முக நூலிற்காக நேர்முகம் ! கேள்விகள் ! கவிஞர் கொள்ளிடம் காமராஜ் . பதில்கள்; கவிஞர் இரா .இரவி !

முக நூலிற்காக நேர்முகம் !

கேள்விகள் ! கவிஞர் கொள்ளிடம் காமராஜ் .

பதில்கள்; கவிஞர் இரா .இரவி !

கேள்வி எண்: 1. தங்களுக்குத் தமிழ்மொழியின் மீது முதன் முதலாக எப்படி (கவிதை எழுதுவது, படைப்பிலக்கியத்தில் ஏதேனும் ஒன்றை எழுதுவது) ஆர்வம் அரும்பியது?

நான் கல்வி கற்றது மகாகவி பாரதியார் 4 மாதங்கள் ஆசிரியராகப் பணிப்  புரிந்த வரலாற்று சிறப்பு மிக்க சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் அங்கு நுழையும்போதே  மகாகவி பாரதியார் சிலை இருக்கும் .சிறு வயதிலேயே பாரதியின் மீது ஈடுபாடு இருந்ததால் கவிதை மீதும் ஈடுபாடு வந்தது .என்னுடைய முதல் கவிதை மதுரைமணி நாளிதழில் வந்தது .அச்சில் வந்ததது  கண்ட மகிழ்வில் தொடர்ந்து எழுதினேன்.

தமிழ்த் தேனீ முனைவர் மோகன் அவர்கள்தான் என்னுடைய எல்லா நூல்களுக்கும் அணிந்துரை தருவார்கள் .அவர் தரும் ஊக்கம்,பாராட்டு. மற்றும் முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் தொடர்ந்து 'இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்' என்று சொன்ன சொல் இவையே என்னை இலக்கியத்தில் இயக்கிக் கொண்டு இருக்கின்றன .
--------------------------------------------------------------------
கேள்வி எண்: 2.உங்களின் குடும்பத்தில் தங்களின் படைப்புக்களைப் படித்துவிட்டுப் பாராட்டுகின்ற முதல் நபர் யார்?

உண்மையைச்  சொல்வது என்றால் என் மனைவி மகன்கள் மூவருக்கும் என் மீது அன்பு உண்டு .ஆனால் அவர்களுக்கு இலக்கிய ஈடுபாடு  இல்லை .எனவே என் படைப்பை அவர்கள் படிப்பதில்லை. நானும் அவர்களை வற்புறுத்துவது இல்லை .

என்னுடைய மூத்த மகன் பிரபாகரன் மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் படிக்கிறான்.அவைக்கு  என்னுடைய 10 ஹைக்கூ கவிதைகள் பாடமாக உள்ளது .மதிப்பெண்ணுக்காக என் கவிதை படிக்கும்படி ஆனது .

இணையத்தில் என் கவிதையை லட்சக்கணக்கானவர்கள் படித்து உள்ளனர் . இணையகளின்  முகவரி  www.kavimalar.com www.eraeravi.com
வலைப் பூ முகவரி www.eraeravi.blogspot.in
உலகின் பல்வேறு பிரபல தமிழ்  இணையங்கள்  என் கவிதைகளை பதிப்பித்து வருகின்றன .300 மேற்பட்ட நூல்களுக்கு விரிவான விமர்சனங்கள் எழுதி இணையத்தில் பதிப்பித்து உள்ளேன் .
முக நூலில் தினமும் படைப்புகள் பதிவு செய்கிறேன் . முக நூல் நண்பர்கள் எண்ணிக்கை 5000.
--------------------------------------------------------------------------
கேள்வி எண்: 3.தந்தை ஈ.வே.ராவின் பகுத்தறிவுக் கொள்கைகளில் எந்த வயதிலிருந்து அதிக ஆர்வம் ஏற்பட்டது?

