ஆயிரம் ஹைக்கூ !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17
தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 100.
அன்பார்ந்த நண்பர் திரு .இரவி அவர்களுக்கு ,இல்லை ,இல்லை, ஹைக்கூ இரவி அவர்களுக்கு , வணக்கம் .உங்களுடன் கவச குண்டலமாய் ஹைக்கூ ,அப்படி அழைப்பதுதானே முறை !
உங்கள் 'ஹைக்கூ ஆயிரம் ' நூலினை ( விழா நாளிலேயே , 15.8..13.)இரவில் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன் .
நெட்டோட்டமான வாசிப்பு என்று நினைக்க வேண்டாம் .நிதானமாக உள்வாங்கிக் கொண்ட வாசிப்பு .மருத்துவர் மூச்சுக் காற்றை உள்ளே இழுத்துப் பின்னர் வெளியில் விடச் சொல்வாரே அது மாதிரி .
ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளுக்கு விளக்கம் சொல்லிக் கேட்டிருக்கிறேன் ,படித்துமிருக்கிறேன்.முனைவர் லீலாவதி அவர்களின் நூலுக்கு கவிக்கோ அப்துல் ரகுமான் தந்துள்ள விரிவான விளக்கம் .
ஆனால் ஹைக்கூ வுக்கு அதற்குரிய வடிவிலேயே இலக்கணம் சொல்லியிருக்கிறீர்கள் ! இலக்கியம் தந்திருக்கிறீர்கள்.சாமுத்திரி கா லட்சணமுள்ள ஆணையோ , பெண்ணையோ கண்முன்னே நிறுத்துவது போல .
கணினியுகத்தின்
கற்கண்டு
ஹைக்கூ !
படித்தால் பரவசம்
உணர்ந்தால் பழரசம்
ஹைக்கூ !
இப்படி வேறு யாரும் இலக்கணம் சொல்லியிருப்பார்களா ? தெரியவில்லை .சொல்லியிருதாலும் குற்றமில்லை .தமிழ் யாப்புக்குப் பலபேர் இலக்கணம் செய்ய வில்லையா ,என்ன ?
அணிலின் கோணல் முதுகில் உள்ள மூன்று கோடுகளும் கூட, உங்களுக்கு ஹைக்கூவை நினைவூட்டுகின்றன .அந்த அளவிற்கு ஹைக்கூ பித்தர் நீங்கள் . காடும்' செடியும் அவளாகத் தோன்றும் என் கண்களுக்கே ' என்று பாடிய காதல் பித்ததனைப் போல .
தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
அம்மா !
நூலை விடாமல் தொடர்ந்து படிப்பதற்குக் காரணமானதே இந்த முதற் கவிதைதான் .( FIRST) ஓர் எதிர்பார்ப்பை என்னுள் ஏற்படுத்தியதும் இந்த " முதன்மைக் கவிதைதான் . ( BEST)
தாய் மொழிப் புறக்கணிப்பிலும் பிறமொழி வெறியிலும் மூழ்கிக் கிடக்கும் மூடர்களான நம்மவரை நினைத்து நினைத்துப் புண்ணாகும் தமிழ் நெஞ்சங்களுக்கு இதமான மருந்து இந்த ஹைக்கூ .புதுமைப் பித்தன் போன்றோருக்கே கைவரதக்க எள்ளலை மிக இலாவகமாக கையாண்டுருக்கிறீர்கள் .தொடக்கத்தில் உள்ள இந்தப் பாடலையே தமிழ்த்தாய் வாழ்த்தாகவும் கொள்ளலாம் .பொருந்தும் .
நூல் முடிவில் உள்ள ஆயிரமாவது கவிதை .
வழிமேல் விழிவைத்து
முதியோர்கள் இல்லத்தில்
முதியோர்கள் !
என்று முடிகிறது .முதற் கவிதைக்கும் இதற்கும் ஒரு வகையில் ' அந்தாதி முடிச்சுப் போட்டு அழகு பார்க்கலாம் .இதனைப் பொருளிசை' அந்தாதி ' எனக் கூறும் தமிழ் இலக்கணம் .
அன்றன்று தோன்றும் புதுமையோடும் கை குலுக்கும் தன்மை நம் பழந்தமிழருக்கு உண்டு . அதனை விளக்கிச் சொல்ல இங்கு இடமில்லை .
நம் சமகாலச் சரிவுகளின் அனைத்துப் பிரிவுகளிலும் ஊடுருவிச் சென்று விமர்சனம் செய்கிறது உங்கள் ஹைக்கூ .
உங்கள் விசாலப் பார்வையின் விளைவு இது .உதாரணங்கள் காட்டினால் ஒரு நூற்றையும் தாண்டி விடும் .ஹைக்கூக்களின் எண்ணிக்கை .ஒரு சோற்றுப் பதமாகச் சில .
எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
தமிழ்ச்சங்க ரோடு !
இடித்துக் கட்டியதால்
நொடித்துப் போனார்கள்
வாஸ்து பலன் !
விரல் நுனியில்
விரிந்தது உலகம்
இணையம் !
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இவற்றைப் படிக்கும் வாசகர்கள் ஆவலுடன் நூலை வாங்கிப் படிக்க வேண்டாமா ?அதற்க்கு இடை சுவராய் நான் இருக்க விரும்பவில்லை .
அடி வயிற்றில்
இடி விழுந்தாற் போல
அண்ணன் என்றாள் !
இது ,
அழகாயில்லாததால்
அவள் எனக்குத்
தங்கையாகி விட்டாள் !
என்னும் கலாப் பிரியன் புதுக்கவிதையை நினைவூட்டியது .
நாய் பெற்ற
தெங்கம் பழம்
சுதந்திரம் !
இதுபோல பழைய இலக்கியத் தொடர்களையும் பழமொழிகளையும் பயன்படுத்தி எழுதியுள்ள ஹைக்கூக்கள் சிறப்பாக இருக்கின்றன . ' பழமையிலே புது நினைவு பிறக்கும் 'என்பதைக் காட்டுமிடங்கள் இவை .உங்களின் அத்தகைய கவிதைகளைப் படித்தபோது ,
கை புனைந்து இயற்றாக்
கவின்பெறு வனப்பு
இயற்கை !
என்று முருகாற்றுப் படையையும் !
நெடிது நாள் உண்ட
எச்சில்
தாம்பத்யம் !
என்று கம்பனையும் பயன்படுத்தி ஹைக்கூ எழுதலாம் என்ற எண்ணம் என்னுள் தோன்றியது .இதைத் திருடி எழுதுபவர்கள் எழுதட்டும் .
தமிழ்நாட்டில் உண்மையான படைப்பாளிகளைத் தவிர இன்று பெரும்பாலோர் செய்யும் ' இலக்கியப்பணி ' இதுதானே !
' ஹைக்கூ ஆயிரம் ' என்று நீங்கள் தலைப்பிட்ட போதிலும் சில ஹைக்கூ கவிதைகள் திரும்பவும் முகம் காட்டுகின்றன .( பார்க்க பக் 62,68,120,73,83,168.)படைத்தவரி ன் பரவசத்தின் விளைவாகக் கூட இருக்கலாம் .தவறு இல்லை .
ஆயிரத்திற்குச் சில எண்கள் கூடினாலும் குறைந்தாலும் ' ஆயிரம் ' என்னும் பேரெண்ணாகவே கொள்ளும் மரபு தமிழில் உண்டு .சான்று நாலாயிரமும் ,அதன் ஒவ்வொரு ஆயிரமும் .
நீள நினைந்தும் அவற்றையெல்லாம் எழுத நேரமில்லை .அப்படி எழுதினாலும் படிக்க ஆளில்லை .
' சிறுகட்டுரைகளே இன்றைய வாசகர்களுக்கு ஏற்றவை ' என்பதை அனுபவ பூர்வமாக அறிந்து கொண்டவன் நான் .அண்மைக் காலத்தில் நிறைவாக உங்களின் ஹைக்கூ வைப் படித்த தாக்கத்தில் என் மனத்திலும் ஒரு ஹைக்கூ .
வைக்க இடமில்லை
வச்சதை எடுக்க முடியவில்லை
என் புத்தக அலமாரி !
இது கான மயில் அன்று என்பது எனக்கு நன்றாகவே தெரியும் .
உங்கள் படைப்பு எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பைக் ( IMPACT)காட்டவே எழுதினேன்.
.
தொடர்ந்து எழுதுக .வெல்க .
.நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக