கவிதை பாட ஆசை ! நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

கவிதை பாட ஆசை !

நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !   
viji.masi@gmail.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

விஜயா பப்ளிகேசன் .தென்றல் .100.அன்னை தெரசா நகர் ,மடிப்பாக்கம் ,சென்னை .91. விலை ரூபாய் 12.

நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்கள் "என்னைக் கவிதை எழுதத் தூண்டிய மடிப்பாக்கம் பாரதி இயக்கத்திற்கு " என்று எழுதி நூலை காணிக்கையாக்கி உள்ளார்கள் .சொற்கள் நடந்தால் வசனம் .சொற்கள் நடனமாடினால் கவிதை .இந்த நூலில் சொற்கள் களி  நடனம் புரிந்துள்ளன .உள்ளத்தில் உள்ளது கவிதை .உண்மையை உரைப்பது கவிதை .இயற்கையாகப் பொங்கி வருவது கவிதை .படித்ததும் மனதில் பதிவது கவிதை .இப்படி கவிதைக்கு பல்வேறு விளக்கங்கள்  எழுதிக் கொண்டே போகலாம் .இந்த நூலில் உள்ள கவிதைகள் கவிதைக்கான எல்லா விளக்கங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது .நல்ல கவிதை நூலை இவ்வாளவு ஆண்டுகளாக வாசிக்க விலையே என்று வருத்தப்பட்டேன் .இந்நூல் பதிப்பித்த ஆண்டு 1999.இன்றும் பொருந்துவதாக கவிதைகள் உள்ளது .அதுதான் நூல் ஆசிரியர் வெற்றி .

மரபுக் கவிஞர் ஆலந்தூர் கோ .மோகனரங்கன் ,புலவர் திலகம் சி .வித்யாசாகரம் இருவரின் அணிந்துரையும் அழகுரை .
இந்நூலில் உள்ள அனைத்துக் கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் , பதச்சோறாக சில கவிதைகள் மட்டும் உங்கள் பார்வைக்கு .

கவிதை பாட ஆசை !
நான் கவிதை பாட வேண்டும் !
நான் கவிஞனாக   வேண்டும் !
எதுகையும் மோனையும் தெரியுமா ?
தெரியாது .
இலக்கணம் பயிலாதவர் பாட்டெழுதுவதா ?
எதுகையும் மோனையும் 
எதுவென்று  தெரிந்துதான் 
எழுதுகோலை எடுக்க வேண்டுமெனில் 
என் எண்ணங்கள் -
காட்டாற்று வெள்ளமாய்க் 
கரைபுரண்டு ஓடிவரும் கருத்துக்கள் 
கரை போடா முடியாது !
காணாமல் பொய் விடுமே !

இலக்கணம் என்ற பூட்டுப்  போட்டுப் பூட்டிக் கொள்ளாமல் மிகவும் சுதந்திரமாக கவிதை வடித்துள்ளார்கள் .மனதில் பட்டத்தை கவிதை ஆக்கி உள்ளேன் என்று முதல் கவிதையிலேயே முரசு கொட்டி உள்ளார்கள் .
.
இயற்கை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு கவிதை எழுதும் ஆற்றல் மிக இயல்பாக வசப்படும் .நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணிஅவர்கள் இயற்கையின் ரசிகை என்பதால் ரசித்து கவிதை எழுதி உள்ளார்கள் .

கொட்டிக் கிடக்கும் 
பவள மல்லி பார்த்தேன் !
பாரிஜாதமலரே ! பாரிஜாதமலரே !
பவளக் காம்போடு 
பழுப்பு வெண்மையில் 
பச்சை இலைக் கொம்பு நுனியில் 
பார்ப்பவர் உள்ளம் கொள்கிறாயே !
உன்னைப்  படைத்தவர் யார் ?

இந்தக் கவிதை படிக்கும் வாசகர்களுக்கு மனத்திரையில் மலர் , இலை, இயற்கை காட்சியாக விரியும் என்பது  உறுதி .

சின்னச் சின்ன மின்னல் போல சின்னச் சின்ன துளிப்பாக்கள் சிந்திக்க வைக்கின்றன .வாழ்வியல் சூத்திரம் சொல்லித் தருகின்றன .

வேலை செய் !

வெற்றி வேண்டுமெனில் 
வேலை செய் !
செல்வம் வேண்டுமெனில் 
செயல் தொடங்கு !
புகழ் வேண்டுமெனில் 
புண்ணியம் செய் !

அறிவு !

தோண்டத் தோண்ட கிணற்றில் தண்ணீர் !
படிக்கப் படிக்க உனக்குள் பன்னீர் - அறிவுப்பன்னீர் !

படிப்பின் அவசியத்தை மிக எளிமையாகவும், இனிமையாகவும் சொற்ச்சிக்கனத்துடன் உணர்த்தி உள்ளார்கள் .

தற்போது நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்கள் கவிதை ,கதை ,கட்டுரை ,விமர்சனம் எழுதும் 
பன்முக ஆற்றல் மிக்கவராக இருந்தபோதிலும் .முதலில் எழுதிய கவிதைதான் என்பதால் இந்நூலில் தனி முத்திரை பதித்து உள்ளார்கள் .ஹைக்கூ கவிதைகளும் உள்ளன .அதில் ஒன்று.

நீந்தச் சென்றவார்கள் 
மூழ்கி  விட்டார்கள் 
மதுப்பழக்கம் !

டாஸ்மாக் கடை  சென்று சும்மா பீர் மட்டும் தான் என்று ஆரம்பித்து பிராந்தியில் மூழ்கும் இன்றைய   இளைய தலைமுறை கவனத்தில் கொள்ள வேண்டிய ஹைக்கூ இது .

கவிதை காணாமல் போகிறது !
காலைப் பொழுது 
கவிதைப் பிறக்கும் பொழுது 
கவிதை காட்டாற்று வெள்ளமாய்க் 
கரை புரண்டு ஓடி வந்து நெஞ்சில் மோதுகிறது !
காகிதம் எடுத்துப் பேனா பிடித்து 
வெள்ளத்தை வெள்ளைத்தாளில் 
தாவிப் பிடித்து அடக்க நினைக்கையில் 
காபி ரெடியா ?குரல் ஒழிக்க 
சாவி கொடுத்த பொம்மையாய் 
கால்கள் ச்மையலறை நோக்கக் 
கைகள் காபி கலக்க 
கரை புரண்டு வந்த கவிதை 
காணாமல் போயிற்று !

இலக்கிய  நண்பர்களே உங்கள் மனைவிக்கு கவிதை எழுதும் ஆற்றல் இருந்து ,காலையில் கவிதை எழுத அமர்ந்தால் ,ஆணாதிக்க சிந்தனை விடுத்து நாமே காபி கலந்து கொண்டால் .தமிழுக்கு நல்ல கவிதை கிடைக்கும் .பெண்ணுரிமையை மிக மென்மையாய் கவிதையில் உணர்த்து உள்ளார்கள் .பாராட்டுக்கள் .நட்சத்திர  விடுதியில் சமையல் கலைஞராக  இருப்பார் .ஆனால் தன்  வீட்டில் சமையல்  அறைக்குள் நுழையவே மாட்டார் .

ஆண்களே ஆணாதிக்கம் விட்டு 
அனுசரனைக்கு வாருங்கள் .
அறிவிலோங்கிக் சமமென்றால் 
ஆண்  ஒரு  நாளும் பெண் ஒரு  நாளும் 
சமைத்தால் தவறில்லையே  !
ஆண்மகனே உன்னுருவில் 
பெண்மகள் பாதியென்றால் 
காலையில் நீ காபி போடு !
கவிதைபாடத் துடிக்கும் 
கண்மணிக்கு கைக்குதவு !

ஆண் ,பெண் சமம் என்று மேடையில்  பேசி,இதழ்களில்  எழுதும் முற்போக்குவாதிகள் கூட வீட்டில் மனைவிக்கு  சமையலறையில் உதவுவதே இல்லை என்பதே கசப்பான உண்மை .நானும் இதில் அடக்கம் .ஆணாதிக்க சிந்தனையை அகற்றி .மனைவிக்கு உதவுங்கள் என்று புத்திப் புகட்டும் விதமாக கவிதை உள்ளது .இது தான் பெண்ணியக் கவிதை .

கருப்பனைக் கை தூக்கி விடுங்க !

கருப்பனைக் கை தூக்கி விடுங்க 
கவிதை வானில் அவனை 
நிரந்தர நிலாவாக்கவிட்டாலும் 
நட்சத்திர அந்தஸ்தாவது கொடுங்க !
மின்னி விட்டுப் போகட்டும் .!

எனக்கு இந்தக் கவிதை படித்ததும் .ஒருமுறை கவியரசு கண்ணதாசன் அவர் கவிதையை ஒரு மாணவனை படிக்க வைக்கிறார் யாரும் கை தட்ட வில்லை .மாணவன் கவிதையை கவியரசு கண்ணதாசன் படிக்கிறார் பலத்த கைதட்டல் .நடந்த உண்மையை சொல்லி விட்டு படைப்பாளி யார் ? என்று பார்த்து ரசிப்பதை விடுத்தது படைப்பை ரசியுங்கள் என்று உணர்த்தினார் .கருப்பனுக்காக குரல் கொடுத்த நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்களுக்கு பாராட்டுக்கள் .தொடர்ந்து நீங்கள் கவிதைத் துறையில் ஆர்வம் செலுத்துங்கள் .விரைவில் ஹைக்கூ நூல் ஒன்று வெளியிட வாழ்த்துக்கள் .


-- 

.
-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்