சிறு வயதில் அய்யப்பன் கோவில் பக்தர்கள் பஜனையில் கலந்து கொண்டு பக்திப் பாடல் பாடினேன் .  புரட்சிக் கவிஞர்  மன்றத்தின் தலைவர் திரு பி .வரதராசன் அவர்கள் எனக்கு பகுத்தறிவுப் பகலவன் தந்தை  பெரியார் நூல்கள் தந்து பேசி என்னை பகுத்தறிவாளனாக மடை மாற்றம் செய்தார் .அது மட்டுமல்ல எந்த கெட்டப் பழக்கமும் இல்லாமல் ஒழுக்கமாக வாழ்வதற்கும் அவரே எனக்கு முன்மாதிரி .
---------------------------------------------------------------------------
கேள்வி எண்: 4.சங்கம் வளர்த்த நான்மாடக் கூடல் நகரின் சிறப்பு குறித்துச் சில வரிகள்?
பிறந்த மண்ணான மதுரையை மிகவும் நேசிப்பவன் நான் .
மாமதுரை பற்றி நான் எழுதிய கவிதைகளே விடை சொல்லும் !
மதுரை மாநகரம் ! கவிஞர் இரா .இரவி

உலகப்பொது மறையாம் ஒப்பற்ற திருக்குறள்
உலகிற்கு அளித்த பெருமை பெற்ற மதுரை

செம்மொழி தமிழ்மொழி அழியாமல் இருக்க
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை

சதுரம் சதுரமாக வடிவமைத்த வடிவான நகரம்
சிறப்புகள் பல தன்னகத்தே கொண்ட மதுரை

மல்லிகை மலரை மலையென தினமும் இன்றும்
மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திடும் மதுரை

தாயுக்கு அடுத்தபடியாக மதுரை மக்கள் மதிப்பது
தாய்மண்ணான அழகிய நகரம் மதுரை

"சிலப்பதிகாரம் முதல் கணிப்பொறி" காலம் வரை
சிங்கார மதுரைக்கு "தூங்காநகரம் " என்று பெயர்

சூடான இட்லியும் சுவையான சட்னிகளும்
சூரியன் உறங்கும் நேரத்திலும் கிடைக்கும்

உலகில் மதுரைக்கு இணை எதுவுமில்லை
உலகம் உள்ளவரை மதுரைக்கு அழிவில்லை

..................................................................

மாமதுரை போற்றுவோம் ! மாமதுரை போற்றுவோம் !  
கவிஞர் இரா .இரவி !

கோயில்நகரம் என்ற  பெயர் பெற்ற மதுரை !
குணம் மிக்க நல்லவர்கள் வாழும் மதுரை !

சதுரம் சதுரமாக வடிவமைக்கப் பட்ட மதுரை !
சந்தோசம் வழங்கிடும் சீர் மிகு மதுரை !

உலகின் முதல் ஊர் கடம்பவன  மதுரை !
உலகின் முதல் மனிதன் வாழ்ந்த மதுரை !

தமிழ்மாதப் பெயர் வீதிகள் கொண்ட  மதுரை !
தமிழ் வளர்க்க   சங்கம் அமைத்த மதுரை !

வானுயர்ந்த கோபுரங்கள் வரவேற்கும் மதுரை !
வந்தாரை எல்லாம்  வாழ வைக்கும் மதுரை !

திருக்குறள் அரங்கேற்றம் நடந்திட்ட மதுரை !
திருவள்ளுவருக்கு வான்புகழ் தந்திட்ட மதுரை !

திருமலை நாயக்கர் மகால் உள்ள மதுரை !
திரும்பிய இடமெல்லாம் கலை நயம் மிக்க மதுரை !

மங்கம்மா ராணியின் அரண்மனை உள்ள மதுரை !
மகாத்மாகாந்தியின் அருங்காட்சியகம் உள்ள மதுரை !

பிரமாண்ட வண்டியூர் தெப்பம் உள்ள மதுரை !
பிரமிக்க வைக்கும் திருவிழாக்கள் நடக்கும் மதுரை !

கலைகளின் தாயகமாக விளங்கிடும் மதுரை !
காளைகளின் ஜல்லிக்கட்டு நடக்கும் மதுரை !

சமணர்களின் சிற்பங்கள் உள்ள மதுரை !
சைவர்களின் மடங்கள் உள்ள மதுரை !

சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் மதுரை !
சுந்தரம் மிக்க இயற்கைகள் நிறைந்த மதுரை !

மல்லிகையை ஏற்றுமதி செய்திடும் மதுரை !
மனங்களைக் கொள்ளைக் கொள்ளும் மதுரை !

அன்றும் இன்றும் என்றும் தூங்காத மதுரை !
அன்பைப் பொழிவதில் நிகரற்ற மதுரை !

புகழ் மிக்க பள்ளிவாசல்கள் உள்ள மதுரை !
புகழ் மிக்க தேவாலயங்கள் உள்ள மதுரை !

மதுரத்தமிழ் பேசும் மாசற்ற மக்களின் மதுரை !
மங்காத புகழ் பரப்பும் மாண்புமிக்க மதுரை !

வீரத்தின் விளைநிலமாகத் திகழும் மதுரை !
விவேகத்தின் முத்திரைப் பதிக்கும் மதுரை !

கடலைச் சேராத வைகை ஆறு ஓடும் மதுரை !
கட்டிடக் கலையை பறை சாற்றிடும் மதுரை !

கரகம் காவடி கூத்துக் கட்டும் மதுரை !
சிகரம் வைதாற்ப் போல சிறப்புப் பெற்ற மதுரை !

ஜில் ஜில் ஜெகர்தண்டா கிடைத்திடும் மதுரை !
ஜல் ஜல்  நாட்டிய ஒலி ஒலிக்கும் மதுரை !

பல்லாயிரம் வயதாகியும் இளமையான மதுரை !
பாண்டியர்கள் வரலாறு இயம்பும் மதுரை !

ஈடு இணையற்ற புகழ் மிக்க மதுரை !
இனியவர்கள் என்றும் விரும்பிடும் மதுரை !

-------------------------------------------------------------------------------------
கேள்வி எண்:5. அமெரிக்க நாட்டின் பட்டமளிப்பு நிகழ்ச்சியின் நிறை-குறைகள் என்னென்ன?
என்னுடைய கவிதை நூல்கள் இணையங்கள் ,இணையத்தை பார்த்தவர்கள் எண்ணிக்கை இவை எல்லாம் ஆராய்ந்து மதிப்புறு முனைவர் பட்டம் அனுப்பி வைத்தார்கள் .
--------------------------------------------------------------------------------------------------------
கேள்வி எண்: 6.இது வரை தாங்கள் எழுதிய நூல்கள் எத்தனை? நூல் வெளியிடும் போது நிகழ்ந்தச் சுவையான நிகழ்வுகள் குறித்துச் சில வரிகள்?

1. கவிதைச் சாரல் - 1997
2. ஹைக்கூ கவிதைகள் - 1998
3. விழிகளில் ஹைக்கூ - 2003
4. உள்ளத்தில் ஹைக்கூ - 2004
5. என்னவள் - 2005
6. நெஞ்சத்தில் ஹைக்கூ - 2005
7. கவிதை அல்ல விதை - 2007
8. இதயத்தில் ஹைக்கூ - 2007
9.மனதில் ஹைக்கூ 2010
10. ஹைக்கூ ஆற்றுப்படை2010
11.சுட்டும் விழி 2011

12. ஆயிரம் ஹைக்கூ .2013

என்னுடைய நூல் வெளியீட்டு  விழாவில் அகவிழி பார்வையற்றோர் விடுதி மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது .விடுதி நிறுவனர் பார்வையற்ற திரு எம் .பழனியப்பன் அவர்களுக்கு நூல் வெளியிட வந்து இருந்த மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் திரு .மருதமுத்து அவர்கள் மூலம் மனிதநேய மாமணி விருது வழங்கினேன் .   மறக்க முடியாத நிகழ்வு .

கேள்வி எண்: 7.சிற்றிதழ்களின் சிறப்பு குறித்தும் தங்களின் மனம் கவர்ந்த சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள், தினஇதழ்கள் குறித்துச் சில வரிகள்?

என்னுடைய வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் உரம் இட்டவர்கள் சிற்றிதழ் ஆசிரியர்களே .லட்சியத்தோடு சில ஆயிரங்களை மாதாமாதம் இழந்து இதழ் நடத்தி வருகின்றனர் .கவிதை உறவு ஆசிரியர் ஏர்வாடி
எஸ் .இராதா கிருஷ்ணன் ,பொதிகை மின்னல் கவிஞர் வசீகரன், ஏழைதாசன் கவிஞர் எஸ்  .விஜயகுமார் ,புதுகைத் தென்றல் திரு . புதுகை தருமராசன் ,மின்மினி கவிஞர்   கன்னிக்கோவில் இராஜா,  மனிதநேயம் திரு எ .எம் ஜேம்ஸ் ,முல்லைச்சரம் கவிஞர் பொன்னடியான் புதிய உறவு மஞ்சக்கல் உபேந்திரன் , உங்கள் பாரதி  ஓவியர் பாரதி வாணர் சிவா ,புதுவை கலாவிசு தேமதுரத்   தமிழோசை கவிஞர் தமிழாலயன்,  இலக்கியச் சோலை கவிஞர் தமிழினியன்   இப்படி  இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும் .

சிற்றிதழ்கள் ! பற்றி  நான் எழுதிய  கவிதை !

ஹைக்கூ           இரா .இரவி

ஆபாசம் இல்லாதது
அறிவு வளர்ப்பது
சீர்மிகு சிற்றிதழ்கள்

நடுப்பக்கம் நடிகை  இல்லை
நல்ல தகவல்கள் உண்டு
சீர்மிகு சிற்றிதழ்கள்

வளரும்படைப்பாளிகளின்
வட்ட மேஜை
சீர்மிகு சிற்றிதழ்கள்

எண்ணிக்கை குறைவு
எண்ணங்கள் நிறைவு
சீர்மிகு சிற்றிதழ்கள்

பக்கங்கள் குறைவு
தாக்கங்கள் நிறைவு
சீர்மிகு சிற்றிதழ்கள்

இல்லத்திற்கே வரும்
கடைகளுக்கு வராது
சீர்மிகு சிற்றிதழ்கள்

புதியப் படைப்பாளிகளின்
அறிமுக மேடை
சீர்மிகு சிற்றிதழ்கள்

ஆயிரங்களை இழந்து
இலக்கியம் வளர்க்கும்
சீர்மிகு சிற்றிதழ்கள்

லட்சியம் உண்டு
லட்சங்கள் இல்லை
சீர்மிகு சிற்றிதழ்கள்

வெகுஜன இதழ்கள், தினஇதழ்கள் நேர்மறையான சிந்தனைகள் விடுத்து எதிர்மறையான கொலை , கொள்ளை,பாலியல் குற்றம்  போன்ற செய்திகளுக்கே முக்கித்துவம் தருகின்றனர் .குறிப்பாக நடிகர் நடிகை எத்தனையாவது காதல் என்பதை ஆராய்ச்சி செய்து எழுதுகின்றனர் .பித்தலாட்ட சாமியார்களுக்கு சக்தி இருப்பது போல வளர்த்து விடுகின்றனர் .மூட நம்பிக்கை பரப்பும் ராசி பலன், ஜோதிடம் எழுதி பக்கத்தை வீணடித்து வருகின்றனர் கோடிக் கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு நடிகர்களை தியாகிகள் போல சித்தரிக்கின்றனர் .நடிகைகளின் ஆபாச படங்கள் பிரசுரம் செய்கின்றனர் . வெகுஜன இதழ்கள் மாற்றம் அடைய வேண்டும் என்பதே என் விருப்பம் .

கேள்வி எண்:8. நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட தேசியத்தலைவர்களில் தங்களைக் கவர்ந்தவர் யார்?

தேசப்பிதா  காந்தியடிகள் தான் . அவர் பற்றி நான் எழுதிய கவிதைகள்

.காந்தியடிகள் !கவிஞர் இரா .இரவி !
அகிம்சையை உணர்த்திய

அறிவு ஜீவி
காந்தியடிகள்

ரகசியம் இல்லாத
அதிசய மாமனிதர்
காந்தியடிகள்

கொண்ட கொள்கையில்
குன்றென நின்றவர்
காந்தியடிகள்

திருக்குறள் வழி
வாழ்ந்த நல்லவர்
காந்தியடிகள்

சுட்ட கொடியவனையும்
மன்னித்த மாமனிதர்
காந்தியடிகள்

உலகம் வியக்கும்
ஒப்பில்லாத் தலைவர்
காந்தியடிகள்

வன்முறை தீர்வன்று
வையகத்திற்கு உணர்த்தியவர்
காந்தியடிகள்

நெஞ்சுரத்தின் சிகரம்
நேர்மையின் அகரம்
காந்தியடிகள்

அரை ஆடை அணிந்த
பொதுஉடைமைவாதி
காந்தியடிகள்

வெள்ளையரின்
சிம்ம சொப்பனம்
காந்தியடிகள்

மனித உரிமைகளின்
முதல் குரல்
காந்தியடிகள்

அமைதியின் சின்னம்
அடக்கத்தின் திரு உருவம்
காந்தியடிகள்

அன்றே உரைத்தவர்
உலக மயத்தின் தீமையை
காந்தியடிகள்

மனிதருள் மாணிக்கம்
மாமனிதருக்கு இலக்கணம்
காந்தியடிகள்

காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை !             கவிஞர் இரா .இரவி மதுரை



உலகின் முதல் மனிதன் தமிழன்

உலகின் முதல் மொழி தமிழ்



உலகின் முதல்  ஊர் மதுரை

உலகப் புகழ்  மகாத்மா ஆக்கிய மதுரை !



மதுரைக்கு வந்த காந்தியடிகளின் மனம்

ஏழைகளின் இன்னல் கண்டு இரங்கியது



ஆடைக்கு வழியின்றி வாடும் ஏழைகள் இருக்க

ஆடம்பர ஆடைகள் எனக்கு இனி எதற்கு ?



விலை உயர்ந்த ஆடைகளைக் களைந்து

கதராலான அறையாடைக்கு மாறினார்



காந்தியடிகளுக்கு மனமாற்றத்தை விதைத்தது மதுரை

எல்லோருக்கும்   எல்லாமும் கிடைக்கும் வரை



என்னுடைய  ஆடை இதுதான் என்றார்

எவ்வளவோ பலர் சொல்லியும் ஏற்க  மறுத்தார்



எடுத்த முடிவில் இறுதிவரை தீர்க்கமாக இருந்தார்

எங்கு சென்றபோதும் அரை ஆடையிலேயே சென்றார்

என்னைப் பற்றி எவர் என்ன ? நினைத்தாலும்

எனக்கு கவலை என்றும் இல்லை என்றார்





பொதுஉடைமை சிந்தனையை ஆடையால் விதைத்து

பூமிக்கு புரிய வைத்த புனிதர் காந்தியடிகள்



ஏழைகளின் துன்பம் கண்டு  காந்தியடிகளின்

இரக்கத்தின் வெளிப்பாடே அரையாடை



மன்னரைப் பார்க்கச் சென்றபோதும் கூட

மதுரை அரையாடையிலேயே சென்றார்



கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார்

கண்டவர்  பேச்சுக்கு செவி மடுக்காமல் இருந்தார்



அரையாடை அணிந்த பக்கிரி என்று சிலர்

அறியாமல் பேசியதையும் பொருட்படுத்தாதிருந்தார்



குழந்தை ஒன்று தாத்தா சட்டை தரட்டுமா ? என்றது

கோடிச் சட்டைகள் தர முடியுமா ? உன்னால் என்றார்



இந்தியாவின் ஏழ்மையை மறந்துவிட்ட சுயநல

அரசியல்வாதிகளுக்கு ஏழ்மையை உணர்த்திட்டார்



ஏழ்மையின் குறியீடாகத் திகழ்ந்தார் காந்தியடிகள்

வறுமையின் ப்டிமமாகத் திகழ்ந்தார் காந்தியடிகள்



கதராடை  அரையாடை ஆடை மட்டுமல்ல

சமத்துவ சமதர்ம சமுதாயத்தின் விதை அவை

உலகளாவிய அஞ்சல் தலைகளிலும் சிலைகளிலும்

உன்னத அரையாடைக் கோலத்திலேயே உள்ளார்

உலகம் உள்ளவரை ஒப்பற்ற மதுரை இருக்கும்

மதுரை உள்ளவரை மகாத்மா புகழ் நிலைக்கும்

 

நன்றி !  கவிஞர் கொள்ளிடம் காமராஜ் .


.

கருத்துகள்