தமிழன் அன்றும் இன்றும் ! கவிஞர் இரா .இரவி !

தமிழன் அன்றும் இன்றும் !          கவிஞர் இரா .இரவி !

குளிரால் நடுங்கிய மயிலுக்கு இரக்கக் 
குணத்துடன் போர்வை வழங்கிய பேகன்  ஒரு தமிழன் !



முல்லைக்  கொடிப்  படர பயணித்தத்  தேரை  
மனம் உவந்து வழங்கி பாரி ஒரு தமிழன் !

ஆராய்ச்சி மணி அடித்த பசுவுக்கு 
அன்புடன் நீதி வழங்கிய மனுநீதிச் சோழன்  ஒரு தமிழன் !

சந்தோசம் இழந்து தவித்த புறாவிற்கு 
சதையை அறுத்துத் தந்த சிபிசக்கரவர்த்தி ஒரு தமிழன் !

தமிழ் தமிழர் என்ற சொற்களின்றியே உலகப்பொதுமறையாக்கி 
தமிழுக்குப் பெருமை சேர்த்த திருவள்ளுவர்   ஒரு தமிழன் !

நூற்றாண்டுகள்  கடந்தும் நிலைத்து நிற்கும் கல்லணை 
நிறுவி இன்றும்  நிலைத்து நின்ற கரிகாலன் ஒரு தமிழன் !

உலகம் வியக்கும் வண்ணம் சிற்பங்களுடன் மதுரையில் 
உன்னத மீனாட்சி கோவில் கட்டிய பாண்டியன் ஒரு தமிழன் !

கோபுரத்தின் நிழல் விழாமல் பெரிய கோவிலைக் 
கட்டி  எழுப்பிய இராஜராஜ சோழன் ஒரு தமிழன் !

தவறான நீதி கோவலனுக்கு வழங்கியதற்காக 
தன்  உயிரையே மாய்த்த  பாண்டியன் ஒரு தமிழன் !

முரசுக்கட்டிலில் அயர்ந்து உறங்கிய புலவர்க்கு 
மன்னன் சாமரம் வீசிக் காற்று வழங்கியது ஒரு தமிழன் !

நடிகைக்குக் கோவில் கட்டி மோசமான வரலாறு படைத்து  
நாட்டிற்குத் தலைக்குனிவைத் தந்தவன்  ஒரு தமிழன் !

அரிதாரம் பூசும் நடிகரை எல்லாம் கடவுள் என்றும் 
அவதாரப் புருசன் அழைப்பவன் என்றும் ஒரு தமிழன் !

நடிகரின் கட்அவுட்டிற்கு பாலபிசேகம் செய்து மகிழும் 
ரசிகனும் இன்றைய ஒரு தமிழன் !

திரையரங்கில் பிடித்த நடிகரின்  திரைப்படம் பார்க்கும்போது 
திரையரங்கிலேயே  சூடம் ஏற்றிக்  காட்டுபவனும் ஒரு தமிழன் !

பிடித்த நடிகரின் திரைப்படம் வெளிவராததற்காக 
பிடித்த உயிரையே மாய்த்தவன் இன்றைய ஒரு தமிழன் !

தொல்லைக்காட்சியாகிவிட்ட தொலைக்காட்சியில் நேரத்தை 
தொலைத்துவிட்டு வாடி நிற்பவனும் ஒரு தமிழன் !

மதுக்கடையில் மதுக் குடித்து மயங்கி 
மண்ணில் விழுந்தக் கிடப்பவனும்  ஒரு தமிழன் !

ஆங்கிலவழிக் கல்வியில் பயின்று முடித்துவிட்டு 
அன்னைத் தமிழில் பேச வராது என்பவனும் ஒரு தமிழன் !

தந்தையின் பெயரான முன்எழுத்தை  ஆங்கிலத்திலும் 
தன்  பெயரைத் தமிழிலும் எழுதுபவன் ஒரு தமிழன் !

பேசுகின்ற பேச்சில் ஆங்கிலச் சொற்களைக்  கலந்து 
பைந்தமிழைக் கொலை செய்து வருபவனும் ஒரு தமிழன் !

தாய்மொழி தமிழில் பேசத் தெரிந்தும் அரைகுறையாக
தமிழர்களிடையே ஆங்கிலத்தில் பேசுபவனும் ஒரு தமிழன் !

தன்னம்பிக்கையின்றி மூட நம்பிக்கையான சோதிடத்தை நம்பி 
தன்மானம் இழந்து ஏமாந்து வருபவனும் ஒரு தமிழன் !

பித்தலாட்டக்காரன் என்று   தெரிந்தே சாமியாரிடம் 
பணத்தைப்  பறி  கொடுப்பவனும்  ஒரு தமிழன் !

வந்தவர்களை எல்லாம் வலமாக வாழ் வைத்துவிட்டு 
வாழ்க்கையைத் தேடி புலம்பெயர்பவனும்  ஒரு தமிழன் !

பசித்திருக்கும் தாய் தந்தை மறந்து கோவிலில்
பணத்தைப்    போடுபவனும் ஒரு தமிழன் ! 

தமிழினத்தை ஈழத்தில்  படுகொலைகள்  செய்தபோதும் 
தமிழகத்தில் வேடிக்கைப் பார்த்தவனும்  ஒரு தமிழன் ! 

தமிழனின் நிலையை அன்றும் இன்றும் பாருங்கள் 
தமிழா உன் நிலையை மாற்று !தமிழரின் பெருமையை நிலை நிறுத்து !    
.

கருத்துகள்