அறிவின் சிகரம் ! அறிஞர் அண்ணா ! கவிஞர் இரா .இரவி !

அறிவின் சிகரம் ! அறிஞர் அண்ணா !  கவிஞர் இரா .இரவி !


பெரியாரோடு கருத்து  வேறுபாடு இருந்தபோதும் 
பெரியாருக்கு ஆட்சியைக் காணிக்கையாக்கியவர் அறிஞர் அண்ணா ! 

பொடிப் போடும் பழக்கம் இருந்தபோதும் 
பொடி  வைத்துப் பேசும் பழக்கமற்றவர்  அறிஞர் அண்ணா ! 

நடமாடும் சொற்க்களஞ்சியமாக வாழ்ந்தவர் 
நல்லவர் சிறந்த  பண்பாளர் அறிஞர் அண்ணா ! 

அறுவைச் சிகிச்சையைத்  தள்ளி வைக்கச் சொன்ன 
அறிவு  நேசர் புத்தக தாசர் அறிஞர் அண்ணா ! 

கன்னிமாரா நூலகத்திற்கு வரும்  நூல்களை 
கண்ணியர் நேருவிற்கு முன் படித்திட்ட  அறிஞர் அண்ணா ! 

ஆங்கில இதழ்களின் ஆசிரியராக இருந்தவர் 
ஆங்கிலப் புலமையும் மிக்கவர் அறிஞர் அண்ணா ! 

எழுத்து பேச்சு இரண்டிலும் முத்திரைப் பதித்தவர் 
எழுத்து வாழ்க்கை வேறுபாடு இல்லாதவர் அறிஞர் அண்ணா ! 

கொண்ட  கொள்கையில்  உறுதியாக நின்றவர் 
கோடிகளைக் கொள்ளை அடிக்காதவர்  அறிஞர் அண்ணா ! 

பொன்மொழிகள் யாவும் பொன்னான மொழிகள் 
பொன் போல ஒளிர்ந்திட மொழிந்தவர் அறிஞர் அண்ணா ! 

அமைதி பூங்காவாக தமிழகம் திகழ்ந்திட 
அடித்தளம் அமைத்துத் தந்தவர் அறிஞர் அண்ணா ! 

மோனையும்  எதுகையும் கலந்து  முழங்கியவர் 
முத்திரைப் பேச்சால் முத்திரை வாங்கியவர் அறிஞர் அண்ணா ! 

அடுக்குமொழியில் அள்ளி  வீசி கேட்போருக்கு 
அழகு தமிழில் செவி விருந்து தந்தவர் அறிஞர் அண்ணா ! 

ஓர் இரவு நாடகத்தை ஓர் இரவில் முடித்தார் 
ஓர் முடிவு எடுத்தால் முடித்திடுவார் அறிஞர் அண்ணா ! 

கதை நாடகம் கட்டுரை என்று வடித்து 
கன்னித் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் அறிஞர் அண்ணா ! 

இலட்சியத்தில் கூட  நியாயம் வேண்டும் என்பார் 
இலட்சியம் நியாயமற்றதைவேண்டாமென்பார்  அறிஞர் அண்ணா ! 

அவரச முடிவு ஆபத்தில் முடியும் என்பார் 
அமர்ந்து யோசித்து முடிவெடுப்பார் அறிஞர் அண்ணா ! 

மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக நின்றவர் 
மதுவை அடியோடு வெறுத்தவர் அறிஞர் அண்ணா ! 

மதுவை ஒழித்தால்  நாடு செழிக்கும் உரைத்தார் 
மதுவை ஒழித்திட திட்டமிட்டவர்  அறிஞர் அண்ணா ! 

உயரத்தில் குள்ளமாக இருந்திட்ட போதும் 
உள்ளத்தால்  மிகவும் உயர்ந்தவர் அறிஞர் அண்ணா ! 

ஆற்றலின் அகரம் அறிஞர் அண்ணா ! 
அறிவின் சிகரம் ! அறிஞர் அண்ணா ! 

கருத்துகள்