" நச் "வரி கவிதைகள் ! நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

" நச் "வரி கவிதைகள் !

நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

ஸ்ரீ வில்லிபுத்தூர் .விலை ரூபாய் 30.

நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன்அவர்கள் சகலகலா வல்லவர் .கதை ,கவிதை ,கட்டுரை .துணுக்கு எழுதும் படைப்பாளி மட்டுமல்ல ," நச் "வரி கவிதைகளுக்குத்  தகுந்த ஓவியம் வரைந்த ஓவியர் .இந்த நூலை நூல் இலைப் பின்னல் மூலம் நூலாக்கியவரும் இவரே .நெசவாளி , உழைப்பாளி .இவரது படைப்பு வராத இதழ்களே  இல்லை என்று சொல்லும்  அளவிற்கு சகல இதழ்களிலும் எழுதி வரும் படைப்பாளி .தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஸ்ரீ வில்லிபுத்தூர்  கிளைச் செயராக இருந்து இலக்கியப் பணி  செய்து வருபவர் .வயதால் முதியவர்ராக இருந்தாலும் , ஓயாத உழைப்பால் என்றும் இளைஞர் .

.படைப்பாளியே ஓவியராக இருப்பதால் முதலில் ஓவியம் வரைந்தாரா ? முதலில்  கவிதை எழுதினாரா ? என வியக்கும் அளவிற்கு இரண்டும் மிகப்பொருத்தமாக உள்ளன .அவரே வரைந்து இருப்பதால் நூலிற்கு கூடுதல் பலமாக உள்ளது .

" நச் "வரி கவிதைகள் ! என்ற பெயரில் நச் , நச் என்ற கருத்துக்களை விதைக்கும் விதமாக கவிதைகள் எழுதி உள்ளார் .சமுதாயத்தின் நச்சுக் கருத்துக்களைச்  சாடும் விதமாக ,விழிப்புணர்வு வரும் விதமாக கவிதைகள் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .

நல்ல இலக்கிய ரசிகராக இருந்தால்தான் .நல்ல படைப்பாளியாக மிளிர முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன் .மதுரையில் நடக்கும் முக்கிய இலக்கிய விழாக்களுக்கு ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து மதுரை வந்து விழாவை ரசித்துச் செல்வார் .

அரசியல்வாதிகள் எல்லோரும் "விலைவாசியை குறைப்போம் ".என்று சொல்லி பதவிக்கு வருவார்கள் .வந்ததும் சொல்லியதை சுலபமாக மறப்பார்கள் .விலைவாசியால் ஏழைகளின் வாழ்வில் தொல்லை .

எல்லாம் இழந்தபின் மொட்டை 
ஆயினும் கவலை 
விழி பிதுங்கும் விலைவாசியால் !

சித்தர்கள் போல வாழ்வியல் தத்துவம் கூறும் கவிதைகளும் உள்ளன .

சாட்டையில்லாப் பம்பரம் 
சுழலும் வரை உலகு 
சாய்ந்தால் சவம் !

எல்லோருக்கும் குழந்தைப் பருவம் பொற்காலம் .அக்காலம் யாருக்கும் திரும்புவதில்லை .

எதிர்காலம் எப்படியோ ..
இப்பொழுது விளையாடு 
 பொம்மையுடன் !

மகிழுந்தில் செல்ல வேண்டிய நபர்கள் எண்ணிக்கையில் இரண்டு சக்கர வாகனத்தில் செல்வதை சாலையில் பார்க்கிறோம் .அது ஒரு நிலாக்காலம் ,நம் மனது கனாக் காணும் .

இரு சக்கர வாகனத்தில் 
ஒரு சேர நால்வர் 
பொருந்தாப் பயணம் !

படைப்பாளி பொதுவுடைமைவாதி என்பதால் மாட்டையும் பொதுவுடைமைவாதியாகப் பார்க்கிறார் .

வண்டி இழுக்கச் 
சண்டி செய்யும் மாடு 
உழைப்புச் சுரண்டலை எதிர்த்து ! 

ஆக்கிரமிப்பின் காரணமாக பல கண்மாய்கள் ,ஊருணிகள் ,குளங்கள் தமிழ்நாட்டில் காணமல் போன அவலம் குறித்து .

தாகம் தணித்த ஊருணி நீ 
பெருகின வீடாக 
இழந்தன தண்ணீரை !

நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன்அவர்கள் நெசவாளி என்பதால்  நெசவாளியின் வாழ்க்கையைப் பற்றியும் எழுதி உள்ளார் .

பட்டுச் சட்டை அணிந்த 
பறவை  அழகு 
பட்டுத்துணி நெய்த 
நெசவாளர் வாழ்க்கை அழகில்லை !

.மேலே உள்ள கவிதையை இப்படி மூன்று வரிகளில் ஹைக்கூ வடிவிலும் எழுதலாம் .

நெசவாளி 
வாழ்க்கை 
கந்தல் !

நூல் ஆசிரியர் ஹைக்கூ பற்றிய புரிதலுடன் மூன்று  வரிகளில் எழுதினால் இன்னும் சுவையாக இருக்கும் .
 காதலுக்கு கவிதை அழகு .கவிதைக்கு கற்பனை அழகு .

மீன்களைப் போல் இருந்த 
அவள் கண்களைக் 
கொத்த வந்த பறவை !

நூல் ஆசிரியர் வயது 70 கடந்த இளைஞர் .இளமை ததும்பும் அவரது கவிதைகள் மிக நன்று .

மழை மேகம் சூழ மயிலாடுது 
மான் விழி மங்கை நடைபயில 
மனம் கூத்தாடுது !

அழகியல் கவிதைகளில் நூலில் நிரம்ப உள்ளன .நூல் ஆசிரியர் நெசவாளி என்பதால் எட்டுக் கால் பூச்சியையும் நெசவாளியாகவேப் பார்க்கிறார்  .

கட்ட குட்ட பொண்ணுக்கு 
எட்டுக் கால் புச்சி ஒன்று 
பட்டுத் தறியில் சேலை நெய்யுது !

மாற்றுத் திறனாளிகள் மாண்புகள் உணர்த்தும் கவிதை நன்று .

ஊனம் ஒருபுறம் மட்டும் 
ஊக்கம் 
உடல் எங்கும் !

கணவன் மனைவி இருவருக்கும் அறிவுரை தரும் கவிதை ஒன்று .ஒவ்வொருவரும் கடைபிடித்தால் மண  நாட்டில் விலக்கு வராது 

நான்கு சுவருக்குள் 
தீப்பதை விட்டு 
நடுவீதியை  நாட வேண்டாம் !

தமிழக மீனவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் ஆறுதல் தரும் விதமாக,தன்னம்பிக்கை விதைக்கும் கவிதை மிக நன்று .

கடல் வளம் வற்றினும் 
வற்றவில்லை 
தன்னம்பிக்கை !

நாளிதழ் ஒன்றுக்கு வாராவாரம் புகைப்படத்திற்கு எழுதிய கவிதை எதுவும் பிரசுரம் ஆகவில்லை என்று வருத்ததுடன் பதிவு செய்த கவிதைகள் யாவும் மிக நன்று .
பதச்சோறாக ஒரே ஒரு கவிதை மட்டும் .

தன்னம்பிக்கையோடு படி 
அரசுவேலை உறுதி 
அய்பத்தைந்தாம் அகவையில் !

நூல் ஆசிரியர் எஸ் .எஸ். மணியம் அவர்களுக்கு பாராட்டுக்கள் .கை அடக்கப் பதிப்பாக வந்துள்ளது .சமுதாயத்தை உற்று நோக்கி கவிதைகளை வடித்துள்ளார் .சிந்திக்க வைக்கின்றார் .தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் . 

கருத்துகள்