ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !

ஆயிரம் ஹைக்கூ !

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !


வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17
தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com

184 பக்கங்கள் விலை ரூபாய் 100.

ஹைக்கூ ஒரு ஆத்ம  தரிசனம் ஹைக்கூ உணர்வுகளின் தாய். பரவசத்தின் உச்சம் .ஹைக்கூ இதயத்தில் இடைவிடாது பறக்கும் மின்மினி ஜென் தத்துவ கோட்பாடுகளின் இலக்கிய வடிவம் ஹைக்கூ .
.
எளிமையான தேடல் ,தேடலின் எளிமை இயல்பான வாழ்க்கை தத்துவம் .யார் கடவுள் ?கடவுளை அடைய யாது வழி ? இல்லை நீயே கடவுள்! என தத்துவ விசாரணையாக  இருந்த ஹைக்கூ கவிதைகளை ஒரு துறவியைப் போல் ,தும்பியைப் போல பறந்து திரிந்த  ஹைக்கூ கவிதைகளை   உள்வாங்கிய இந்தியா போன்ற வளரும் நாடுகள் இவ்வகை இலக்கிய குறும்பாக்களை தங்கள் நாட்டின் முகங்களுக்கு ஏற்றபடி செதுக்கிக்  கொண்டார்கள் .

நகமும் சதையுமாக ரத்தம் வழியும் பிரச்சனைகளுக்கு தீர்வாய் ,சமூக கேடுகளை   எதிர்க்கும் போர்க்குரலாய் தமிழ்க் கவிஞர்கள் ஹைக்கூ என்ற ஆயுதத்தை பயன்படுத்தினர் .அந்த வரிசையில் 15 வருடங்களாக ஹைக்கூ கவிதை எழுதுவதை ஒரு தவமாக செய்து வருகிறார் கவிஞர் இரா .இரவி . 

ஹைக்கூ எழுதுவதில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர் .பல்வேறு தலைப்பிகளில் சிறு சிறு நூலாக வெளியிட்ட இரவி தன் ஹைக்கூ காதலிக்காக ஹைக்கூ தாஜ்மகாலே கட்டியிருக்கிறார் .

ஆயிரம் கவிதைகள் !  
ஆயிரம் முத்தங்கள் !
ஆயிரம் பார்வைகள் !
ஆயிரம் வலிகள்  !
ஆயிரம் அக்கினி குஞ்சுகள் !
ஆயிரம் இழப்புகள் !
ஆயிரம் வண்ணத்துப் பூச்சிகள் !

என மனித வாழ்வின் சகல உணர்வுகளையும் கவிதையாக்கி இயந்திர உலகில் அவசர அவசரமாய் ஓடிக் கொண்டிருக்கிற மனிதர்களின் கையைப் பிடித்து நிறுத்தி கவிதைகளை பரிசளிக்கிறார் . கவிதைகள் விதைகளாய் நம் இதய நிலங்களில் விழுந்து விருட்சமாய் வளர்ந்து கனிகளைத் தந்து இச்சமூகம் பசியாற வேண்டும் என்பதே கவிஞர் இரவியின் கவிதைக் கோட்பாடு .இணைய  தளங்களிலும்   இதயத் தளங்களிலும் இயங்கிக்  கொண்டு இருக்கும் இரா .இரவி ஹைக்கூ உலகில் நம்பிக்கைக் குரிய கவிஞர் .

ஈழம் - நம் இயலாமை 
ஈழம் - நம் குற்ற உணர்ச்சியின் குறியீடு .எரிந்த  பிணத்தின் வாடையைச் சுமந்த காற்று நம் மூச்சுக் காற்றாய்   சுவாசிக்க நேர்ந்த பொழுது மூக்கை பொத்திக்  கொண்டு முகத்தை திருப்பிக்   கொண்டோம் .ஈழத்தில் நம் இனம் அழிந்த காட்சி அதற்கு தமிழகமே சாட்சி .ஈழத்தின் வலிகளாய் இரவியின் வார்த்தைகள் .

தாமதமாகவே விழித்தது 
தூங்கிய தமிழினம் 
லட்சக்கணக்கில் தமிழரை   இழந்து  !   

என்று கவிதைக் கண்ணீரால் நம் இயலாமையை  கழுவுகிறார் . இந்தியாவின் ஆகப் பெரிய சொத்து இயற்கை  வளங்கள்   அதிகார மையங்களின் பேராசைக்கு பெரும் தீனியாக இந்தியத் தாயின் 
கர்ப்பப்பையே   விலையாக பேசப்படுகிறது .இரவியின் இதயம் வெடித்து புலம்புகிறது .

கொள்ளை போனது 
பச்சைவயல் 
பன்னாட்டு நிறுவனங்கள் !

உலகின் பசித்தீயை அணைத்த உழவனின் வாழ்க்கை எரிந்து கொண்டு இருக்கிறது .மானம் காக்க ஆடை நெய்த நெசவாளர் வாழ்க்கை கிழிந்து கிடக்கிறது .கவிஞனின் பேனா கவலையில் மூழ்கிறது .

புத்தாடை நெய்தும் 
கந்தல் 
நெசவாளர் வாழ்க்கை !

தரைதட்டி நிற்கிறது ஹைக்கூ கப்பல் .இறக்கி வைக்க முடியாத சுமைகளாய் வார்த்தைகள் .

குழந்தைகளின் உலகம் மாறி விட்டது குழந்தைகள் பெற்றோர்களின் கனவுகளை சுமக்கும் பொம்மைகளாக மாறி விட்டனர் .வரையப்பட்ட வட்டங்களுக்குள் வெட்டப்பட்ட காய்களாய் குழந்தைகள்.
குழந்தைகளின் மன உணர்வைப் பதிவு செய்கிறார் கவிஞர் .

தடியால் அடித்துக் 
கனிவதில்லை கனி 
குழந்தைகளும்தான்  !

கலை கலைக்காக  எனும் எண்ணத்தில் படைக்கும் படைப்புகளில்   அற்புதங்களும் அழகியலும் இருந்தாலும் மக்களுக்கு புரியாத மொழியில் இருந்தால் அவைகள் வெறும் காகிதங்களே .
உண்மையாய் பாசாங்கற்று , வெள்ளந்தியாய்  மக்களின் மொழியில் மக்கள் பிரச்சனைகளை பேசுகின்ற கவிதைகள் காலத்தை வென்று வாழும் .

சமூக மாற்றத்திற்கான கருவியாய் ஹைக்கூ கவிதைகளை ஏந்தி நிற்கும் கவிஞர் இரா .இரவியின் கவிதைப் பயணம் தொடர 
வாழ்த்துகிறேன் .இருட்டில் இருக்கும் எம் மக்க்களின் இதயத்தில் ஏற்றி  வைத்த ஆயிரம் மெழுகுவர்த்திகள் .கவிஞர் இரா .இரவியின் ஆயிரம்  ஹைக்கூ  கவிதைகள் ... இருள் விலகும் என்ற நம்பிக்கையில் .

கருத்துகள்