உன் உதட்டுச் சாயத்தால் ! நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
உன் உதட்டுச் சாயத்தால் !
நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
கற்பகம் புத்தகாலயம் !4/2 சுந்தரம் தெரு .தியாகராயர் நகர் .சென்னை 600017.விலை ரூபாய் 40.
தொலைபேசி 044-24314347.
மின்னஞ்சல் info@karpagamputhakalayam.com
நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் அவர்களின் முந்தைய நூல் " அவசரமாய் ஒரு காதலி தேவை "இந்த நூலின் பெயர் உன் உதட்டுச் சாயத் தால் ! நூலின் பெயர் போலவே கவிதைகளும் வித்தியாசமாக உள்ளன .நூலில் உள்ள புகைப்படங்கள் ,முன் பின் அட்டை ,உல் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .நூல் வெளியிட்ட கற்பகம் புத்தகாலயத்திற்கு பாராட்டுக் கள் .
.
வாசகர்களுக்கு காதல் கவிதைகள் மேடும் சலிப்பதே இல்லை. நிலவை ரசிப்பதுபோல காதல் கவிதைகளையும் ரசிக்கலாம். படிக்கும் வாசகனுக்கு மலரும் நினைவுகளாக அவரவர் காதல் நினைவுகள் மலர்ந்து விடும் .காதல் கவிதை எழுதுவதில் காதலர்களிடையே புகழ் பெற்றவர் கவிஞர் தபூ சங்கர் அவர்களின் பாணிபோல இவரும் எழுதிஉள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் அவர்களுக்கு ஒரு சபாஷ் சொல்லலாம் . நல்ல தமிழ்க் கவிதை எழுதுபவருக்கு நல்ல தமிழ்ப் பெயராக இல்லை என்பது வருத்தம்தான் .
பதச் சோறாக சில கவிதைகள் மட்டும் உங்கள் ரசனைக்கு .முதல் கவிதையே முத்தத்தில் தொடங்குகின்றது .முதல் கவிதையே நூலின் பின் அட்டையிலும் அச்சாகி உள்ளது .
-
உன் உதட்டுச் சாயத்தால்
நீ வரைந்த
முதல் ஓவியம்
உன் முத்தம் !
நூலில் அணிந்துரை வாழ்த்துரை என்ற பக்க செலவின்றி தன்னுரையோடு கவிதைகள் தொடக்கி விடுகின்றன .
.காதலின் முன்னுரை முத்தம் என்பதால் முத்தம் பற்றிய பல கவிதைகள் உள்ளன .
ஒரே ஒரு முத்தம்தான்
என்று கண்டிப்போடு
கொடுத்தாய் !
என்றாலும் இன்று வரை
கன்றிப் பொய் இருக்கிறது
என் உதடுகள் !
மறுபடியும் முத்தம் பற்றி ஒரு கவிதை .காதலர்கள் மட்டும் உணர்ந்த தனிச்சுவை முத்தம் பற்றி தித்திக்க புதுக்கவிதைகள் வடித்துள்ளார் .
நீ முத்தமிட்டால்
வெப்பத்தில்
உறைந்து போகிறேன்
நான் !
முத்தம் குளிர்ச்சி என்பார்கள் சிலர் .இவர் வெப்பம் என்கிறார் .கோடை காலத்தில் குளிர் .குளிர் காலத்தில் வெப்பம் என்றும் பொருள் கொள்ளாலாம் .நாம் .
பெண்களுக்கு குளியலறையில் நெற்றிப் பொட்டை ஒட்டி வைக்கும் பழக்கம் உண்டு .வீடுகளில் பார்த்து இருக்கிறோம் .அதனை காட்சிப் படுத்தும் விதமாக ஒரு புதுக் கவிதை .
உன் குளியலறைக்கு
நீயே வைக்கும்
திருஷ்டிப் பொட்டு
உன் நெற்றி
ஒட்டுப் பொட்டு !
கவிதைக்கு கற்பனை அழகு .கற்பனைக்கு பொய் அழகு .என்பதை மெய்ப்பிக்கும் கவிதை நன்று .
உன் பிறந்த
நாளுக்கு
நீ
ஊதி அணைக்க
சூரியனைத் தரவா
மெழுகுவர்த்தியாக !
காதலி சரி சூரியனைத் தா ! என்றால் காதலனால் தர முடியாது. என்றாலும் வார்த்தையில் உள்ள நளினம் காதலி ரசிப்பாள் .
மனதிற்குள்ளேயே காதலை மறைத்து வைத்துக் கொள்பவர்கள் அதிகம் .அவள் சொல்லட்டும் என்று அவனும் .அவன் சொல்லட்டும் என்று இருவர் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் வைத்து ரகசியமாக காதலிப்பவர்களும் உண்டு .அதனை நவீன உவமையுடன் எழுதி உள்ளார் .
கணினியில் இரகசிய
பெயர் கேட்கும்
இடமெல்லாம்
உன் பெயரை
நான் கொடுக்க
கணினியைப் போலவே
இரகசியமாக வைத்திருக்கிறாய்
உன் காதலை !
பலர் மறக்காது என்று கணினியில் இரகசிய பெயர் தங்கள் துணையின் பெயரை வைத்துக் கொள்வதும் உண்மை .
காதலி நினைவு வந்து விட்டால் தூக்கம் பறி பொய் விடும் என்ற காதல் அனுபவம் வைத்து எழுதிய கவிதை.
கடவுள் பக்தர்களுக்கு
ஆண்டுக்கு ஒரு நாள்தான்
சிவராத்திரி !
காதலியே
உன் பக்தன் எனக்கு
தினம் தினம் !
இன்றைய கல்லூரி காதல் பற்றிய நடப்பியலை நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .புதிய காதலர்கள் பற்றி கல்லூரியே பேசிக்கொள்ளும் இயல்பை உணர்த்தி உள்ளார் .
எனக்கு
நீ அனுப்பிய
குறுசெய்திதான்
அந்த ஆண்டு
கல்லூரிக்கே
தலைப்பு செய்தி !
எல்லோர்க்கும் அவரவர் காதலி தேவதைதான் .அழகிதான் .பேரழகிதான் சில சொற்களில் நன்கு உணர்த்துகின்றார் .
தேவதை என்று
உன்னை வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தவனை
இப்படியா நீ
காதலனாக்கி
வேடிக்கைப் பார்ப்பது !
நாய் குறைப்பது கூட காதலனுக்கு லவ் லவ் என்று கேட்கிறதாம். கொஞ்சம் அதிகம்தான் இருந்தாலும் ரசிக்கலாம் .
காதலர்தினப் பரிசாய்
நீ கொடுத்த
நாய்க்குட்டி
லவ் லவ் என்று
குரைக்கிறது !
காதல் ரசம் சொட்டச் சொட்ட கற்பனை கலந்து புதுக் கவிதை வடித்துள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
கருத்துகள்
கருத்துரையிடுக