நேரம் நல்ல நேரம் !
நூல் ஆசிரியர் லேனா தமிழ் வாணன் !
மணிமேகலைப் பிரசுரம் ,7.தணிகாசலம் சாலை ,தியாகராயர் நகர், சென்னை .600017. விலை ரூபாய் 30.
அள்ள அள்ள அன்னம் வரும் அட்சயப் பாத்திரம் போல படிக்கப் படிக்க நூல்களை பதிப்பித்துக் கொண்டே இருக்கும் மணிமேகலைப் பிரசுரம் .தரமான கையடக்க பதிப்பாக இந்த நூல் வந்துள்ளது .நூலின் தலைப்பான " நேரம் நல்ல நேரம் "என்பதற்குப் பொருத்தமாக கூவி அழைத்து காலையில் எழுப்பிவிடும் சேவல் ,ஒழி கொடுத்து துயில் எழுப்பும் கடிகாரம் அட்டையில் மிக நேர்த்தியாக அச்சிட்டுள்ளனர் .
நூல் ஆசிரியர் லேனா தமிழ் வாணன் அவர்கள் நாடறிந்த நல்ல எழுத்தாளர் ,பேச்சாளர் .'புலிக்குப் பிறந்தது பூனையாகாது' என்ற பொன்மொழியை மெய்ப்பிக்கும் வண்ணம் மிகப் பெரிய எழுத்தாளர் திரு .தமிழ்வாணன் அவர்களின் புதல்வர் .இவரது சகோதரர் ரவி தமிழ்வாணன் அவர்களும் வெற்றிக்கு துணை நிற்கிறார்கள் .இவர்கள் இருவரையும் சென்னையில் நடந்த இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா .விஜய் விழாவில் சந்தித்து உரையாடி உள்ளேன் .மிகவும் அன்பாகப் பேசும் பண்பாளர்கள் .
'தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு பாயும் ' என்ற பழமொழிக்கு ஏற்ப தந்தை இட்ட பாதையில் பீடு நடை இட்டு வருகிறார்கள்.
புலம்பெயர்ந்த உலகத் தமிழர்களின் நூல்களை பிரசுரம் செய்து உலகம் முழுவதும் கொண்டு செல்கின்றனர் .எழுதியபடி வாழ்வதால் வாழ்வில் வெற்றி நடையிடுகின்றனர்.பாராட்டுக்கள் .
நூலின் முன்னுரையில் நூல் ஆசிரியர் லேனா தமிழ் வாணன் அவர்கள் எழுதியுள்ள வரிகளே முத்தாய்ப்பாக உள்ளன .
" நேரம் பற்றிச் சிந்திப்பதும் , கேட்பதும் ,பேசுவதும் எனக்கு மிகப் பிடிக்கும் .
நம்மவர்களுக்கு நேர உணர்வு மட்டும் வந்துவிட்டால் போதும் .அவர்களைக் கையில் பிடிக்கவே முடியாது .
"இதற்கான முயற்சியில் 13 ஆண்டுகளாக மைக்கையும் ,பேனாவையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்தியபடி அமைதிப் போராட்டத்தை நடத்தி வருகிறேன் ."
உண்மைதான் நம்மில் பலர்க்கு நேர உணர்வே இருப்பதில்லை. நேரத்தின் அருமை பெருமை அறிய வில்லை .அதனால்தான், அயல்நாடுகளில் ஊறுகாய் போல பயன்படுத்தும் தொ(ல்)லைக்காட்சியை நம் நாட்டில் சோறு போல பயன் படுத்தி வருகிறோம் . நேரத்தை விரயம் செய்து வருகின்றோம் .சில இல்லங்களில் காலை தொடங்கி இரவு வரை தொ(ல்)லைக்காட்சிப் பார்க்கின்றனர் .தொடருக்கு பலர் அடிமை ஆகி விட்டனர் .அதனால்தான் செய்தி மட்டும் ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிறுவனத்தினர் தொடருக்காக தனியாக தொலைக்காட்சி தொடங்கி ஒளிபரப்புகின்றனர். சோம்பேறிகளை நாட்டில் பெருக்கி வருகின்றனர்.
பொன்னைக் கூட விலைக்கு வாங்கி விடலாம் .ஆனால் நேரத்தை விலை கொடுத்து வாங்கிட முடியாது .எனவே நேரம் பொன்னை விட மேலானது .நேரத்தின் நன்மையை நன்கு உணர்த்தும் நல்ல நூல் .
