ஆயிரம் ஹைக்கூ !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் விமர்சனம் எழுத்தாளர் திருச்சி சந்தர் !
காவியக் கவிஞர் வாலியின் நண்பர் !
தங்கள் ஆயிரம் ஹைக்கூ தொகுப்பினை படித்துக் கொண்டே இருக்கிறேன் .இது விமர்சனமல்ல இன்றைய சமுதாய அமைப்பினை நிதர்சனமாக வெளிப்படுத்தியமைக்கு ஒரு பாராட்டு .
முத்துப் பால்கள் -ஆயிரம் ஹைக்கூ !
அட்டைப் படத்தில் இரு வரியில் முப்பால் எழுதிய வள்ளுவரைப் போட்டு விட்டு மூவரியில் முப்பாலை முத்துக் குவியலாய்த் தந்துள்ளார் கவிஞர் இரா .இரவி.
.
அவர் மூச்சடிக்கி ஆழ்கடலில் முக்குளித்து எடுத்த ஆயிரம்
முத்துக்களை என் முன் கொட்டி உள்ளார் .அதனையும் அள்ளிக் கொள்ள ஆசைதான் .என்றாலும் எனக்கு மிகமிகப் பிடித்த முத்துக்கள் மட்டும் பிரித்தெடுத்து மாலையாக்கி அணிந்து கொண்டேன். அழகாய்த்தானே இருக்கிறேன் .
நானும் இரவியும் நல்ல நண்பர்கள் .என்றாலும் எதிரிகள் .ரவி சூரியன். நான் சந்திரன் .அவர் இருந்தால் நான் இல்லை .நான் இருந்தால் அவர் இல்லை .எங்களை இணைத்தவர் மகாகவி பாரதியே !
சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ !
நான் ரசித்த முதுப்பால்கள் ;
தடுக்கிவிழுந்ததும்
தமிழ் பேசினான்
அம்மா !
அம்மாவுக்கும் , தமிழுக்கும் மணிமகுடம் !
உள்ளுரில் இனவெறி
வெளிநாட்டில் நிறவெறி
உலக அமைதி கேள்விக்குறி !
புரிந்தால் சரி !
அங்கீகரிக்கப்பட்ட
சூதாட்டம்
பங்குச்சந்தை !
மதுவைவிடக் கொடியது !
உண்டு கொழுத்தால்
நண்டு வளையில் தங்காது
போலிச் சாமியார்கள் !
சாமி - யார் ? நல்ல விளக்கம் !
நினைவு ஊட்டியும்
மறந்து விடுகின்றனர்
பகுத்தறிவை !
அறிவு மழுங்கிப் போனதால் !
சொத்துக்களை விட
சிறந்தவர்கள்
நண்பர்கள் !
அறத்துப்பால் !
தியாக தீபங்கள்
தேய்ந்த சந்தனங்கள்
முதியோர் இல்லங்களில் !
மணக்கிறது !
கொலை செய்தவனை
கொலை செய்தது அரசு
தூக்குத்தண்டனை !
எரிகிறது நீதி !
உண்மையிலும் உண்மை
குரங்கிலிருந்து மனிதன்
அரசியல்வாதிகள் !
காட்டு தர்பார் !
ஒரு நாள் இன்பம்
அய்ந்து வருடங்கள் துன்பம் !
ஓட்டுக்கான லஞ்சம்
வருகிற தேர்தலை நினைவூட்டும் மூவரிகள் !
விழித்த
விதை
விருட்சம் !
இயற்கைக்கும் தேவை விழிப்புணர்வு !
தூங்கிய
விதை
குப்பை !
இயற்கைக்கும் தேவை விழிப்புணர்வு !
காணிக்கை கேட்காத
கடவுள்
அம்மா !
மிகச் சிறந்த முத்து .பொறுப்பான பொருட்பால் !
இதழ்கள் வழி
இனிமைப் பதிவு
முத்தம் !
இன்பத்துப்பால் !
ஒருவனுக்கு ஒருத்தி
இராமனின் மனைவிக்கு
அறுபதாயிரம் மனைவிகள் !
ஒருவனுக்கு ஒருத்தி -வாழ்வியல் ! மற்றொருத்தி தீ -பாழ்வியல் !
அணில் கோடு
வறுமைக்கோடு
அழிவதே இல்லை !
பகுத்தறிவு !
சக்கர வண்டியில் சென்றேனும்
வாழ்க்கை சக்கரத்தை உருட்டுபவர்கள்
மாற்றுத்திறனாளிகள் !
தன்னம்பிக்கை !
கணவனை இழந்தவள்
விதவை சரி
மனைவியை இழந்தவன் ?
ஆண்மையின் வன்மையில் சூடு பறக்கிறது !
பிணமானபின்னும்
காசு மீது ஆசை
நெற்றியில் நாணயம் !
பேராசைப் பேய்களுக்கு நல்ல சவுக்கடி !
வேலையில்லை
பூட்டு சாவிக்கு
ஏழை வீடு !
வறுமையின் வலிவான விளக்கம் !
அந்நியக் கலாச்சாரம்
பண்பாட்டுச் சீரழிவு
முதியோர் இல்லம் !
இன்றைய இளைய சமுதாயத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் ஹைக்கூ .
அன்று நானே கள்வன்
மாண்டான் அரசன்
இன்று !
அநீதிக்குப் புகட்டும் நீதி !
சாக்ரடீஷ் ,பெரியார் போன்றவர்கள் மறைந்து விட்டார்களே என மனம் தடுமாறியபோது முறையாக மறையாத வாரிசாக நானுள்ளேன் என்று ஹைக்கூ வேதம் ஒதுகிறாயோ இரா .இரவி .
சிந்தித்துக் கொண்டே வாழ்கிறாரோ ? வாழ்ந்து கொண்டே
சிந்திக்கிறாரோ ?
எல்லோர் இதயமும் லப் டப் என்று துடிக்கும் என்பார்கள் .இவர் இதயம் ஹை.... க் ....கூ எனத்துடிப்பதேன் !
மூவரிக் கவிஞரே ! ஒன்றுக்கு பின்னால் மூன்று பூஜ்ஜியங்கள் போதாது . இன்றைய சமுதாயச் சீரழிவைத் தடுத்திட பூஜ்ஜியங்கள் தொடரட்டும் .
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. மின் அஞ்சல்vanathipathippakam@ gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 100.
கருத்துகள்
கருத்துரையிடுக