முயன்றால் முடியும் ! நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

முயன்றால் முடியும் !

நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

மணிமேகலை பிரசுரம் .4.தணிகாசலம் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை .17. விலை ரூபாய் 13.

 "முயன்றால் முடியும் " நூலின் தலைப்பே தன்னம்பிக்கை விதைப்பதாக உள்ளது .உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவரின் திருக்குறளை வழிமொழிந்து எழுதிய அற்புத நூல் .பாராட்டுக்கள் . "புலிக்குப் பிறந்தது பூனையாகாது " என்ற பொன்மொழியை மெய்ப்பிக்கும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர் தமிழ்வாணன் .அவர்களின் மகன் லேனா தமிழ்வாணன் அவர்கள் மிகச் சிறப்பாக எழுதி வருகிறார்கள் .

 நூல் முழுவதும் முயற்சியின் பயனை விளக்கி உள்ளார்கள் .முயற்சியின் அவசியத்தை புரியும்படி விளக்கி உள்ளார்கள் .

 " பெரும்பாலான வெற்றியின் இலக்குகள் பல கட்டங்களைக் கொண்டவை . ஒவ்வொன்றாகத் தொட்டு உயர்ந்து படிப்படியாகத்தான் இலக்கை அடசிய முடியும்."
இன்று இளைஞர்கள் பலர் திரைப்படம் பார்த்து விட்டு கதாநாயகன் ஒரே ஒரு பாட்டில் பணக்காரன் ஆவதைப்போல ஆக வேண்டும் என்று எண்ணுகின்றனர் .வெற்றி, சாதனை என்பதெல்லாம் நொடியில், நிமிடத்தில் வருவது அல்ல படிப்படியாக வருவதுதான் பொறுமை வேண்டும் என்பதை நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் அவர்கள் நன்கு உணர்த்தி உள்ளார்கள் 
நூலில் உள்ள அனைத்துக் கருத்துக்களும் மிகவும் பயனுள்ளவை .கடைப்பிடித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் .

 பதச் சோறாக சில வரிகள் மட்டும் .
" ஒரு பெரிய பயணம் கூடச் சாதரணமாக ஒரு காலடி எடுத்து வைப்பதிலேயே ஆரம்பமாகிறது ." என்ற ஆங்கிலப் பழமொழியின் மூலம் தயங்காமல் முன்னோக்கி அடி எடுத்து வையுங்கள் என்று வலியுறுத்தி உள்ளார் .

அமெரிக்காவில் நடந்த உண்மை நிகிழ்வு  நெகிழ்வு .
ஒரு தாய் மகனைக் காப்பாற்றிய விதம் அருமை .தன் மகன் காருக்கு அடியில் இருந்த போது 
ஜாக்கி கருவி உடைந்து விடுகிறது .மகனின் கத்தல் கேட்டு ஓடி வந்து தாய் அக்கம் பக்கம் அழைக்கிறார் .யாரும் இல்லாததால் உடன் தானே காரை தூக்க முயற்சி செய்கிறார் .முதலில் முடிய வில்லை மீண்டும் முயல்கிறார் தன் மகனை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பில் காரை தூக்கி விடுகிறார் .மகன் பிழைத்து விடுகிறான் .அரசாங்கம் விருது தருகின்றது .
.
கூச்சம் ,தயக்கம் ,பயம் இவைதான் முயற்சியின் எதிரி என்பதை பல்வேறு எளிய உதாரணங்கள் மூலம் விளக்கி உள்ளார் .

நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் நண்பர் ஒருவருக்கு வீட்டின் சுற்றுச் சுவர் எழுப்ப  விரும்பியவரை ,பக்கத்து வீட்டுக்காரரிடம் பேச  தயங்கிவரை ,தயக்கம் நீக்கி கலந்து பேசி வைத்து செலவை பாதியாக பகிர்ந்து கொண்ட நிகழ்வு பயனுள்ளது ." நமக்கும் சாதனைகளுக்கும் ரொம்பத் தூரம் என்று எண்ணுகிற தாழ்வு மனப்பான்மைக் காரர்களும் முயற்சிகளைக் கண்டு விலகி ஓடுகிறவர்களே ."

