படித்ததில் பிடித்தது ! உள்ளொளிப் பயணம் !நூல் ஆசிரியர் முது முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப.நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !

படித்ததில் பிடித்தது !

 உள்ளொளிப்  பயணம் !
நூல் ஆசிரியர் முது முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப . முதன்மைச் செயலர் .iraianbuv@hotmail.com
நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
viji.masi@gmail.com

நூல்  ஆசிரியர் வெ .இறையன்பு  அவர்கள் இந்திய  ஆட்சிப்  பணியில்  இருப்பவர். மெத்தப்  படித்தவர். படித்தவற்றை எல்லாம் "  தன்  உள்" வாங்கி  , அதன்  பயனை  அனுபவிப்பவர். தனது வாழ்க்கைப் பயணத்திற்கு  அவை  எவ்வாறெல்லாம்  உதவின என்பதில் அவர் ஒரு பெரிய  ஆராய்ச்சியே  செய்திருக்கவேண்டும்! இது என்னுடைய  கருத்து. அவரது உள்ளொளிப் பயணம்  படித்ததன்  பயனாக  எனக்குள் ஏற்ப்பட்ட  கருத்தாகவும் இதைக் கொள்ளலாம்.
தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதாகக்  கருதி ஆசிரியர் பல அரிய கருத்துக்களைக் கூறிச் சென்றிருக்கிறார்  என்பதைவிட , இந்நூலில்  கொட்டிக் குவித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

பிறப்பு, இறப்பு, இதனிடையே இருக்கும் வாழ்க்கை இவற்றில் உள்ள  தத்துவங்களைக்  கூற , ஜென் ,ஈசாப் கதைகளிலிருந்தும் ,ஜே.கே., கபீர் ,ஓஷோ ,கன்ஃ பூசியஸ் போன்றோர்களின் கருத்துக்களையும்  எடுத்துக் கொண்டு  நமக்கு ஒரு தெளிவான வழியைக் காண்பிக்கிறார். நமது  உள்ளொளிப்  பயணம் நன்றாக அமையவேண்டும் என்ற கருத்தில்!

எல்லோருக்கும்  பிறப்பு அவரவர்  தாய் வழி! இது முதல் பிறப்பு . இன்னொரு பிறப்பு இருக்கிறது.அது எது தெரியுமா? "தன்னிலிருந்து  தன்னைப் பிரசவிப்பது" எவ்வளவு ஆழமான  செய்தி ! திருவள்ளுவரின் , "தோன்றின்  புகழோடு  தோன்றுக " என்பதற்கான அடித்தளமே , 'தன்னிலிருந்து தன்னைப் பிரசவிப்பது' தானோ?

முதல் பிறப்பு ஒரு மனிதனுக்கு, உடலியல் சம்மந்தப்பட்டது; இரண்டாவது பிறப்பு,மன ரீதியான இலட்சியங்களைக் கொண்டதாகும். இது  அவனது  வாழ்க்கை  முன்னேற்றத்திற்குப் பெரிதும் பயனுள்ள பிறப்பாகும். இப்பிறப்புதான் அவனது வாழ்க்கையின் தொடர்ந்த செயல்களுக்கு உறுதுணையாக இருக்கக்கூடியது ஆகும்.

ஆசிரியரின்  இப்பிறப்புதான் .....அவரது இரண்டாவது பிறப்புத்தான் நமக்கு  ' உள்ளொளிப் பயணம்' கிடைக்க மூலாதாரமாக இருந்திருக்குமோ?

அவரது இந்தப் பயணத்தை வழித்துணையாகக் கொண்டு நாம் எப்படி "நம்முள்  பயணம் செய்வது?".  ஆசிரியர்  கூறும் கருத்துக்களைக்  கூர்ந்து  படித்துச் சிந்தித்து செயலாற்றினால் நாமும் பயணம் மேற்கொள்ளலாம்!

அரிய ஆற்றல்களைத் தனக்குள்ளே  வைத்திருக்கும்  மூளையை  நாம் எப்படிப் பயன்படுத்தி 
உலகம்  பயனுற வாழவேண்டும் என்பதை  அடிப்படைக் கருத்தாக வைத்து, 'மனித  மூளை' என்ற தலைப்பில் 
மூளையைப் பற்றிய  பல்வேறு செய்திகளைக்  கூறுகிறார். மூளைதானே  நமது  செயல்களின்  தலைமைச் செயலகம்!
ஆனால் , அதன் இயக்கங்களுக்கு மூல காரணமான நரம்பு செல்கள்  பழுதுபட்டால், புதிய செல்கள் உருவாகாது.
இதற்கான  செயலைச் செய்ய மூளைக்கே தெரியாது. இதுதான் மூளையின் மர்மம்! பிறப்புக்கு முன்னும் , இறப்புக்குப் பின்னும் 
அறிய முடியாத மர்மம் வாழ்க்கை என்பதைப் போல !
ஆகவே, பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் நம் கையில் இருக்கும் வாழ்க்கையை  நமது மூளையைக் கொண்டு சிறந்த முறையில் 
வாழவேண்டும் என்ற கருத்தில் , மூளையின்  இயக்கமே  மனித குலப் பயணத்திற்கு  அடித்தளமாக இருக்கிறது என்ற கருத்தை விளக்குகிறார் நமது 
இந்திய ஆட்சிப்  பணியாளர்.
தன்னம்பிக்கையை நன்னம்பிகையாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிய ஆசிரியர், தன்னம்பிக்கை பற்றிய தனது  பயணப்  பார்வையை 
இன்றைய  இளைஞர்களுக்கு  எடுத்தியம்புகிறார்".உள்ளுவதெல்லாம்  உயர்வுள்ளல் " வெள்ளத்தனைய மலர்நீட்டம்" என்ற வள்ளுவனாரின் கருத்துக்களை 
உள்வாங்கி , தனது கருத்துக்களை  அவற்றோடு அலசிப் பார்க்கிறார்.வானத்தை இலக்காகக் கொண்டு, மரத்தின் உச்சியையாவது எட்டிப் பிடிப்போம் 
என்று நம்மை அவரது  பயணத்தில் நம்மை இழுக்கிறார்!
இதுபோன்று , நிறையக் கருத்துக்களை , நிறையத் தலைப்புகளில், நிறைந்த  பெரும் அறிஞர் பெருமக்களின் துணையோடு நமக்கு விளக்குகிறார்.
நம்  மனம் முழுக்க நல்ல விதைகளைத் தூவியிருக்கிறார். நம் மனம் பூத்துக்குலுங்கினால் , நமது  வாழ்க்கைப் பயணம் நமக்கு மட்டுமல்லாது, கலங்கரை 
விளக்காக  உலகோருக்கும் பயன்படும்.
அருமையான நூல்! அனைவரும் படிக்க வேண்டிய நூல்!
நூலின் முத்தாய்ப்பு , பின் பகுதியில் தொகுத்திருக்கும் அறிஞர் பெருமக்களைப்பற்றிய குறிப்பு , வாசகரின்  வசத்திக்காக  விரித்திருக்கும்  "படித்துப் புரளும் இரத்தினக் 
கம்பளமாகும் !
ஆசிரியரை  வணக்கத்துடன்  வாழ்த்துகிறேன்.

.

கருத்துகள்