15 முதல் 95 வயது வரை ! நூல் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
15 முதல் 95 வயது வரை !
நூல் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா !
செல் 9345555623.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
வெளியீடு ; மின்னல் கலைக்கூடம் ,117.எல்டாம்ஸ் சாலை .சென்னை .600018. விலை ரூபாய் 100.
15 முதல் 95 வயது வரை நூலின் தலைப்பே மிக வித்தியாசமாக உள்ளது .இந்த நூலில் 15 வயது முதல் 95 வயது வரை பல்வேறு வயதினர் 108 கவிஞர்களின் தொகுப்பு நூல் இது .நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா அவர்கள் மிகவும் சிரமப்பட்டு 108 படைப்பாளிகளிடமிருந்து படைப்புகளைப் பெற்று தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .இந்த நூலில் மரபுக் கவிதை ,புதுக் கவிதை ,ஹைக்கூ கவிதை மூன்றும் உள்ளளன .தொகுப்பு நூல் வெளியிடுவது சாதாரண பணி அன்று .சாதனைப் பணி .தொகுப்பு நூல் வெளியிடுவது ஒரு கலை .தொகுப்பு ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார் .
எல்லாக் கவிஞர்களின் படிப்புகள் பிடித்து இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .
சிலந்திவலை ! கவிஞர் சா .சையத் முஹம்மத் !
சிலந்திப் பூச்சி ! சிலந்திப் பூச்சி ! வலைபல செய்கின்றாய் !
சிக்க்கனமாய் சீராகவே வாழ்கிறாய் !
செலவில்லா வலைவீட்டை விரும்பியே கட்டுகிறாய் !
உலகத்தின் அற்புதமாம் மும்தாஜின் மஹால் போலவே
உணர்ந்தாயோ உன் கூட்டை !
ஹைக்கூ கவிதைகள் பல மிகவும் ரசிக்கும்படியாக உள்ளன .இறுதி எழுத்து ஒன்றி வரும் இயைபு நயத்துடன் உள்ள ஹைக்கூ ஒன்று .
கவிஞர் பி .முஹம்மத் அலி !
இயலாமை
முயலாமை
வறுமை !
வித்தியாசமாக சிந்தித்து ஹைக்கூ வடித்துள்ளார் பாருங்கள் .
கவிஞர் டி .இராஜேந்திரன் !
நிலாச்சோறு
உண்போம்
நிலாவில் சமைத்து !
அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாத்துரை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஹைக்கூ .
.
குழந்தை பிறக்காதது பெரும் குற்றம் இல்லை .சமுதாயத்தில் அதனை குறையாகப் பேசும் நிலை உள்ளது .அதனை உணர்த்தும் ஹைக்கூ .
கவிஞர் இரத்தினப்பிரியன் !
வயிறு கனக்கவில்லை
மனம் கனக்கிறது
மலடிப்பட்டம் !
மெழுகுவர்த்தியை வித்தியாசமாக பார்க்கிறார் .
கவிஞர் பாரியன்பன் !
வெள்ளை ரத்தம் சிந்தி
வெளிச்சம் தருகிறது
மெழுகுவர்த்தி !
மூன்று வரிகளில் சிக்கனமான சொற்களில் தமிழ் உணர்வு விதைக்கும் விதமாக உள்ள ஹைக்கூ .
கவிஞர் பொன்னியின் செல்வன் !
தமிழன் வீடுகளில்
எகிப்து
மம்மி !
குடி கெடுக்கும் குடிக்கு எதிரான ஹைக்கூ நன்று .
கவிஞர் அன்னை சிவா !
மதுக்கடை வருமானம்
மகத்தான சாதனை
போதை மாநிலம் !
விவசாய நாடு என்கிறோம் .ஆனால் விவசாயி வறுமையில் வாடும் துன்பம் உணர்த்தும் ஹைக்கூ .
கவிஞர் மரியா தெரசா !