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்துவிட வேண்டும் என்று உணர்த்துகின்றார் .

" ஒரு செயல் முடியாத செயலாக இருக்கலாம் .ஆனால் முயன்றுதான் பார்ப்போமே .முயற்சி செய்தால் என்ன தவறு ? இந்த அணுகுமுறையை ஒருவர் பின்பற்றினால் அதில் வெற்றி பெற வாய்ப்பு உண்டு .

எடிசன் முயன்றதால்தான் நமக்கு மின்சாரம் கிடைத்தது .முயற்சி திருவினையாக்கும் என்பது முற்றிலும் உண்மை .இப்படி நூல் முழுவது வெற்றி சூத்திரங்கள் நிறைய உள்ளன .கையடக்க நூல் என்றாலும் படித்து முடித்ததும் மனதளவில் மிகப்பெரிய மாற்றம் உண்டாக்கும் நூல் .தன்னம்பிக்கை விதைக்கும் நூல் .

நூலில் திருக்குறள் ,ஆங்கிலப் பொன்மொழிகள் ,முக்கிய நிகழ்வுகள் ,உதாரணங்கள் , கருத்துக்கள் யாவும் மிக எளிமையாகவும் ,இனிமையாகவும், படிக்க சுவையாகவும் உள்ளன .

மனிதர்கள் மூன்று  வகையினர் இருக்கிறார்கள் .
1.ஏனோ தானோ மனிதர்கள் !
2.முன்  எச்சரிக்கை மனிதர்கள் !
3.சாதிக்கப் பிறந்த மனிதர்கள் !

நம்மில் பலர் முதல் வகை ,இரண்டாம் வகை மனிதர்களாகவே வாழ்ந்து வருகின்றனர் .பிறந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை .பிறந்தோம் சாதித்தோம் என்பதே வாழ்க்கை .மூன்றாம் வகை சாதிக்கப் பிறந்த மனிதராக நம்மை  மாற்றும் நூல்  இது .
நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் முயற்சிகளை குறைவின்றி செய்து வர வேண்டும் .

சலிப்படைந்து விரக்தியில் முயற்சியை பாதியில் நிறுத்தி விடக் கூடாது .வெற்றிகளை விரும்புகிறவர்கள் ஒருபோதும் முயற்சிகளை நிறுத்துவதே இல்லை .

ஒரு நபர் பத்து முறை முயன்று ஒரு முறை வென்றார் .பத்து முறை வெற்றி பெற வேண்டுமானால் முயற்சிகளின் எண்ணிக்கையை கூட்டினால் பத்து முறை வெற்றி பெறலாம் .முயன்றால் முடியாதது எதுவுமில்லை உலகில் .முயலுங்கள் முயலுங்கள்  என்று உணர்த்தும் நூல் இது .

பலர் வாழ்கையை ரசித்து , மகிழ்ந்து வாழாமல் நொந்து, வெந்து ,விரக்தியில் எனக்கு வாழவே பிடிக்க வில்லை, .ஒரே தோல்வி மயம் ,சோதனை ,வேதனை ,தலையெழுத்து சரியில்லை. 
இப்படியே புலம்பி வாழ்ந்துவருகின்றனர் .அவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது .

ஒரு நூல் என்ன செய்யும் என்பதற்கு உதாரணம் இந்த நூல் .படித்துப் பாருங்கள் .முயற்சி என்னும் நெருப்பு உங்களைப் பற்றிக் கொள்ளும் .பற்றிய நெருப்பு வெற்றி என்ற சோதியாக ஒளிர்ந்திடும் . 
-- 

கருத்துகள்