மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை ! நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை !
நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் !
வைகை வெளியீடு ,6/16 புறவழிச் சாலை ,மதுரை .18.
மூட நம்பிக்கைகளிலிருந்து நம் மக்களை விடுவிக்க வேண்டிய அவசியம் உள்ளது .அந்த நோக்கத்தை நேரிவேற்றும் விதமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்ட உண்மைகளை மிகத் துணிவுடன் பதிவு செய்துள்ளார் .
16 கட்டுரைகள் உள்ளன .மூட நம்பிக்கைகளை தகர்க்கும் விதமாக உள்ளன .ஜோதிடம் என்பது கற்பிக்கப்பட்ட கற்பனை என்பதை நன்கு விளக்கி உள்ளார் .நம்பிக்கையும் மூட நம்பிக்கையும் ,ஜோதிடம் ஒரு அறிவியலா ? பேய்களை நம்பாதே ! பிஞ்சிலே வெம்பாதே !, எத்தனை பூசைகள் எத்தனை யாகங்கள் ஏன் ஒழியவில்லை வறுமை ? இப்படி கட்டுரைகளின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றன .
நம்பிக்கையும் மூடநம்பிக்கையும் !
பகுத்தறிவினால் சோதித்து அறியபடாதது நம்பிக்கை .சோதித்து அறிய வாய்ப்பு இருந்தும் அப்படிச் செய்யாமலேயே ஒன்றை உண்மை என நினைப்பது மூடநம்பிக்கை .
காலவதியாகிப்போன நம்பிக்கைகளைக் கட்டிக் கொண்டு அழுதால் சமுதாயம் நாறிப் விடும் .என்று எச்சரிக்கை செய்துள்ளார் .
ஜோதிடம் ஓர் அறிவியல் என்று கதை விடுகிறார்கள் .இவர்கள் கொடுக்கிற கணக்குகளைப் போட்டுப் பார்த்து கிடைக்கிற பலன்கள் சரியாக இல்லை என்றாலோ கணக்குப் போட்டவர்க்கு - ஜோதிடருக்கு -கடவுள் அருள் இல்லை என்று சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள் .ஜோதிடம் ஓர் அறிவியல் என்பது மக்களை ஏமாற்றி இதன்பால் இழுக்க சிலர் போடும் நாடகமே .
இன்னொரு வேடிக்கை நோக்குங்கள் ,ஜோதிட சாஸ்திரத்தில் வரும் ஒன்பது கிரகங்களில் சந்திரனும் ஒன்று .ஆனால் உண்மையில் சூரியனை மட்டும் சுற்றி வரும் கிரகம் அல்ல சந்திரன் .மாறாக பூமியைச் சுற்றி வரும் ஒரு துணைக்கிரகம் அது .
ஜோதிடம் என்பது மூட நம்பிக்கை என்பதை அறிவியல் விளக்கங்களுடன் எழுதி உள்ளார்கள் .படிக்க அறிவு பிறக்கும் .
ஜோதிடம் என்பது அறிவியல் அல்ல ! அறிவை இழந்தவர்களின் நம்பிக்கை ! என்பதை மெய்ப்பிக்கும் நூல் .அனைவரும் வாங்கிப் படித்து மூட நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் .
இந்த நூல் படிக்கும்போதே நான் எழுதிய ஹைக்கூ கவிதைகள் நினைவிற்கு வந்தன .அதுதான் படைப்பாளியின் வெற்றி .
நான் எழுதிய ஹைக்கூ !
சொல்லவில்லை
எந்த சோதிடரும்
சுனாமி வருகை !
மடக்கட்டங்களால்
மனக்கட்டிடம் தகர்ப்பு
சோதிடம் !
பரணியில் பிறந்தவன்
தாரணி ஆள்வான்
கையில் திருவோடு !
வானவியலின் அடிப்படையில் ஜோதிட சாஸ்திரம் அமைத்திருப்பதாகச் சொல்வது பெரும் பித்தலாட்டம் .வானவியலின்சில உண்மைகளைப்
பெயருக்கு வைத்துக் கொண்டு நட்சத்திரங்களைக் கூறு போட்டு ஒரு மாயக் கோட்டையை எழுப்பி விட்டார்கள் .மனிதர்களைப் பொய் மான் வேட்டையாட வைத்து விட்டார்கள் .கிரகங்களிலும் சாதி வேறுபாடு விதைத்துள்ள ஜோதிட பித்தலாட்டத்தை அறிவியல் கருத்துக்களுடன் தோலுரித்துக் காட்டி உள்ளார் .
கணினி யுகத்திலும் மக்கள் ஜோதிடம் நம்புவது மடமை .
ஜோதிடம் சொல்கிறார் ,குறி சொல்கிறார் என்று மக்கள் குவிந்து ஆசாமிகளை சாமியாக்கி மோசம் போகும் அவலம் தினசரி செய்தாகி விட்டது .வேதனை .எல்லாம் அறிந்த ,தெரிந்த சாமியாருக்கு தன் அறையில் இருந்த கேமிரா தெரியாமல் போனது ஏன் ? என்று மக்கள் சிந்திப்பது இல்லை .
தொலைக்காட்சித் தொடர்களிலும் ,திரைப்படங்களிலும் ஜோதிடம் உண்மை என்பது போல காட்டி மக்களை முட்டாளாக்கி பணம் சேர்த்து வருகின்றனர் . பத்திரிகைகள் மக்களுக்கு அறிவைப் புகட்டுவதை விடுத்தது ராசி பலன் எழுதி முட்டாள்தனத்தைப் புகட்டி வருகின்றனர் .ராசிபலன் எழுதி பணம் சேர்த்து வருகின்றனர்.பொறுமையாக ஒரு நாள் எல்லா ராசி பலனையும் படித்துப் பாருங்கள் ஒன்றில் எழுதியதே மற்றொன்றில் எழுதி இருப்பார்கள் .
வாய்பிடுங்கி சாமர்த்தியத்தால்தான் ஜோதிடர்களின் ஏமாற்றுப் பிழைப்பு நடக்கின்றது .என்பதை உரையாடல்களுடன் உணர்த்தி உள்ளார் .
செவ்வாய் வெறுவாய் என்று சொல்லிவிட்டார்கள் .தமிழ்நாட்டில் செவ்வாயன்று எந்த ஒரு சுப நிகழ்ச்சியும் நடத்தப்படுவதில்லை .சனிக் கிழமைக்கும் கிட்டத்தட்ட இந்த கதிதான் .
எல்லாக் கிழமையும் நல்ல கிழமைதான் என்ற எண்ணம் வரவழைக்கும் நூல் இது .கெட்ட நாள் என்று எதுவுமில்லை என்று உணர்த்தும் நூல் இது .
முகராசி சகுனம் பார்க்கும் மூட நம்பிக்கைகளையும் விளக்கமாக எழுதி சாடி உள்ளார் .புத்திப் புகட்டி உள்ளார் .பகுத்தறிவுச் சிந்தனையை விதைத்து உள்ளார் .
பிஞ்சிலே வெம்பாதே என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடிய வைர வரியை தலைப்பாகக் கொண்டு , பேய்களை நம்பாதே ! பிஞ்சிலே வெம்பாதே !,கட்டுரை சிறப்பாக உள்ளது .
எண் ஜோதிடம் ,ஏடு ஜோதிடம்,கிளி ஜோதிடம்,கண் திருஷ்டி ,பூ போட்டுப் பார்த்தல் ,குறி கேட்டல் என்று நீண்டு கொண்டே போகிறது .என்கிறார் .
தற்போது அறிவியல் கண்டுப்பிடிப்பான கணினியையும் ஜோதிடத்திற்கு பயன்படுத்தும் அவலம் . கணினியிலும் ஜோதிடம் பிரசுரம் இப்படி மூட நம்பிக்கைகள் தொடர்ந்து கொண்டே வருகிறது .
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சொன்னது போல எதையும் ஏன் ? எதற்கு ? எதனால் ?எப்படி ? என்று கேட்கத் தொடங்கினால் மூட நம்பிக்கை முற்றுப்பெறும் .இந்த நூல் பகுத்தறிவைப் பரப்பும் நூல் .மூட நம்பிக்கை ஒழிக்கும் நூல் .நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
.
கருத்துகள்
கருத்துரையிடுக