிய வில்லை .அவ்வளவு இயல்பான கிராமத்து முதியவர் போன்ற நடிப்பு .தாத்தாவாக வாழ்ந்து உள்ளார் .தனது பிம்பங்களை எல்லாம் மறந்து விட்டு ஒரு சராசரி கிராமத்து  தாத்தாவாக  வந்து உள்ளத்தைக்  கொள்ளை கொள்கிறார் .பேரனாக நடித்துள்ள சிறுவன் மிக நன்றாக நடித்துள்ளான். இந்தப்படம் பார்க்கும் ஒவ்வொரு முதியவருக்கும் இப்படி ஒரு பேரன் இல்லையே என்ற ஏக்கமும் இந்தப்படம் பார்க்கும் சிறுவர்களுக்கு இப்படி ஒரு தாத்தா இல்லையே என்ற ஏக்கமும் வருவது உறுதி. 
.
தாத்தா பேரன் உறவை மிக நுட்பமாக திரையில் செதுக்கி நடித்துள்ளார் பாராட்டுக்கள் .நல்ல திரைப்படம் பார்த்து பல நாட்கள் ஆகி விட்டதே என்ற ஏக்கத்தை தீர்க்க வந்தபடம்  .இசை ஞானி இளையராஜாபோல பின்னணி இசை அமைக்க வேறு யாராலும் முடியாது என்பதை நிருபித்துள்ள படம் .இந்தபடத்தில் இசை கதையோடு நம்மை ஒன்ற வைத்து நேரடியாக ஒரு நிகழ்வை பார்ப்பது போன்ற உணர்வை வரவழைக்கும் இசை .படம் பார்க்கிறோம் என்பதையை மறக்கடிக்கும் அற்புதமான படம் .

காதலித்து கிறித்தவப்பெண்ணை மணக்கிறான் மகன் .தந்தைக்கு விருப்பம் இல்லை .தந்தை கிராமத்து சாதி மதம் சார்ந்த  பழக்கத்தில் உள்ளவர் .மருமகள் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள் தமிழும் பேச வராது .என்பதை அறிந்து , வீட்டிற்கு வந்த மகனையும் மருமகளையும் திட்டி விரட்டி  விடுகிறார் . நான் செத்தாலும் வராதே என்று மகனிடம் சொல்லி விடுகிறார் .

மகன்  மருமகள் இருவரும் மருத்துவர்கள் சென்னையில் வாழ்கிறார்கள் .இருவரும் வீட்டில் ஆங்கிலமே பேசுகின்றனர். அவர்களுக்கு ஒரு மகன் அவன் படிப்பது ஆங்கிலப் பள்ளியில் எனவே அவனுக்கும் தமிழ் பேச வராது .12 வருடங்கள் கழித்து கிராமத்தில் இருந்து நண்பன் தொலைபேசியில் தெரிவிக்கிறான் . வயதான  தந்தைக்கு வாத நோய் வந்து 2 மாதங்களாகி விட்டது. மருத்துவமனை   சென்று சிகிச்சை எடுத்து சரியாகி வீட்டுக்கு வந்துள்ளார் .என்று சொல்லவும் உடன் மகன் தந்தையைப் பார்க்க சொந்த கிராமத்திற்கு செல்கிறான் .12 வருடங்கள் கழிந்தபோதும் தந்தைக்கு மகன் மீதான கோபம் போக வில்லை .திட்டுகிறார் .வீட்டில் உள்ள தங்கை வரவேற்கிறார் .அண்ணி எங்கே ? என்றபோது மகனுக்கு தேர்வு நடப்பதால்  அண்ணியும் தன மகனும் இரண்டு நாளில் வருவார்கள் .என்கிறான் .வயதான தந்தையை உடன் இருந்து கவனிக்கிறான் மருத்துவர் என்பதால் மாத்திரை தந்து சிகிச்சை அளித்து இதம் தருகிறான் .

இரண்டு நாளில் அவன் மனைவியும் மகனும் வருகின்றனர் .தாத்தா பேரனை பார்த்து நெகிழ்ந்து போகிறார் .கிராமத்தில் பாம்பு கடித்த பெண்ணை மருத்துவர் மகன் காப்பாற்ற, கிராம மக்கள் இங்கு ஒரு மருத்துவர் இருந்தால் நன்றாக இருக்குமே என்று வேண்டுகோள் வைக்க ,இதை கவனித்த மருத்துவ மருமகள் நானும் என் மகனும் இந்த கிராமத்தில் இருக்கிறோம் .என்று சொல்ல சென்னையில் உயர்வான ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் தமிழ் தெரியாத மகனை கிராமத்தில் தமிழில் படிக்க வைப்பதா ? அதிர்த்து விடுகிறான் .நீங்கள் இந்த கிராமத்தில் தமிழ் வழி பயன்றுதானே மருத்துவர் ஆனீர்கள்  .என் மகனும் ஆவான் என்கிறாள் .பேரனுக்கு தமிழ் பேச வராது என்பது அறிந்து அதிர்ந்து பொய் அவனுக்கு .நெல்லில் அ காட்டி தமிழ் கற்பிக்கிறார் .திருக்குறள் அகர  முதல தொடங்கி கற்க கசடற, எப்பொருள் , இன்னா  செய்தாரை வரை அவ்வையின் ஆதிச்சூடி  அனைத்தும்  சொல்லித் தருகிறார் .தாத்தாவிற்கு பேரன் ஆங்கிலமும் மிக அழகாக கற்பிக்கிறான் .தாத்தாவின் நண்பன் மரணம் தாத்தாவை கவலையில் ஆழ்த்த ,பேரன் தாத்தாவிடம் நீயும் ஒரு நாள் செத்து விடுவாயா ? என்று கேட்க மிக நெகழ்ச்சி.ஒரு நாள்  தாத்தாவும் இறந்து விடுகிறார் .

பேரனும் மருத்துவர் ஆகிறான் . 20 வருடங்கள் கழித்து பேரனுக்கு கவிதைக்கு பரிசு கிடைக்கின்றது .பரிசு பெறும்போது பரிசு பெறக் காரணமான தமிழ் கற்பித்த  தாத்தாவை நினைத்து கண் 
கலங்குகின்றான்  .பேரனாக கடைசி காட்சில் இயக்குனர், நடிகர் சசிக்குமார் வருகிறார் .தன்னுடைய குருவிற்காக இந்தப்படத்தின் இணை தயாரிப்பை ஏற்றுக் கொண்டஇயக்குனர் சசிக்குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள் . 

மகனாக நடித்து இருக்கும் சசி ,மருமகளாக நடித்து இருக்கும் ரம்யா சங்கர் ,பேரனாக நடித்து இருக்கு சிறுவன் காந்த் , தாத்தாவாக நடித்துள்ள பாலு மகிந்திரா அனைவருமே மிக நன்றாக நடித்து உள்ளனர் .இந்தப்படத்திற்கு விருது உறுதி . 

தமிழின் சிறப்பை கிராமத்தின்  சிறப்பை, கூட்டுக் குடும்பத்தின் சிறப்பை உணர்ந்தும் அற்புதமான படம் .படம் அல்ல பாடம் .ஆங்கில மோகத்தில் அலையும் தமிழ்ச்சமுதாயம் முழுவதும் அவசியம் பார்க்க வேண்டிய படம் .

அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்த்து இந்தப்படத்தை வெற்றிப் படமாக்குங்கள் .அப்போதுதான் தயாரிப்பாளர்கள் இதுபோன்ற நல்ல படங்கள் எடுக்க முன் வருவார்கள் .குறிப்பாக குழந்தைகளுடன் சென்று பாருங்கள் .
.
.

கருத்துகள்