நேரத்தைப் போற்றிடுவோம் ! காலத்தை வென்றிடுவோம் ! நூல் ஆசிரியர் கவிஞர் டி .வி .எஸ் .மணியன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

நேரத்தைப் போற்றிடுவோம் !
காலத்தை வென்றிடுவோம் !

நூல் ஆசிரியர் கவிஞர் டி .வி .எஸ் .மணியன்  !

நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி !

மணிமேகலை பிரசுரம் 7.தணிகாசலம் சாலை .தியாகராயர் நகர் ,சென்னை .17. 
விலை ரூபாய் 50.

மணிமேகலை பிரசுரத்தின் தரமான பதிப்பாக வந்துள்ளது .நூலின் அட்டை ,உள் ஓவியங்கள் ,அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன . நூல் ஆசிரியர் கவிஞர் டி .வி .எஸ் .மணியன்  அவர்கள் மின்னியலில் பட்டப்படிப்பும் , மேலாண்மையில் முதுநிலை பட்டமும் பெற்றவர் .தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கூடுதல் தலைமைப் பொறியாளராக இருந்து சமீபத்தில் ஒய்வு பெற்றவர் .தமிழ்த் துறையில் தொடர்பு இல்லாதவர்களின் தமிழ்ப்பணியே பாராட்டுக்குரியது .

இந்த நூலில் மரபுக் கவிதை ,புதுக் கவிதை இரண்டும்  உள்ளன .புது நடையில் படிக்கச் சுவையாகவும் ,சுகமாகவும் உள்ளன. பாராட்டுக்கள் .'வெளிச்சத்தை வெளிக்கொணர்வோம் 'என்ற தொகுப்பு நூலின் தொகுப்பு ஆசிரியர் இனிய நண்பர் ,கவிஞர் இளவல் ஹரிஹரன் அவர்கள் என்னுடைய முதல் கவிதையை முதன் முதலாக தொகுப்பு நூலில்  கொண்டு வந்ததன் காரணமாகவே இலக்கிய உலகிற்கு நான் வந்தேன் .தற்போது பத்திரப்பதிவுத் துறையில் துணைத் தலைவர் பதவில் இருக்கிறார்கள் .மிகச் சிறந்த கவிஞர் .பாரதிதாசன் நூற்றாண்டு கவிதைப் போட்டியில் பரிசு பெற்றவர் .இவரது அணிந்துரையும் ,கனடா சென்று பாராட்டுப் பெற்று திரும்பி உள்ள கலைமாமணி கவிதைஉறவு மாத இதழ் ஆசிரியர் ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் அவர்களின் அணிந்துரையும் நூலின் அழகிற்கு அழகு சேர்ப்பதாக உள்ளன .

நூல் ஆசிரியர் கவிஞர் டி .வி .எஸ் .மணியன்  அவர்களின் என்னுரையில் எழுதியுள்ள கவிதைக்கான விளக்கமே இந்த நூலுக்குப் பொருந்துவதாக உள்ளன  .
'கண்ணால் கண்டதை ,காதால் கேட்டதை ,மெய்யால் உணர்ந்ததை ,அறிவால்  அறிந்ததை உள்ளுக்குள் இழுத்து உள்ளத்துக்குள் திளைத்து ஏற்படும் உணர்வுகளின் வெளிப்பாடுதான் கவிதை .'
பன்மொழி அறிஞர் தெ .பொ .மீனாட்சி சுந்தரனார் அவர்கள் சொல்லும் கவிதை விளக்கம் மிக 
நன்று .புரியாத கவிதை எழுதும் கவிஞர்கள் புரிந்து புரியும்படி எழுத முன் வர வேண்டும் .
'அந்த பரமனே  வந்து கவிதை பாடினாலும் ,பாமரனுக்குப் புரிந்தால்தான் நல்ல கவிதை .' இந்த நூலில் உள்ள கவிதைகள் பாமரனுக்குப் புரியும் வண்ணம் மிக எளிமையாகவும் ,மிக இனிமையாகவும் உள்ளன .

75 தலைப்புகளில் கவிதைகள் உள்ளன .நம்மை சிந்திக்க வைக்கின்றன .தன்னம்பிக்கை விதைக்கின்றன .நந்தவனத்தில் நடந்து வந்த மகிழ்வை இந்த நூல் வாசிக்கும்போது உணர்ந்தேன் .தெளிந்த நீரோடைப் போன்ற மிக நல்ல நடை .நூலின் தலைப்பிற்கான கவிதை நன்று .

.நேரத்தைப் போற்றிடுவோம் !
காலத்தை வென்றிடுவோம் !

நொடியும் நிமிடமும் திருப்புவதில்லை 
வயதும் வாலிபமும் அதுபோல்தான் 
நேரத்தை நழுவ விடாதே !
காலத்தைக் கழுவி விடாதே !
சிந்தித்தே நேரத்தை வீணாக்காதே !
சிந்திக்காமல் செயலை ஆற்றிடாதே !

அளவிற்கு மீறி சிந்திப்பதும் நஞ்சு என்கிறார் .நேரம் பற்றி பல கவிதைகள் உள்ளன .காலம் பொன்னை  விட மேலானது என்பதை உணர்த்தும் விதமாக கவிதைகள் உள்ளன .

முதல் எழுத்து ஒன்றி வரும் மோனை நடையில் க ,கா இரண்டு எழுதுக்கள் மட்டும் வரியின்  முதல் எழுத்தாக வரும் விதமாக 65 வரிகளில் எழுதி உள்ள கவிதை மிக நன்று .இந்தக் கவிதையை வாசித்து விட்டு சட்டசபைத் தலைவர் திரு .காளிமுத்து அவர்கள் பாராட்டிய மலரும் நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார் நூல் ஆசிரியர் கவிஞர் டி .வி .எஸ் .மணியன் .

சில வரிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு .
கார்த்திகை மாசத்திலே 
கடுகளவு வெளிச்சமில்லா 
காரிருளில்  ஓரிரவில் 
கண்மாய்க் கரையருகில் 
கருவேலங் காட்டினிலே  
கல்தூண் மண்டபத்திலே !

இப்படி நம் கண் முன் படிக்கும் வரிகளைக் காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .

தேவையான பிடிமானம் !
பறக்கும் பறவை போன்றதே !
மின்னும் வாளும் !
இலேசாகப் பிடித்தால் 
கையைவிட்டு ப் போகும் 
இறுக்கமாகப் பிடித்தால் 
ஏற்படும் காயம் 
தேவையான நேரத்தில் 
தேவையான  அளவு பிடிமானம் 
தேவையான பலத்தைத் தந்திட !

கத்திப் பிடிக்கும் கவனம் வலியுருதுக் கவிதை படித்தபோது .விவேகானந்தர் அன்னையிடம் துறவியாக அனுமதி வேண்டியபோது கத்தியை எடுக்கச் சொன்னார்கள் .விவேகானந்தர் கத்தியை மிக கவனமாக உயிர் மீது உள்ள ஆசையுடன் காயம் படா வண்ணம் எடுத்தார் .எப்போது துறவி ஆக  வேண்டாம் .என்றார் .சில நாள் கழித்து கத்தியை எடுத்தபோது உயிர் மீது ஆசையின்றி காயம் படும் விதமாக எடுதார்  .அன்னை துறவியாக சம்மதித்தார் .இந்த இலக்கணப்படி பார்த்தால்  இன்று உள்ள துறவி ஒருவர் கூட துறவி ஆக முடியாது . .ஒரு கவிதை படிக்கும் போது அது தொடர்பானவை நினைவிற்கு வருவதே  படைப்பாளியின் வெற்றி .

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலரை கவிஞர்கள் பாராட்டி கவிதை படித்து இருக்கிறோம் .இவர் குறிஞ்சி மலரை இகழ்ந்து மல்லிகையை புகழ்ந்து வித்தியாசமாக எழுதி உள்ளார் .

மாண்புமிகு  மல்லிகை !

எப்போதோ பூக்கிறாய்  
எங்கேயோ பூக்கிறாய்  
குறிஞ்சி மலரே !
உயர்ந்த இடத்தில இருக்கும் 
உனைக் காண 
ஊர்களிலிருந்து ஓடி வருகிறார்கள் 
உன்னை ஒன்று கேட்பேன் 
உன்னால் யாருக்கு லாபம் ?

 மதுவின் தீமையைச் சாடி கவிதை வடித்துள்ளார் .

வேண்டாம் மது !
எல்லாம் எதனால் 
பாழும் குடியினால் 
வேண்டாம் அது !
வேண்டாம் மது !

மனிதனை நெறிபடுத்தும் விதம்மாக கவிதைகள் உள்ளன .

பருத்தியின் பிரசவம் 
பஞ்சு பிறக்கிறது !
பேராசையின் பிரசவம் 
பாவம் பிறக்கிறது !
கெட்ட செயல்கள் 
நன்மை பயக்காது !
நல்ல செயல்கள் 
தீங்கு செய்யாது !

மொத்தத்தில் நூலில் சந்தக் கவிதைகள் சங்கக் கவிதைகளை நினைவூட்டும் வண்ணம் உள்ளன .நூல் ஆசிரியர் கவிஞர் டி .வி .எஸ் .மணியன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் 
.


கருத்துகள்