ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ  ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !

காட்சிப் பொருளானது 
கிராமத்தில் 
ஏர் கலப்பை !



காற்று உள்ளபோதே 
தூற்றலாம் 
தூற்ற நெல் ?

விளைச்சல் குறையும் 
விலைகள் ஏறும் 
உலகமயம் ! 

ஈரமில்லா இலை உதிரும் 
ஈரமில்லா மனிதன் 
வீழ்வான் !

காற்றால் உயர்ந்தது 
காற்றால் வீழ்ந்தது 
சருகு !

பணம் வாங்கி 
பாகனிடம் தந்தது 
யானை !

விமானம் தொடர் வண்டி இயக்கியும் 
வீட்டில் கையில் கரண்டி 
புதுமைப்பெண் !

முள்ளிலிருந்து விடுதலை 
தலைவி தலையில் சிறை 
ரோஜா !

சலிப்பதில்லை 
பார்த்திடவும் பேசிடவும் 
காதலி !

ஏற்றத்தாழ்வுகள் தகர்க்கும் 
சமநிலை கற்பிக்கும் 
காதல் !

முக்காலமும் வாழும் 
முப்பால் விருந்து 
திருக்குறள் !

அழகாக இல்லை 
ஆரோக்கியம் உண்டு 
கீரை !

வானிலிருந்து பயணம் 
பூமியில் சங்கமம் 
மழை ! 
.

கருத்துகள்