ஒரு வானம் இரு சிறகு ! நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

ஒரு வானம் இரு சிறகு ! 

நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
கவிதா வெளியீடு .த  பெ .எண் 6123. 
8.மாசிலாமணி தெரு , பாண்டி பஜார் , தியாயராயர் நகர் , சென்னை   600017.தொலைபேசி 044-24364243.

நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா அவர்கள் நாடு அறிந்த நல்ல கவிஞர் .புதுக்கவிதை  தாத்தா என்று செல்லமாக  அழைக்கக் கூடிய கவிஞர் .கவிவேந்தர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர் .தமிழ்த்தேனீ இரா .மோகன் ,தமிழ்ச்சுடர் நிர்மலா  மோகன் , நான் மற்றும் பட்டிமன்ற அணியினரும் சென்னை சென்றபோது  கவிவேந்தர் மு .மேத்தா இல்லம்  சென்று இருந்தோம் .இன்முகத்தோடு வரவேற்று உபசரித்தார்கள் .பெரிய கவிஞர் என்ற பந்தா துளியும் இல்லாதவர் கவிவேந்தர் மு .மேத்தா .அவரை பலமுறை சந்தித்து இருக்கிறேன். அலைபேசியிலும் பேசி இருக்கிறேன் .நல்ல மனிதர் .பிறகுதான் கவிஞர் .கவிவேந்தர் மு .மேத்தா அவர்கள்தான் எல்லோரும் புதுக்கவிதை எழுதிட வழியை திறந்து  விட்டவர் .அவருடைய நூல் படித்து கவிஞர் ஆனவர்கள் உண்டு .

நூலில் உள்ள எல்லாக் கவிதைகளும் பிடித்து இருந்தாலும் ,பதச் சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு இதோ !

சூரிய சந்திரரும் 
சும்மா இருக்கையில் 
விளக்கிற்குக் கேட்குதாம் விளம்பரம் ...

இந்தக் கவிதை படித்தவுடன் குறை குடம் கூத்தாடும் .என்ற பொன்மொழி நினைவிற்கு வந்தது .

இந்த நூலில் கவிவேந்தர் மு .மேத்தா  அவர்கள் ஹைக்கூ கவிதைகளும் எழுதி உள்ளார்கள் .அவர் அன்று எழுதியது இன்றும் பொருந்துவதாக உள்ளன .

பதவிக்காக வலை விரிக்கப்பட்டது 
பதவியும் வலையாய்  விரிக்கப்பட்டது 
கண் விழித்தால் இந்தியாவைக் காணவில்லை ! 

இன்றைய அரசியல்வாதிகள் இந்தியாவை விலைபேசி விற்றாலும் விற்று விடுவார்கள் .

நீதித் துறையிலும் சிலரிடம் நேர்மை குறைந்து வருவதை உணர்த்தும் விதமான கவிதை ஒன்று .மிக நன்று .

நீதி !

நியாயங்களின் விலை 
இங்கே 
அதிகமாகி விட்டது !
எனவேதான் 
ஏழைகளால் 
அதை வாங்க இயலவில்லை !
சட்டம் என்பது 
வசதி படைத்தவர்களுக்கு 
வகுத்துக் கொடுத்த 
சௌகரியமாகிவிட்டது !

இன்றைய கல்வி முறை குழந்தைகளைக் கசக்கிப் பிழியும் விதமாக உள்ளன .கழுதை பொதி சுமப்பதைப்  போல குழந்தைகள்  பொதி சுமக்கும் அவலம் .எறும்பைப்  போல தன்  எடையை விட கூடுதலான எடை  சுமக்கும் பிஞ்சுகள் .மனிதாபிமானமற்ற கல்வி முறை மாற வேண்டும்  .மழலை மொட்டுகளின் சிரமத்தைப் படம் பிடித்துக் காட்டும் கவிதை

முதுகில் ஒரு மூட்டை !

மேதைகள் 
இப்போது 
சீதைகள் மாதிரி 
சிறையிருக்கிறார்கள் 
அசோகவனத்தில்  !

கல்வி இங்கே 
இதயத்தில் சுமக்கும் 
இனிமையாய் இல்லாமல் 

முதுகில்  சுமக்கும் மூட்டையாகிவிட்டது 
கொடுமை என்னவென்றால் 
குழந்தைகலெல்லாம்  கூனிகளாயினர் !

கலைமகளின் வீணையை 
ஏலம் போடுகிறார்கள் 
அன்பான அரசியல்வாதிகள் ! 

பட்டிமன்ற   மேடைகளில் பலரால் மேற்கோள் காட்டப்பட்ட கவிதை .
விழாத விழா !

இங்கே மரம்நடு விழாக்களை 
நடத்த வேண்டாம் !
இனிமேல் 
மனிதர்களை நடுகிற   
விழாக்களை  நடத்துவோம் 
சிலரை விட்டு வைப்பதை விட 
நட்டு வைப்பதே நல்லது .

ஊடகங்கள் நமது பண்பாட்டை சிதைத்து வருகின்றன .ஆண்கள் சிலர் காமுகர்களாக மாறி வருகின்றனர் .நாட்டில் வன்முறை பெருகி வருகின்றன .திருவள்ளுவர் ஒழுக்கத்தை உயிர்க்கு மேலாக 
வலியுறுத்தினார் .பண்பாடு போதிக்கும் விதமான கவிதை .

தலைகள் !

இராமனாகத்தான் வீட்டிலிருந்து 
வெளியே வந்தான் 
வீதியில் 
அடுத்தவீட்டு சீதைகள் 
அசைந்து நடந்த 
அழகைப் பார்த்ததும் 
தயங்கித் தயங்கி 
தலைகள் முளைக்கவே 
இராவணன் ஆனான் !

பத்துத்தலை இராவணனாவது 
தன் மனத்தில் 
ஒரு சீதையை 
ஒளித்து  வைத்திருந்தான்   
இந்த ஒரு தலை 
இராவணர்களின் 
உள்  மனதில் 
எத்தனை  சீதைகள் 
இருக்கிறார்களோ ?

இன்று குடி குடியை பெருமளவில் கெடுத்து வருகின்றது .மனிதநேய ஆர்வலர்கள் அனைவரும் கவலை கொள்ளும் விதமாக சமுதாயத்தில் பள்ளி , கல்லூரி மாணவர்கள் சீருடையோடு மதுக்கடை சென்று மது அருந்தும்  பழக்கம் நோய் போல பரவி  வருகிறது .  நாட்டில் மதுவிலக்கு  வராதா ? என குடும்பத்தில்  உள்ளோர் ஏங்கி வருகின்றனர் . மதுவின்  கொடுமை பற்றிய கவிதை .

தீபங்கள் தீ வைக்கலாமா ?

சுதந்திர பூமியில் 
அவர்கள் 
மதுவின் அடிமைகள் 
மதுக்குவளையை 
அவர்கள் காலி செய்கிறார்கள் !

அதற்கு பதிலாக 
அவர்கள் குடும்பத்தாரின் 
கண்ணீரை 
அது நிரப்பிக் கொள்கிறது !

காந்தியடிகளை தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட வைத்த திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் பற்றிய கவிதை நன்று .
செவிகளின் சிம்மாசனம் !

உள்ளங்கள் தோறும் 
உள்ளவர் - எங்கள் 
வள்ளுவர் !

ஒன்றே முக்கால் அடியால் 
உலகை அளந்த 
வல்லவர் !

அணுகும் உணர்ச்சிகளை 
அடக்கி வாசித்துப்      
பொய்யென்ற  
புணுகு பூசாத புலவர் !
இலக்கிய உலகத்தின் எவரெஸ்ட் !    

உடலால் மறைந்தபோதும் பாடலால் என்றும் வாழும் மகாகவி பாரதியார் பற்றிய கவிதை மிக நன்று .
பாரதி - என் தந்தை !

ஒவ்வொரு முறை 
படிக்கும்போதும் 
ஒவ்வொரு விதமாய் 
தருமமாய் 
தைரியமாய் 
ஞானமாய் 
நாணமாய் 
ஓ 
புரிகிறது 
அவன் ஒரு 
புத்தகமல்ல 
புத்தகசாலை ! 

சிந்திக்க வைக்கும் கவிதைகளின் தொகுப்பாக உள்ளது .புதுக்கவிதை எப்படி ? எழுத  வேண்டும் என்ற வகுப்பாக உள்ளது .புதுக்கவிதை எழுத வேண்டும் என்ற ஆசை உள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல் .

நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  அவர்களுக்கு பாராட்டுக்கள் .சமுதாயத்தை நெறிப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு எழுதி வரும் அவரது கவிப்பயணம் தொடர வாழ்த்துக்கள் .

கருத்துகள்

கருத்துரையிடுக