பயிர் வளர்க்கும்
விவசாயி
பட்டினியாய் !
மிக வித்தியாசமாக நடப்போடு ஒப்பிட்டு சிந்தித்து ஹைக்கூ வடித்துள்ளார் .
கவிஞர் பொன் ரவிச்சந்திரன் !
குயில் முட்டை
வாடகைத்தாய்
காகம் !
மனித நேய மாண்பாளர்கள் எல்லாம் மிகவும் மனம் வருந்திய, உலகில் இதுவரை எங்குமே நடந்திராத படுகொலைகளும், வன்முறைகளும் இலங்கை சிங்கள அரசு நடத்தியது .அதற்கு மனிதாபிமானமற்ற பல நாடுகளும் உதவின .தடுக்க வேண்டிய ஐ.நா .மற்றமும் பாரமுகமாக இருந்துவிட்டு தற்போது தண்டிக்க வேண்டிய கொடூரனை தண்டிக்காமல் நீலிக்கண்ணீர் வடிக்கிறது .அந்த கொடுமையைச் சுட்டும் கவிதை ஒன்று .
ஈழம் ! கவிஞர் கு .தமயந்தி !
மதம் பிடித்த சிங்களவன் வதம் செய்தான் எங்களை
கொடுமையின் உச்சிக்கு கொண்டு சென்றான் பெண்களை
அமைதியை காணாத தமிழ் நெஞ்சம்
அங்கே அல்லல் படுகிறது உயிர் கொஞ்சம் !
இந்த நூல் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா அவர்களின் கவிதை !
பாசம் !
நம்ம மாட்டுப்பொண்ணு
மலடிபொலிருக்கு .
மாமியாரின் சொல்லம்புகளைத்
தாங்கிக் கொண்டது
அவளின் மனசு !
விசேஷம் ஏதுமில்லையா
கேள்விக்கணைகள் !
பிள்ளைப் பேற்றைத் தள்ளிப்போடும்
காரணத்தை அவள் மட்டுமே அறிவாள் .
திருமணக் கடனே தீர்ந்தபாடில்லை .
வலைகாப்புச் செலவைத்
தாங்குவாரா தந்தை !
மனிதநேயம் குறைந்து வரும் அவலம் சுட்டும் கவிதை ஒன்று .
கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
எங்கே போகிறோம் !
பேருந்து மோதிக் கொண்டது
" அய்யோ " - என்ற அலறல்
கூடியது கூட்டம் .
ஓடோடி வந்தனர் !
கூட்டத்தில் எட்டிப் பார்த்தனர்
தங்கள் உறவில்லை என்று
அமைதியாக கலைந்து போனார்கள் !
பல்வேறு இதழ்களின் போட்டிக்கு பரிசுத் தொகை வழங்கி வரும் மனமும் , குணமும் , பணமும் பெற்ற கவிஞர் கார்முகிலன் அவர்களின் பகுத்தறிவை விதைக்கும் ஹைக்கூ .
கவிஞர் கார்முகிலன் !
ஜாதகம் பார்த்து
வீணாகிப் போனது
விவாகரத்து !
மாணவர்கள் குடிக்கும் பழக்கம் வந்து விட்ட சமுதாயம் கண்டு கொதித்து வடித்த கவிதை நன்று .
பதிப்பாளர் கவிஞர் வசீகரன் !
வேண்டாம் தீய மது வேண்டியே கேட்கிறோம் !
சீச்சீஅதை ஒதுக்கு !
மேமிகு திறத்தோடு பார்புகழ வாழலாம் !
மதியை மேம்படுத்து !
.
மொத்தத்தில் பல்சுவை விருந்தாக உள்ளது .நூல் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா அவர்களுக்கும் ,மிக நன்றாக பதிப்பித்த கவிஞர் வசீகரன் அவர்களுக்கும் , .ஓவியம் வரைந்த ஓவியர் மஜ்ஹருல் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக