தங்க மீன்கள் !
இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !
நல்ல திரைப்படம் பார்த்து அதிக நாட்கள் ஆகி விட்டன .அந்த ஏக்கத்தை தீர்க்க வந்த திரைப்படம் .குடும்பத்துடன் தைரியமாக செல்லும் படம் .கதையே இல்லாமல் நடிகையின் சதையை நம்பி மட்டும் மசாலாப் படம் எடுக்கும் இயக்குனர்கள் பார்த்து திருந்த வேண்டிய மிக நல்ல படம் .
ஆசிரியர்கள் இரண்டு வகை வல்லினம் மெல்லினம் . வல்லினமாக உள்ள ஆசிரியர்கள் மெல்லினமாக மாற வேண்டும் என்பதுதான் கதை .
இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் அவரே நடித்துள்ள படம் .பெண் குழந்தை பெற்ற அப்பாக்கள் அவசியம் பார்த்து நெகிழ வேண்டிய படம் .பெண் குழந்தை பெறாதவர்களை நமக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என ஏங்க வைக்கும் படம் .அபியும் நானும் படம் போல அப்பா மகள் பாசத்தை வேறு விதமாகக் காட்டிய படம் .
.
இந்தப்படத்திற்கு தேசிய விருது உறுதி என்று என்னால் அறுதி இட்டுக் கூற முடியும் .அவ்வளவு சிறப்பாக உள்ளது .தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து அழும் என் மனைவியை நான் கேலி செய்து சிரிப்பதுண்டு .எல்லாம் நடிப்பு ஏன் அழுகிறாய் என்பேன் .இந்தப் படம் பார்க்கும்போது பல இடங்களில் நான் கண் கலங்கி விட்டேன் .
பத்துப் பேரை எட்டி உதைக்கும் சண்டைக் காட்சிகள் இல்லை. வன்முறை இல்லை குத்துப்பாட்டு இல்லை ,கவர்ச்சி நடிகை இல்லை வழக்கமான திரைப்பட சூத்திரம் எதுவுமின்றி மிக இயல்பாக துணிவாக இயக்கி நடித்து உள்ளார் ராம் .
பிஞ்சுக் குழந்தைகளை கசக்கிப் பிழியும் ஆங்கிலப் பள்ளிகளின் முகத் திரை கிழித்து உள்ளார் .ஆங்கிலப் பள்ளி மோகத்தால் நடக்கும் பொருளாதாரப் பிரச்சனை , குடும்பப் பிரச்சனை அனைத்தையும் படத்தில் காட்டி உள்ளார் .
கல்யாணி என்ற பாத்திரத்தில் இயக்குனர் ராம் .அவர் மகள் செல்லம்மாளாக நடித்துள்ள குழந்தை நடிக்கவில்லை வாழ்ந்து காட்டி உள்ளது . தாய் வேடத்தில் நடிகை ரோகினி ,அவரது தந்தை , மனைவியாக ,பள்ளி ஆசிரியர்கள் அனைவருமே மிக நன்றாக நடித்து உள்ளார்கள் .
இசைஅமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையில் தந்தை இளையராஜாவை மிஞ்சும் அளவிற்கு இசை அமைத்து உள்ளார் .தொடர் வண்டி போகும் காட்சியில் தொடர் வண்டியே திரையரங்கின் உள்ளே வந்து விட்டதோ என்று என்னும் விதமாக உள்ளது பின்னணி இசை .
தாத்தா பேத்தியை மகிழுந்தில் வா என்று அழைக்க பையை மட்டும் கொண்டு போ என்று கொடுத்து விட்டு அப்பாவுடன் மிதிவண்டியில் செல்லும் செல்லம்மாள் படம் பார்த்து விட்டு வந்தபின்னும் மனதில் நிற்கிறாள் .
தாத்தா அப்பாவை அடித்ததும் அப்பா கோபித்துக் கொண்டு கொச்சின் சென்றதும் மகள் செல்லம்மாள் , அப்பாவை நினைத்து ஏங்கும் தவிப்பு திரைச் சித்திரம் .
பாட்டி மகள் ஆஸ்திரேலியாவில் இருந்து வருவதால் மகள் வழிப் பேரன் புகைப்படம் இல்லை என்று வருத்தப்படுவாள் என்று மகன் வழி பேத்தி செல்லம்மாள் புகைப்படம் அவிழ்த்து வைப்பது கண்டு மனம் வாடும் செல்லம்மாள்.
அப்பாவிடம் விளம்பரத்தில் வருவது போன்ற நாய் வாங்கித் தாப்பா என்று கேட்கும் மகள் .அந்த நாயின் விலை 22500.மகள் கேட்டதால் எப்படியாவது வாங்கித் தர உழைக்கிறான் .விளம்பரத்தைப் பார்த்து கேட்பதையெல்லாம் வாங்கித் தரலாமா ? என்று கேலி பேசுகிறாள் சகோதரி .
குழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள் என்று பெற்றோர்களுக்கு உணர்த்தும் படம் .பெற்றோர்களும் திருமணம் ஆன மகனின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள் என்று உணர்த்தும் படம் .
ஆங்கிலப் பள்ளியில் படிப்பே வரவில்லை என்று திட்டி விரட்டிய குழந்தை அரசுப்பள்ளியில் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெறுகின்றது .குறை குழந்தைகளிடம் இல்லை கசக்கிப் பிழியும் ஆங்கிலப்பள்ளிகளிடமே உள்ளது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் .
காதலித்து மனம் முடித்த மனைவியைவிட மகளை மிகவும் நேசிக்கும் தந்தையின் கதை இது .திரையரங்கை விட்டு வெளியே வந்தபின்னும் படத்தின் பாதிப்பு மனதை விட்டு அகலவில்லை .இதுதான் இயக்குனர் ராமின் வெற்றி .
சுவரோட்டில் உள்ள வாசகங்கள் யாவும் உண்மை .
அம்மாவோ ,மனைவியோ ,அக்காவோ ,தங்கையோ எல்லோரும் மகள்களுக்கு அப்புறம்தான் .
இறந்தபின்னும் அப்பாக்கள் கதாநாயகனாக வாழ்வது மகள்களின் மனதில் மட்டும்தான் .
இயக்குனர் ராம் அவர்களுக்கு பாராட்டுக்கள் .இந்தப்படத்தை உங்களைத் தவிர வேறு எந்த நடிகர் நடித்து இருந்தாலும் சொதப்பி இருப்பார்கள்.நிங்கள் மிக நன்றாக நடித்து இயக்கி இருப்பதற்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
அனைவருக்கும் வேண்டுகோள் இந்த திரைப்படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் சென்று பார்த்து வெற்றிப் படமாக்குங்கள் .இந்தப்படம் வெற்றி பெற்றால்தான் ராம் போன்ற இயக்குனர்கள் தொடர்ந்து இது போன்ற நல்ல படம் எடுக்க முன் வருவார்கள் .தேசிய விருது உறுதி .மக்கள் விருதையும் வழங்குங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக