அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அறிமுக நூல் - 2

திருக்குறள் !

நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வெளியீடு புரட்சிக்கவிஞர்  மன்றம் ,75.வடக்கு மாசி வீதி .மதுரை .625001.அலைபேசி 9443710219.
விலை ரூபாய் 20.

நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் 
விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் உள்ள வாழுகின்ற தமிழ் அறிஞர்களில் ஒருவர் .மிகச் சிறந்த தமிழறிஞர் என்பதையும் தாண்டி மிகச்சிறந்த மனிதர் .பண்பாளர் .இவர் சினம்  கொண்டு யாருமே  பார்த்து இருக்க முடியாது . எழுத்தாற்றலும்   பேச்சாற்றலும்   மிக்கவர் .மாதம் தோறும் புரட்சிக்கவிஞர்  மன்றத்தில் உரையாற்றி நூலை வெளியிட்டு வருகிறார்கள் .

மிகச் சிறந்த தமிழ்ப்பணியை செய்து வருகிறார்கள் .இளைய சமுதாயத்திற்கு தமிழைக் கொண்டு சேர்க்கும் பணி . அறிமுக நூல் - 1 தொல்காப்பியத்தை தொடர்ந்து அறிமுக நூல் - 2 திருக்குறள் அடுத்து ஆற்றுப்படை இப்படி 50 க்கும் மேலான தமிழ் இலக்கிய அறிமுக நூல்கள் வர உள்ளன .

இந்த நூலை மிகச் சிறப்பாக வடிவமைத்து , வெளியீட்டு விழா நடத்தி குறைந்த விலையில் 20 ரூபாயில் வெளியிட்டு வரும் புரட்சிக்கவிஞர்  மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் அவர்களுக்கு பாராட்டுக்கள் . 

ஒரு பக்கம் ஊடகங்களில்  தமிழ்க்கொலை நடக்கின்றன .தமிழர்களின் இல்லங்களிலும் , உள்ளங்களிலும் தமிழ் குறைந்து வருகின்றது .தமிழ் வழிக் கல்விக்கு மூடு விழா நடத்தி ஆங்கில வழிக் கல்விக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கும் நிலை .தமிழ் ஆர்வலர்களுக்கு வேதனை .வெந்த புண்ணில் வேல் பாய்வதாக தமிழ்நாட்டில் நிகழ்வுகள் இருந்தாலும், புண்ணுக்கு மருந்தாக உலகின் முதல் மொழி தமிழ் .உலகின் முதல் மனிதன் தமிழன் .இலக்கண இலக்கியங்கள் நிறைந்த மொழி தமிழ் மொழி என்பதை பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .இந்த நூல் படித்தால் உலகின் ஒப்பற்ற இலக்கியமான  திருக்குறள் தமிழ் மொழியில் உள்ளதற்காக உலகில் உள்ள ஓவ்வொரு தமிழரும் தமிழராய்ப்   பிறந்ததற்காக பெருமை கொள்ளும் விதமாக நூல் உள்ளது . 

தமிழாசிரியர்கள் , தமிழ் மாணவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் .வினா விடையில் நூலின் நடை மிக நன்று .படிக்கும் அனைவருக்கும் எளிதில் புரியும் விதமாக நூல் உள்ளது .திருக்குறள் தொடர்பான ஐயம் நீக்கும் விதமாக நூல் உள்ளது .

நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் மிக இனிமையானவர் ,எளிமையானவர் அவர் எழுத்தும் அவர் போலவே இனிமையாகவும் , எளிமையாகவும்  உள்ளன . நூல்ஆசிரியர் குழந்தை  உள்ளம் கொண்டவர் இந்த நூல் படித்தால் குழந்தைகளுக்கும் புரியும் விதமாக எழுதி உள்ளார்கள் .

திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் விதமாக பல் நூல்கள் வந்தபோதும் இந்தநூலிற்கு  இணையாக ஒரு நூல் இல்லை என்றே சொல்லலாம் .தமிழர்களின் இல்லங்களில் இருக்க வேண்டிய நூல் .நாம் வாங்கி படிப்பது மட்டுமன்றி நமது நண்பர்களுக்கும் பரிசளித்து மகிழ வேண்டிய நூல் .40 பக்கங்கள் மட்டுமே உள்ள கை அடக்க  நூல் .படிக்கத் தொடங்கினால் தொடர்ந்து படித்து முடித்து விடுவோம் .

பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ .

திருக்குறள் என்பதன் பொருள் விளக்குக .

குறள் யாப்பால் அமைந்த நூல்   'குறள் ' என்றே வழங்கப்பட்டது .அதன்   அருமையும் பெருமையும்    கருதிய பின்னவர்கள்  'திரு' என்றும் அடைமொழியைச் சேர்த்துத் திருக்குறள் என்றனர் .

உலகப்பொது மறையாகும் திருக்குறள் எனதை தொலைநோக்கு சிந்தனையுடன் பொருத்தமாக நூலின் பெயரிலேயே திரு சேர்த்து சிறப்பித்து உள்ளனர் என்பதை உணர முடிந்தது .

அறம் பொருள்  இன்பம் எனப்  பிறர் கூறினாலும் திருவள்ளுவர் அறம் பொருள்  காமம் என்று முப்பால் பெயர் சூட்டியது ஏன் ?

 அறம் பொருள்  இன்பம் என முறை வகுத்த தொல்காப்பியர் " இன்பம் என்பது  எல்லா உயிர்க்கும் பொதுவானது ' என்றார் .ஆனால் திருவள்ளுவர் ஆறறிவுடைய மாந்தர்க்கே  நூல் செய்தலால் ,மற்றைய உயிர்கள் கொள்ளும் இன்பம் போல் இல்லாமல் என்றும் வளர்வதாய் நிலை பெறுவதாய் முறைமையுடையதாய் அமைந்த நிறை இன்பத்தைக் காமம் என்றார் .எனெனில் ,தொல்காப்பியரே ' கமம் நிறைந்தியலும் ' என்றார் .ஆதலால்  கமம் - காமம் ஆயிற்று .
.
மனிதர்களின் ஒழுக்கம் சார்ந்த நிறை இன்பான காமம் என்ற  நல்ல   சொல்லை கொச்சையாக்கி  விட்டோமே என்று வருந்தும்படியான புதிய விளக்கம் .

தவம் ,வாய்மை என்பவற்றின் பொருள்கள் எவை ?

தவம் என்பது அவரவர்க்குரிய  கடமைகளைச் செவ்வையாகச்  செய்தலும் ,தம் துயர் தாங்கிக் கொண்டு ,பிற உயிர்களுக்குத் துயர் செய்யாமையுமாம் .
வாய்மை என்பது எவருக்கும் எத தீமையும் வராத சொல்லைச் சொல்லுதல் ஆம் ,பிறர்க்கு நன்மை பயக்குமாயின் அப்பொழுது சொல்லும் பொய்யும்  கூட  வாய்மைச் செயலைச் செய்ததாகக் கொள்ளப்படும் .என்றாலும் பொய் மெய்யாகி  விடாது .பொய் 
பொய்யேயாம்  .

மேடையில்   சிலர் பேசா விட்டாலும் பேசியதாகக் கருதி என்பார்கள் .ஆனால் அவர்கள் பேசவில்லை என்பதே உண்மை .அது போல பிறருக்குத் தீங்கு இல்லாத பொய் மெய்யாகக் கருதலாம் ஆனால் மெய்யாகி விடாது .பொய் மெய்யாகி  விடாது .பொய் 
பொய்யேயாம்  .என்ற முடிப்பு மிக நன்று .

நட்பு என்பது என்ன ?
நட்பு ;
நல்ல நட்பு வளர்பிறை போல வளரும் என்றும் பழகப் பழக நூல் நயம் போல் சிறக்கும் என்றும் உடை இழந்தவன் கை ஓடிக் காப்பது போல் உதவுவான் என்றும் .
மகிழ்வதற்கு மட்டுமன்றி இடித்துக் கூறித் திருத்துவதற்கும் நட்பு துணிவாக நிற்கும் "என்றும் நட்பினைப் பற்றி வள்ளுவர் கூறுகிறார் .

நட்பின் இலக்கணத்தை திருவள்ளுவர் சொன்னதை வழிமொழிந்து எழுதிய விளக்கம் மிக நன்று .நண்பன் தவறு செய்தால் எடுத்துச் சொல்லி திருத்துபவனே உண்மையான நண்பன் .இதை இன்றைய இளைய தலைமுறையினர்  புரிந்து கொள்ள வேண்டும் .
திருக்குறளின் நுட்பத்தை ,விளக்கத்தை ,சிறப்பை ,அருமை, பெருமையை எளிய வினா விடை நடையில் எழுதியுள்ள நல்ல நூல் .நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்களுக்கும்  வெளியீட்டாளர் பி .வரதராசன் அவர்களுக்கும்  பாராட்டுக்கள் .தொடரட்டும் உங்களின் தமிழ்ப்பணி .

கருத்துகள்