பன்னீர்ப் பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

பன்னீர்ப் பூக்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா ! 
மின் அஞ்சல் karuppiahbhavani@gmail.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

நிவேதிதா பதிப்பகம் .21. பால கிருஷ்ணா அடுக்ககம் ,8/97 பெரியார் பாதை ,சூளைமேடு ,சென்னை .84. அலைபேசி 99628 96884 மின் அஞ்சல்  nivethitha.pathipagam@yahoo.com
  விலை ரூபாய் 150.

நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா அவர்கள் துணை ஆட்சியராக இருந்து பணி  நிறைவு பெற்றவர் .74 வயது இளைஞர் .ஓய்வின்றி உழைத்து வரும் படைப்பாளி .திருக்குறள் செம்மல் ந .மணி மொழியானார் நடத்தும் விழாக்களில் முன் நிற்பவர் .கவிதை ,கதை ,வானொலி நாடகம் எழுதும் சகல கலா வல்லவர் .எல்லோருடனும் அன்பாகப்   பழகும் நல்லவர் .நாடகங்களில் நடித்த பன்முக ஆற்றலாளர் .குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ,திருக்குறள் செம்மல் ந .மணி மொழியானார் , தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ஆகியோரின் அணிந்துரைகள் நூலின் மகுடத்தில் பதித்த வைரக் கற்களாக  ஒளிர்கின்றது .

இந்த நூலில் 109 கவிதைகள் உள்ளன .204 பக்கங்கள் உள்ளன  .மரபுக்  கவிதை , புதுக் கவிதை இரண்டும் கலந்த கலவையாக உள்ளன .இலக்கணம் பற்றிய கவலையின்றி சுதந்திரமாக கவிதைகளை வடித்துளார் பாடாத பொருள் எனும் அளவிற்கு பல்வேறு பொருள்களில் பாடி உள்ளார் .பறந்து விரிந்து எழுதி உள்ளார்.சிவகங்கை மாவட்டத்தில் பிறந்த கவிகங்கையாய் வலம்  வருகிறார் .

'நன்னிலை உனக்கென்றால் எனக்குந்தான்'  என்று தொடங்கி 'பாடுவோம் அழகர் புகழ் வரை 'பல தலைப்புகளில் கவிதைகள் உள்ளன கவியரங்கக் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன .உள்ளத்தில் உள்ளது கவிதை என்ற இலக்கணப் படி மனதில் படத்தை கவிதைகளாக வடித்துள்ளார் .

எட்டாக்  கனியாகி வரும் தாய்மொழிக் கல்வி பற்றிய கவிதை நன்று .

தாய்மொழிக் கல்வியே தலையாய கல்வி !
முத்தமிழைத்   தந்தமொழி தமிழ்மொழியே !
மூவேந்தர் கொண்ட மொழி தமிழ்மொழியே !
பின் ஏனோ பள்ளிகளில் தமிழைக் காணோம் !
பிறமொழிகள் புறக்கடையில் வருவதேனோ ?

உலகப் பொதுமறையான திருக்குறளை உயர்த்திப் பிடிக்கும் வண்ணம் உள்ள கவிதை மிக நன்று .அதிக வரிகள் உள்ளன .பதச் சோறாக   சில வரிகள் மட்டும் எழுதி உள்ளேன் .

வள்ளுவம் சொல்லிடம் வாழ்க்கை நெறி !

வள்ளுவம் சொல்லிடம் வாழ்க்கை நெறி !
வளர்கின்ற நாட்டிற்கு வேண்டும் அறி !
ஒழுக்கத்தை  உயிராக மதிக்கச்  சொன்னார் !
உலகத்தில் அன்புடன் வாழச் சொன்னார் !

மெல்லிசைப் பாடல் கவிதைகளும் உள்ளன .பல்லவி ,அனுபல்லவி ,சரணம் என்று பிரித்து மேட்டுப் போட  வசதியாக எழுதி உள்ளார் .

நதி நீர் இணைப்பு என்பது இந்தியாவிற்கு அவசியம் .முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களும் விரும்பினார்கள். மதுரை பொறியாளர் ,நூல் ஆசிரியர் நண்பர் திரு காமராஜ் அவர்கள் நீர்வழிச் சாலை என்ற நதி நீர் இணைப்பு  திட்டத்தைத் தந்து பல வருடங்கள் ஆனபோதும் மைய அரசு பாராமுகமாக  உள்ளது   .நாட்டில் ஒரு பக்கம் வறட்சி .மறு பக்கம் வெள்ளம் .இந்த நிலை மாற நதி நீர் இணைப்பு அவசியம் .நீர்வழிச் சாலை பற்றிய கவிதை ஒன்று  .

கப்பல் போக்குவரத்தால் 
கலகலக்கும் நீர் வளத்தால் 
காடு  மேடெல்லாம் 
கழனியாக மாறிவிடும் !
சுற்றுச்சுழல் எல்லாம் 
சோலையாக மாறிவிடும் !

அரசியல்வாதிகள் கவனத்தில் கொண்டு நதிநீர் இணைக்க முன் வர வேண்டும் .கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள் .

இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று இருந்தேன் .மாநாடு போல நடந்தது .நண்பர்களும் உறவினர்களும் 5000,3000,1000. என்று கொடுத்து இவரது மூன்று நூல்களையும்  வாங்கி படைப்பாளியை ஊக்கப்படுத்தினார்கள் .

உயர்ந்த கல்வியின் சிறப்பை உணர்த்தும் கவிதை நன்று . தமிழ்ப்பாட்டி அவ்வையின்   மொழியை வழிமொழிந்து எழுதி உள்ளார் . 

கல்வியா ? செல்வமா ?

கல்வியிலே பெற்ற செல்வம் 
காலத்தாலே அழியாது -பெரும் 
கல்கத்தாலே பெற்ற செல்வம் 
கணப்பொழுதில் ஓடிவிடும் .

வாழ்க்கை என்றால் என்ன என்று விளக்கும் விதமாக உள்ள வாழ்க்கை கவிதை நன்று .

வாழ்க்கை !

வாழ்க்கை என்பது ஒருகலை - அதில் 
வாழ்ந்து காட்டுவது நம்நிலை !
வழியில் எதிர்த்திடும்  துயர் மலை - அதை 
துணிந்து உடைப்பது நம்நிலை !

உலகின் முதல் மொழியான ,உலக மொழிகளின் தாய்மொழியான தமிழ் மொழி பற்றிய கவிதை மிக நன்று .பாராட்டுக்கள் .

உலகம் போற்றுகின்ற ஒப்பில்லாமொழி !
உயிர்கள் விரும்பிப்  பேசும் மொழி !
உவமை நயம் தொனிக்கும் உயர்ந்த மொழி ! 
உடைமைப் பொருள் விளக்கும் உன்னத மொழி !

உலகின்  முதல் மொழி தமிழ் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டது. தமிழனுக்குதான் ஏற்றுக் கொள்ள மனம் இல்லை .இந்த நூல் சொற்க்களஞ்சியமாக உள்ளது .நூல் ஆசிரியர் கவிஞர் 
கா .கருப்பையா அவர்களுக்கு பாராட்டுக்கள் .அரசு அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றபோதும் .இலக்கியப் பணியில் இருந்து ஒய்வு பெறாமல் உழைப்பதற்கு நன்றி .தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துக்கள் .தமிழன்னைக்கு மகுடம் சூட்டுங்கள் 

-- 

கருத்துகள்