வலி தாங்கும் மூங்கில் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வலி தாங்கும் மூங்கில் ! 
நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

பாவை பப்ளிகேசன்ஸ் ,142.ஜானி ஜான் கான் சாலை .இராயப்பேட்டை,சென்னை .14. விலை ரூபாய் 50.

 வலி தாங்கும் மூங்கில் நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது .வலி தாங்கும் மூங்கில் தான் புல்லாங்குழல் ஆகின்றது .இசை தருகின்றது .துன்பத்தைத் தாங்கினால்தான் வாழ்வில் வெற்றிப் பெறலாம் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக நூல் உள்ளது .தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக முத்தாய்ப்பாக 30 கட்டுரைகள் உள்ளன .

இனிய நண்பர் நூல் ஆசிரியர் ஞா. சந்திரன் .புனித மரிய மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் , கவிஞர் ,கட்டுரையாளர் ,தன்னம்பிக்கைப்  பேச்சாளர் பன்முக ஆற்றலாளர் .இனிய  நண்பர் வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்கள் மதுரைக்கு வந்தால் சந்திக்கும் முதல் நண்பர் .புதுமனை புகு விழா ,இந்த நூல் வெளியீட்டு விழா , மகனுக்கு புனித விழா என்று முப்பெரும் விழா மதுரையில் நடத்தினார் .இவ்விழாவில் நானும் ,வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களும் , தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களும் ,பொறியாளர் சுரேஷ் அவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தோம் .விழா கோலாகலமாக நடந்தது .

.நூலில் வித்தகக் கவிஞர் பா .விஜய் மற்றும் கும்கி படப் புகழ் நடிகர் ,எழுத்தாளர்ஜோ .மல்லூரி இருவரின் வாழ்த்துரையும் மிக நன்று 
 
.கட்டுரைகளின் தலைப்புகள் தாழ்வு மனப்பான்மை ஓர் உயிர்க்கொல்லி ,நம்பிக்கை நலம் தரும் ,காலம் நம் கையில் ,தற்கொலை தீர்வன்று ,அவமானமும் வெகுமானமே இப்படி  ஊக்கம் தரும் விதமாக உள்ளன .

நூலில் உள்ள முனைவர் வெ .இறையன்பு அவர்களின் மேற்கோள் சிந்திக்க வைக்கின்றது ." சாப்பாட்டைக் கூட சடங்காக உண்பவர்கள் இருக்கிறார்கள் ;சடலத்தைக் கூட பொறுப்புடன் புதைப்பவர்கள் இருக்கிறார்கள் ."

.வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களின் மேற்கோள் வித்தியாசமாக உள்ளது ." வாழ்வே ஒரு கிரிக்கெட் அவநம்பிக்கை ,கவனமின்மை ,ஒழுக்கமின்மை , மறதி  மந்தச்சிந்தை ,மனபயம் ,அகந்தை ,அறிவின்மை ,தாழ்வுமனப்பான்மை ,சோர்வு ,அலட்சியம் எனும் பதினொரு ஆட்டக்காரர்கள் உன் ஒருவனை ஒழிக்கப் போராடுவார்கள் .நீ தனியாய்த் தன்னம்பிக்கை எனும் ரன்னோடு  ஓடு ;போராடு ;"

உண்மையில் தாழ்வுமனப்பான்மை நம்மை அளிக்கும் உயிர்க்கொல்லி நோயாகும்  என்கிறார் நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . முதுநிலை தமிழாசிரியாரகப் பணிபுரிகிறார் , ஆசிரியப் பணியோடு நின்று விடாமல் , பல்வேறு நூல்களைப் படிப்பவர் .பல நல்ல நூல்களில் இருந்து தேனீ மலர்களில் தேன் எடுப்பதுபோல எடுத்து நல்ல பல தன் முன்னேற்ற சிந்தனை விதைக்கும் கட்டுரைகளாக வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .

தேன் உடலுக்கு நல்லது .இந்த நூல் உள்ளத்திற்கு  நல்லது .வாழ்க்கையில் கடைபிடித்தால் சாதிக்கலாம் .இந்த நூல் படிப்பதற்கு முன் இருந்த மன நிலைக்கும்  படித்து முடித்தபின் உள்ள மன நிலைக்கும் உள்ள முன்னேற்றம்தான் நூலின் வெற்றி .பல்வேறு பயனுள்ள கருத்துக்களை  படிப்பதற்கு சுவையாக இருக்கும் வண்ணம் சின்னச் சின்ன கதைகளுடன் , நகைச் சுவை உணர்வுடன் கட்டுரை வடித்துள்ளார் .

தலைமைப்பண்பு பற்றிக் கவிஞர் வைரமுத்து அவர்கள் ,"தலைமை என்பது கெடுபிடிகளில் கிடைப்பது அல்ல ;கெடுபிடிகள் செய்பவர்களுக்கு எடுபிடிகள்தான் கிடைப்பார்கள் .உண்மையாகப் பின்பற்றுபவர்கள் கிடைக்க மாட்டார்கள் .பலாத்காரத்தால், மிரட்டலால் ,
பயமுறுத்தலால் ஏற்படுகின்ற தலைமை வானவில்லைப் போல அற்பநேரத்தில் அஸ்தமித்து விடுகின்றது ."இந்த பயனுள்ள தலைமைப்பண்பு பற்றிய  கருத்து நூலில் உள்ளது . 

வாழ்வியல் கருத்துக்கள் கற்பிக்கும் விதமாக நூல் உள்ளது .பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றி  ,பச்சைத்தமிழர் காமராசர் பற்றி  கருத்துக்கள் நூலில் உள்ளன .ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் மிகச்சிறப்பான மேற்கோள்கள் உள்ளன .கட்டுரையைப் படிக்கத் தூண்டும விதமாக உள்ளன .பதச்சோறாக சில 

அன்பு வளர்வதற்கான பக்குவத்தைக் குடும்பம் கற்றுத் தருகிறது .

துன்பங்கள் தாம் நம்முடிய ஆற்றல்களை நெறிப்படுத்தி ஆக்கப் பூர்வமாகச் செயற்படுத்த உதவுகின்றன .

பொறுமை என்பது பொக்கிஷம் நம்மிடம் உள்ளபோது  மற்ற எல்லாச் செல்வங்களும் நம்மைத் தேடி வரும் .

ஊலொன்றும் புறமொன்றுமாகப் பேசும் பேச்சு எந்த விதத்திலும் பிறரின் வளர்ச்சிக்கு உதவாது .

புத்தகங்கள் தாம் மனிதனை முழுமையாக்குகின்றன .முன்னேற்றுகின்றன .

சாகுறதுக்கு எத்தனை வழிகள் யோசிக்கிற ,ஆனா வாழ்றதுக்கு ஒரு வழியாவது யோசிக்கிறாயா ?

இதுபோன்ற கேள்வியின் மூலம் தற்கொலை முட்டாள்தனம் என்பதை உணர்த்தி வாழ்வின் பெருமையை உணர்த்தி உள்ளார் .வாழ்க்கை என்பது வாழ்வதற்கே சாவதற்கு அல்ல .இறப்பு என்பது தானாக வர வேண்டும் நாமாக வரவழைப்பது கோழைத்தனம் .வாழ்க்கையை ரசித்து வாழ் என்று உணர்த்துகின்றது நூல் .சாதனை நிகழ்த்து ,சரித்திரம் படை .வெற்றியை அடை என்று பயிற்சி தரும் கட்டுரைகள் .ஆபிரகாம் லிங்கன் வாழ்வில் அடைந்த தோல்விகள் ,அவமானங்கள் அவர் எதிர்கொண்ட விதம் நூலில் உள்ளன .

விண்ணக வாழ்வின் சுவையை நாம் மண்ணகத்தில் சுவைக்க முடியும் .எப்போது எனில் ,
" நம் உள்ளத்தின் நிறைவான அமைதியில் கோபம் என்னும் கொடிய நோயை விரட்டிஅமைதி, மகிழ்ச்சி என்னும் விலை மதிப்பில்லா ஆபரங்களை அணியும் போது ." 

முனைவர் வெ.இறையன்பு அவர்கள் புத்தகம் பற்றி எழுதிய கருத்துகள்  நூலில் உள்ளன .நூல் படிக்கும் வாசகனை நம்மை  சிந்திக்க வைக்கின்றது  .

"ஒவ்வொரு புத்தகமும் அச்சடித்த அனுபவம் ;கண்களால் கிசிகிசுக்கும் ரகசியம் ;பச்சை குத்தும் பரவசம் ;தொடர்ந்து கேட்கும் எதிரொலி ;எடுக்கும்போது வாள் ;தடுக்கும்போது கேடயம் ;எழுதும்போது கலப்பை ;அள்ளும்போது அகப்பை ;

இந்த விளக்கம் இந்த நூலிற்கு முற்றிலும் பொருந்தும் விதமாக உள்ளது . நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன்அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .பாவை பதிப்பகத்திற்கு ஒரு வேண்டுகோள் .அடுத்த பதிப்பில் ஒரு பக்கம் உள்ள எழுத்துக்கள் அடுத்த   பக்கம் தெரியாத அளவிற்கு அச்சிடுங்கள் .வாசகர்கள் படிப்பதற்கு சிரமமாக உள்ளது .



-- 

கருத்துகள்