27 தலைப்புகளில் சிறு சிறு கட்டுரைகள் உள்ளன .நூலில் உள்ள கட்டூரை தலைப்புகளே வாசகரை சிந்திக்க வைக்கின்றது .
" நேரம் இல்லை என்று சொல்லாதீர்கள் ,சிற்பி அம்மி உடைக்கலாமா?, குடும்பத்துக்கு நேரம் ஒதுக்குங்கள் ,உடல் நலத்திற்கு நேரம் ஒதுக்குங்கள் .இப்படி மிக சிந்திக்க வைக்கும் தலைப்புகள் .
" நேரம் என்பது இருபுறமும் கூர்மை உள்ள கத்தி எனவே ,நேரத்தை சரிவரப் பயன்படுத்தாவிட்டால் அந்த நேரமே நம்முடைய முதல் எதிரியாகவும் ஆகி விடுகிறது . "
முற்றிலும் உண்மை .விமான பயணத்தில் உள் நாட்டுக்குள் என்றால் 45 நிமிடங்களும் .வெளி நாடு என்றால் 2 மணி நேரமும் முன்னதாக வர வேண்டும் என்று பயணச் சீட்டில் அச்சடித்து உள்ளனர். நம்மவர் பலர் இதனை கவனிக்காமல் தாமதமாக வந்து விமானத்தை போக விட்டு பயணிக்காமல் ஏமாந்தவர்களைப் பார்த்து இருக்கிறேன். ஆனால் அயல் நாட்டினர் சரியான நேரத்திற்கு வந்து விடுகின்றனர் . இந்த நூல் படித்தபோது அந்த நினைவுகள் வந்தது. இதுதான் நூல் ஆசிரியர் வெற்றி .
ஒவ்வொரு நிமிடம் மட்டுமல்ல ஒவ்வொரு விநாடியும் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தி உள்ளார். கவனக்குறைவால் நடக்கும் விபத்து பற்றியும் எழுதி உள்ளார்கள். வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள் .
" ஒரு விநாடியின் அருமையை உணர வேண்டுமானால் சாலையில் விபத்தைச் சந்தித்தவர்களைக் கேட்க வேண்டும் ." இப்படித் திரும்பிப் பார்ப்பதற்குள் என்னை அடுச்சுத் தூக்கிட்டான் சார் ",என்பார்கள் .சிலர் இதைச் சொல்வதற்குக் கூட இருக்க மாட்டார்கள் .போய்ச் சேர்ந்து விடுவார்கள் ."
நம்மில் பலர் எந்த ஒரு செயலையும் உடன் செய்திடாமல் நாளை நாளை என்று நாளை கடத்துபவர்கள் உண்டு .சோம்பேறியாக சிலர் வாழ்க்கையை வீணடித்து வருகின்றனர் .அவர்களுக்கு விழிப்புணர்வு தரும் வரிகள் இதோ .
" கடைசிவரை காத்திருக்காதீர்கள் .நேரத்தை விழுங்கும் இன்னொரு பழக்கம் வேலைகளை செயல்பாடுகளைத் தள்ளிப்போடுவது உரிய நேரத்தில் சில விசயங்களைச் செய்யாததால் அச்செயல் பல மணி நேரங்களை ஏன் ? நாள்களைக் கூட விழுங்கி விடுகிறது ."
நேரத்தை மதிக்க வைக்கும் அற்புத வரிகள் நூல் முழுவதும் உள்ளன. படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் மிக மிக எளிய நடையில் எழுதி உள்ளார்கள் .
" தள்ளிப்போடும் பழக்கம் உள்ளவர்கள் நேரத்தின் கழுத்தை நெரித்துக் கொல்பவர்கள் என்பேன் ."
"நேரம் ஓர் அருமையான மூலப்பொருள் இந்த மூலப்பொருளை வைத்துக்கொண்டு பணம் எனும் மூலப்பொருளால் சாதிக்க முடியாத சில விசயங்களைக் கூட சாதித்து விடலாம் ."
நேரம் என்ற இந்த மூன்று எழுத்து மந்திரத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தினால் வாழ்க்கையில் சாதிக்கலாம் ,வெற்றி பெறலாம் என்பதை உணர்த்தும் மிக நல்ல புத்தகம் .
இந்த நூலை எனக்கு அறிமுகம் செய்த இனிய நண்பர் நம்பிக்கை வாசல்
ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் அவர்களுக்கு நன்றி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக