மீரா ஊசிகள் !
நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
அன்னம் வெளியீடு ,மனை எண் 1 நிர்மலா நகர் ,தஞ்சாவூர் .613 007.
விலை ரூபாய் 30.
நூல் ஆசிரியர் கவிஞர் மீரா அவர்கள் சிவகங்கையின் பெருமைகளில் ஒன்றானவர் . மீரா என்ற பெயரைப் படித்து விட்டு இன்றைய இளைய தலைமுறையினர் பெண் என்று நினைக்கக் கூடும் .எழுத்தாளர் சுஜாதா போல இவரும் ஆண் தான் .மீ . ராஜேந்திரன் என்ற இயற்ப்பெயரை மீரா என்று சுருக்கி புனைப்பெயர் வைத்துக் கொண்டவர் .இவரது கனவுகள் =கற்பனைகள் =காகிதங்கள் அன்றைய காதலர்களின் கரங்களில் தவழ்ந்த புகழ் பெற்ற காதல் கவிதை நூல். அந்த நூல் காதலுக்குப் பெருமை சேர்த்தது .இந்த நூல் சமுதாயச் சாடல் மிக்க நூல் .நூல் ஆசிரியர் கவிஞர் மீரா காதலும் சமுதாயச் சாடலும் எழுதியதால்தான் என்றும் நினைக்கப்படுகிறார் .மதுரை புத்தகத் திருவிழாவில் அவரது நூல்கள் இன்றும் நிறைய விற்பனையானது .காதல் மட்டுமே எழுதி இருந்தால் இந்த அளவிற்கு புகழ் கிடைத்து இருக்காது .காதல் கவிதை மட்டுமே எழுதும் கவிஞர்கள் சமுதாயச் சாடல் கவிதைகளும் எழுத முன் வர வேண்டும் .
இந்த நூலின் முதற்பதிப்பு 1974 ஆண்டு வெளி வந்தது .தற்போது எட்டு பதிப்புகளைத் தாண்டி வந்து விட்டது .அவர் அன்று எழுதிய அரசியல் சாடல் கவிதைகள் இன்றும் பொருந்துவதாக உள்ளது. அரசியல்வாதிகள் என்றும் மாறுவதே இல்லை என்பதை உணர்த்துகின்றன .நூலின் அணிந்துரையில் புதுமையாக ரகுமான் ,பாலசுந்தரம் , நூல் ஆசிரியர் கவிஞர் மீரா இவர்கள் பேசும் நடையில் உள்ளன .
ஊசிகள் என்பது நூலின் தலைப்பு .தவறு செய்பவர்களை மனசாட்சி என்னும் ஊசி கொண்டு குத்துவதுபோல எழுதி உள்ளார் .
வேகம் !
எங்கள் ஊர் எம் .எல் .எ .
எழு மாதத்தில்
எட்டுத்தடவை
கட்சி மாறினார்
மின்னல் வேகம்
என்ன வேகம் ?
இன்னும் எழுபது
கட்சி இருந்தால்
இன்னும் வேகம்
காட்டி இருப்பார்
என்ன தேசம்
இந்தத் தேசம் !
நெஞ்சில் உரத்துடன் ,நேர்மை திறத்துடன் ,துணிவுடன் கவிதைகள் வடித்துள்ளார் .மேயரின் ஊழல் கண்டு கொதித்து எள்ளல் சுவையுடன் எழுதியுள்ள கவிதை .
மேயர் மகன் தோட்டி மகனுக்குக் கூறியது .
குப்பா ! குப்பா !
உன்னைப் பெற்ற தந்தைக்கு
உன்னைத்தானே
அடிக்கத் தெரியும்
என்னைப் பெற்ற தந்தைக்கு
இந்த ஊரையே
அடிக்கத் தெரியும்
இப்போதேனும் ஒப்புகொள்ளேன்
என்றன் தந்தை
தானே பெரியவர் ...
வணக்கத்திற்குரியவர் !
அமைச்சர்கள் மக்கள் பணத்தை பேராசையுடன் கொள்ளை அடிக்கும் செயல் கண்டு நொந்து நையாண்டி செய்யும் விதமாக எழுதியுள்ள கவிதை .
ஆராமுதன்
அமைச்சர் பதவியை
இழந்து வருந்தி
இருந்த ஓர் இரவில்
ஆசை மனைவியைச்
சும்மா சும்மா
சுரண்டலானர் !
அம்மா கேட்டார் ஆத்திரத்தில்
" ஏன்தான் உங்களுக்கு
இன்னும் அந்தப்
பொல்லாப்பழக்கம்
போகவிலையோ ?
ஆனை மாதிரி !
அப்புசாமியின் அப்பா
ஆனை மாதிரி !
இருந்தபோது
எம் .பி .பதவி
இறந்தபோது
சிவலோகப்பதவி
அப்புசாமியின் அப்பா ஆனை மாதிரி !
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் . யானை இறந்தாலும் ஆயிரம் பொன் .என்ற பொன்மொழியை இருந்தாலும் பதவி! இறந்தாலும் பதவி !என்று மாற்றி சிந்தித்து உள்ளார் .
ஆள்வோர் கவனத்தில் கொள்ள ஏந்திய வைர வரிகள் .திருவள்ளுவர் போல அறநெறி போதிக்கும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார் .
எதிரொலி !
பெரிய நாட்டின்
பிரதமர் பொறுப்புடன்
மந்திரிமார்கள்
மத்தியில் சொன்னார்
விருந்தைக் குறைப்பீர் !
வெளிநாட்டுக்குப்
பறந்துபோகும்
பழக்கம் குறைப்பீர் !
தொலைபேசியிலே
சல சலவென்றே
பேசித்தொலைப்பதைப்
பெரிதும் குறைப்பீர் !
எங்கோ இருந்தோர்
எதிரொலி கேட்டது
" பிரியம் மிகுந்த
பிரதமரே உமது
மந்திரிசபையின்
எண்ணிக்கையை நீர்
கொஞ்சம் குறைப்பீர் ! கொஞ்சம் ...
நூல் ஆசிரியர் கவிஞர் மீரா அவர்கள் அன்று எழுதியது இன்றும் பொருந்தும் விதமாக இருப்பது .அன்றும் இன்றும் அரசியல்வாதிகள் திருந்த வில்லை என்பதையே உணர்த்துகின்றது .
உயிருள்ள பத்திரிகை !
லாரி மோதி
மாடு சாவு
மாடு முட்டிக்
கிழவி மரணம் !
கணவன் மனைவியின்
கழுதை அறுத்தான் !
மருமகன் மாமன்
மண்டையை உடைத்தான் !
இவைதாம்
என் தமிழ் இனத்தை மேலே
உயர்த்த வந்த
ஒரே உயிருள்ள
பத்திரிகையிலே
பளிச்சிடும் செய்திகள் !
இன்றைக்கும் செய்தித்தாள்களில் இது போன்ற செய்திகள்தான் வந்த வண்ணம் உள்ளது .மக்களும் மாறாமல் இருக்கின்றனர் என்பதையே உணர்த்துகின்றது .
நூல் ஆசிரியர் கவிஞர் மீரா அவர்கள் உடலால் இந்த உலகை விட்டு மறைந்தபோதும் கவிதைகளால் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் .
.
சமூகத்தில் உள்ள அவலங்களை இந்த கவிதைகள் கூறுகின்றனர்
பதிலளிநீக்கு