கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ! நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை !
நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நேஷனல் பப்ளிஷர்ஸ் 2.வடக்கு உஸ்மான் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை .600017. விலை ரூபாய் 70. தொலைபேசி 044-28343385.
மின் அஞ்சல் national_publishers@yahoo.com
நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் நாடறிந்த நல்ல கவிஞர் .கவிக்கோ என்றால் அப்துல் ரகுமான் .அப்துல் ரகுமான் என்றால் கவிக்கோ என்பது அனைவரும் அறிந்த ஒன்று .கவிக்கோ என்ற பட்டத்திற்கு பெருமைகள் சேர்த்தவர் .அவரது புதிய படைப்பு கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை .நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க வைக்கின்றது ."நான் சிற்பி அம்மி கொத்த விருப்பம் இல்லை "என்று சொல்லி திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதுவதில்லை என்ற நல்ல கொள்கையோடு உறுதியாக வாழும் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் .
.
.
நூலிற்கான முன்னுரையும் கவிக்கோ அவர்களே எழுதி உள்ளார்கள் .
கைதை பற்றிய விளக்கம் மிக நன்று .
ஒளி எல்லா இடங்களில்
ஒளிந்திருக்கிறது
அது சில சந்தர்ப்பங்களில்
வெளிப்படுகிறது
மேகத்திலிருந்து
மின்னலைப் போல்
கல்லிலிருந்து தீப்பொறி போல்
கவிதையும் அப்படித்தான்
ஒளி காணும் பொருள்களிலும் இருக்கிறது !
கவிஞனுக்குள்ளும் இருக்கிறது !
இந்த வரிகளைப் படிக்கும்போது மகாகவி பாரதியின் வைர வரிகள் நினைவிற்கு வந்தது .'"இருள் என்பது இருட்டு அல்ல குறைந்தபட்ச ஒளி"அதுபோலதான் கவிதையும் எங்கும் நிறைந்து உள்ளன . ஒளியை கண்ணில் ஒளியோடு கவிஞன் பார்க்கும்போது கவிதைகள் பிறக்கின்றன .அட்டை முதல் அட்டை வரை அனைத்து கவிதைகளும் நன்றாக இருந்தாலும் ,பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .
நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் சொற்ச்சிற்பி என்பதால் அவரது கவிதைகள் சிலைபோல இருக்கும் தேவையற்ற ஒரு சொல்லும் இருக்காது .ஒரு சொல்லுக்கு பல அர்த்தமிருக்கும் .
வாழ்க்கை என்பது புதினம்
எழுதப்படுவதற்கு முன்பே
அதன் முன்னுரையும்
முடிவுரையும்
எழுதப்பட்டு விடுகின்றன .
இந்தப் பூக்களில்
எவை மணமாலைக்கு ?
எவை பிணமாலைக்கு ?
என் பயணத்தின்போது
கேள்விகளையே
என் பெட்டி படுக்கையாய்
எடுத்துச் செல்கிறேன் .
தத்துவ விசாரணை போல கவிதை உள்ளது . தந்தை பெரியார் சொன்னதுபோல எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி ? எதனால் ? என்ற கேள்விகள் கேட்க வேண்டும் .அதுதான் பகுத்தறிவுப் பெற்ற மனிதனுக்கு அழகு என்பதை கவிதையில் உணர்த்துகின்றார்
இந்தப் பூக்களில்
எவை மணமாலைக்கு ?
எவை பிணமாலைக்கு ?
இந்த வரிகளைப் படித்தப் போது கவிஞர் அமுத பாரதியின் வரிகள் நினைவிற்கு வந்தது .
இந்தக்காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல் !
ஜென் சிந்தனைகள் போல பல கவிதைகள் உள்ளன .வாழ்வின் நிலையாமை உணர்த்தும் கவிதைகளும் உள்ளன .
எந்தப் பூ
மறுபடியும்
இதயத்தில் பூக்குமோ ?
விதி
தொட்டிலைச் செய்யும்போதே
பாடையையும்
செய்துவிடுகிறது !
களையறுக்கும் அரிவாளுக்கும்
தலையறுக்கும் அரிவாளுக்கும்
ஒரே மாதிரி வேலைதான்
செய்கிறான் கொல்லன் !
கவிதை வரிகள் சில என்றாலும் படிக்கும் வாசகனை வெகு நேரம் சிந்திக்க வைக்கும் ஆற்றல் கவிக்கோ அப்துல் ரகுமான்அவர்களின் கவிதைகளுக்கு உண்டு கவிதைகளுக்கு மிகவும் பொருத்தமாக நூலின் உள்ள ஓவியங்களும் புகைப்படங்களும் உள்ளன .கவிதைக்கு மேலும் சிறப்பைக் கூட்டும் விதமாக உள்ளன .
நூலின் தலைப்பில் வரும் கவிதை .
கண்ணீர்த் துளிகளெல்லாம்
ஓரிடத்தில் கூடியிருந்தன
ஒரு கண்ணீர்த் துளியில் கூட
முகவரி இல்லை .
காதலனே
உன் சோகமே
என் கண்மை
விடியலிடம் எதோ
மந்திர வித்தை இருக்கிறது
அதன் ஷ்பரிசம்
எல்லாவற்றையும்
அழகாக மாற்றிவிடுகிறது !
நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை என்று எதையாவது சிந்தித்து எழுதி இருக்கலாம். ஆனால் எனக்கு கண்ணீர்த் துளிகள் என்பதை படித்தவுடன் ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலையே நினைவிற்கு வந்தது .ஈழத் தமிழரின் கண்ணீரைத் துடைக்காமல் நின்ற குற்றவாளிகள் நாம் என்ற குற்ற உணர்வும் வந்தது .
கவிதை
என் சுமைதாங்கி
மெழுகுவர்த்தி
அழுதுகொண்டே சிரிக்கிறது !
அதற்கு
வாழ்க்கையின் தத்துவம்
புரிந்துவிட்டதுபோலும் !
பால் கூடச்
சமைந்தால்
ஆடைக் கட்டிக் கொள்கிறது
நிலாவைப் பற்றிப் பாடாத கவிஞர் இல்லை .நிலாவைப் பாடாதவர் கவிஞரே இல்லை எனது உண்மை .அனைத்துக் கவிஞர்களின் பாடுபொருள் நிலா .
நிலா பற்றி நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் பார்வை மிகவும் வித்தியாசமானது .இதுவரை யாரும் இப்படிப் பார்க்கவில்லை .
நிலாவுக்குக் கொஞ்சம் கூட
வெட்கமில்லை
என்னைப் பார்க்கும்போதெல்லாம்
அழைக்கிறாள் !
உலகப் பொது மறை படைத்த திருவள்ளுவர் போல அறநெறி எழுதி உள்ளார் .சிலப்பதிகாரத்தை நினைவு படுத்துவது போல எழுதி உள்ளார் .
கவிஞர்களின் வாய்களிலிருந்து
பரல்கள் தெறித்தால்
கொடுங்கோலர்களின் அரசு
கவிழும்
பாவம் செய்த ஊர்கள் எரியும் !
கவிதையின் ஆற்றலை உணர்த்தும் விதமாக எழுதி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு பாராட்டுக்கள்
வணக்கம்
பதிலளிநீக்குசில கவிதை விளக்கம் வேண்டும் ஐயா
பதிலளிநீக்கு