கவியரசர் கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி !

கவியரசர்  கண்ணதாசன் !  கவிஞர் இரா .இரவி !


சிறுகூடல் பட்டி என்ற  ஊரில் பிறந்து 
பெரும் கூடல்  பாட்டு எழுதிய கவியரசர் !

முத்தையா அவர் எழுதிய பாடல்கள் எதுவும் 
சொத்தையில்லை தமிழ் சொத்தானது !

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து 
எட்டாத கருத்துக்களை எட்டிட வைத்தவர் !

இராமனின் தந்தை தசரதனுக்கு மூன்று மனைவி !
கவிதையின்  தந்தை  கண்ணதாசனுக்கு மூன்று மனைவி !

பொன்னம்மா பார்வதி வள்ளியம்மை என்று 
பெண்கள் மூவரின் நாயகன் கவியரசர் !

முடிசூடா மன்னராக திரை உலகில் 
முத்தமிழில் திகழ்ந்தவர்  கவியரசர் !

திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதுவதில் 
தனி முத்திரை நன்கு பதித்தவர் கவியரசர் !

மயக்கமா கலக்கமா பாடலின் மூலம் 
மக்களுக்கு தன்னம்பிக்கை விதைத்தவர் !

வந்த நாள் முதல்   பாடலின் மூலம் 
வந்த மனிதனின் மாற்றம் உணர்த்தியவர் !

குறுக்கு  வழியில் வாழ்வு தேடிடும் பாடலின் மூலம் 
குறுக்கு  வழியின் தீமையை உணர்த்தியவர் !

தை பிறந்தால் வழி  பிறக்கும் பாடலின் மூலம்  
தவித்தவர்களுக்கு ஆறுதல் வழங்கியவர் !

ஆசையே அலை போலே பாடலின் மூலம்  
ஆசையை அழித்திட  அறிவுறுத்தியவர் !

பிறக்கும் போதும் அழுகின்றான் பாடலின் மூலம்  
பிறந்த மனிதர்களுக்கு மகிழ்ச்சி தந்தவர் !

உள்ளதைச் சொல்வேன் பாடலின் மூலம்  
உள்ளதைச் சொல்லி உள்ளத்தில் நின்றவர் !

அச்சம் என்பது மடமையடா பாடலின் மூலம் 
அச்சம் அகற்றி வீரம் விதைத்தவர் !

போனால் போகட்டும் போடா பாடலின் மூலம்  
போனவர்களுக்காக வருத்தாதே என்றவர் !

வீடு வரை உறவு பாடலின் மூலம் 
வாழ்வின் நிலையாமையை உணர்த்தியவர் ! 

சேரமான் காதலி என்ற உன்னத  படைப்பிற்காக 
சாகித்ய அகாதமி விருது பெற்றவர் !

குழந்தைக்காக  வசனத்திற்காக  தேசிய விருதை 
குமுகாயம் போற்றிடப் பெற்றவர் கவியரசர் !

வணங்காமுடி என்ற புனைப்பெயரில் எழுதி  
வணங்காமுடியாக வாழ்ந்தவர் கவியரசர் !

அர்த்தமுள்ள இந்துமதம் மட்டுமல்ல 
இயேசு காவியமும் எழுதியவர் கவியரசர் !

முற் பாதியில் நாத்திகம் போதித்தவர் 
பிற் பாதியில் ஆத்திகம்  போதித்தவர் 

கவிதை கதை கட்டுரை நாடகம் அனைத்தும் 
கணக்கின்றி வடித்த சகலகலாவல்லவர் !

கவியரசர்  கண்ணதாசன் உடல் இல்லை !
கவியரசர் கண்ணதாசன்   பாடல் உண்டு !

அழிவில்லை எனக்கு என்று சொன்னவர் !
அழியாத பாடல்கள் எழுதி நின்றவர் கவியரசர் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்