நன்றிநம்பிக்கையுடன் பாகம் - 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

நன்றிநம்பிக்கையுடன்   பாகம்  -  2

நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

கற்பகம் புத்தகாலயம் 4/2 சுந்தரம் தெரு .தியாகராயர் நகர் .சென்னை 600017.
தொலைபேசி 044-24314347
விலை 70 ரூபாய் .

நம்பிக்கையுடன் பாகம் 1 வெற்றிக்கு வழி சொன்னது .நம்பிக்கையுடன் பாகம் 2 
தோல்வியடைந்தவனுக்கு ஆறுதல் சொல்கின்றது .சித்தர்கள் போல ,ஜென் குருக்கள் போல வாழ்வியல் இயல்புகளை விளக்கி உள்ளார் .தோல்விக்குத் துவளாத உள்ளம் தரும் விதமாக கவிதைகள் உள்ளன .
கற்பகம் புத்தகாலயத்தின் தரமான பதிப்பாக வந்துள்ளது .அட்டைப்படம் அச்சு ,வடிவமைப்பு யாவும் நன்று .ஒரே கல்லில் மூன்று மாங்காய் போல வித்தகக் கவிஞர் பா .விஜய் கவிதைகள் ,அறிஞர்களின் பொன் மொழிகள் ,பொது அறிவு விடைகள் உள்ளன .

.இந்த நூலைப் படிக்கும் போது மேற்கோள் காட்ட வேண்டிய பக்கங்களை மடித்து வைத்து வந்தால் எல்லா பக்கங்களும் மடிக்கும் படி ஆகி விட்டது .நூல் விமர்சனத்தில் அனைத்து கவிதைகளையும் மேற்கோள் காட்ட முடியாது என்பதால் மறு பரிசீலனை செய்து சில கவிதைகளைத் தவிர்த்து விட்டேன் .

உறக்கம் ஒரு போதை மாத்திரை 
உறங்கும் போதை 
இருக்கும் வரைக்கும் 
உழைப்பு அழுந்திக் கிடக்கும் 

பாட்டுகோட்டை பட்டுகோட்டை கல்யாண சுந்தரத்தின் வைர வரிகளான துங்காதே தம்பி துங்காதே நினைவூட்டும் விதமாக இருந்தது .உழைப்பின் உயர்வை உணர்த்தியது .
நம்பிக்கை எதிலும் வேண்டும் என்று உணர்த்தும் வரிகள் நன்று .

தியானம் செய் !
அவநம்பிக்கையை  எரிக்கும் 
மயானம் செய் !

இழப்புகளுக்காக வருந்தி நேரம் கழிக்காதே .புத்திப் புகட்டுகின்றார் 

ஜெயிக்கத் துடிப்பவன் 
இழப்புகளையும் ஒருவித 
ஜெயிப்பாகவே ஏற்பான் !

மனதில் வெற்றிக்கான நெருப்பு எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்கிறார் .

வெற்றி வரும் வரை 
விழிகள் உறங்க நேர்ந்தாலும் 
உள்ளே விழித்திரு !

இந்நூலில் உள்ள கவிதைகள் யாவும் இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்கள்   
நூலுக்காக, கவிதை எழுத வேண்டும் என்று எழுதி இருந்தால் இவ்வளவு சிறப்பாக வந்து இருக்காது .அவர் வாழ்வில் கண்டதை , சந்தித்தை , உணர்ந்து , நொந்து ஞானி போல உண்மையை எழுதி இருப்பதால் .இந்நூல படிக்கும் வாசகன் தனக்காக எழுதி உள்ளார் என்று எண்ணும்   விதமாக உள்ளன .பாராட்டுக்கள் .
உழைப்பின் மேன்மையை மிக மென்மையாக உணர்த்தும் கவிதை நன்று .

உறங்கும் நேரம் 
குறையக் குறைய 
உழைக்கும் நேரம் 
நிறைய நிறைய 
ததும்பும் தங்க திரவம் - உன் 
வெற்றிப் பாத்திரத்தில் !

தன்னம்பிக்கையாளன் எதையும் நாளை , நாளை என்று நாளைத் தள்ள மாட்டன் ,தாமதிக்க மாட்டன் என்பதை உணர்த்தும் கவிதை ஒன்று .

தாமதிப்பது என்பதுபோல் 
கொடூர தற்கொலை எந்திரம் 
தன்னம்பிக்கையாளனுக்கு 
கிடைக்காது .

மூட நம்பிக்கைகளை நம்ப வேண்டாம் என்று பகுத்தறிவு சிந்தனை விதைக்கின்றார் .

சகுனம் பார்த்து செய்வதல்ல 
சரித்திரப் பதிவுகள் ;
வரலாற்றின் பக்கங்கள் 
பிற்போக்குவாதிகளை 
வரவேட்டில் வைபதில்லை !

சாமியார் என்ற பெயரில் நடக்கும் கூத்துகளைப் பார்த்து தெளிந்து , இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா .விஜய்  அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு .ஆனால் சாமியார் நம்பிக்கை இல்லை என்பதை கவிதை வரிகளின் மூலம் உணர்த்துகின்றார் .

ஆன்மீகத்தை 
200 % நம்பு 
ஆன்மீகத்தில் இருப்பவர்களை 
10 % ம்  கூட நம்பாதே !

தோல்விக்கு சோர்ந்து விடாதே .பொறுத்தால் அதை விட பெரிய வெற்றிகள் கிடைக்கும் என்கிறார் .நம்பிக்கை விதை விதைக்கிறார் 

சரியானதை தேர்வு செய்தும் 
தோல்வி நேர்கிறதா ?
பொறு - நீ 
பெரிதாக ஜெயிக்கப் போகிறாய் !

.மற்றவர் விமர்சனத்திற்குப் பயந்து உனது இலட்சியத்தை மாற்றிக் கொள்ளாதே .நீயாக முடிவெடு .உனக்கு நீயே நீதிபதி என்கிறார் .

சுய முடிவு கொள் !
சூரிய விழி ஏந்தி 
மறுபடியும் துவங்கு உன் 
மறுக்கப்பட  முடியா முயற்சியை !

காந்தியடிகள் சொன்னதுபோல விடுதலை வேண்டும் .இலட்சியத்தை அடைய வேண்டும் ஆனால் அதை அடையும் வழி நேர்மையானதாக இருக்க வேண்டும் .அதனை வழிமொழிந்து குறுக்கு வழியில் ஈட்டும் வெற்றி நிரந்தரம் அன்று .போதைப்பொருள் அருந்தி ஓடி பதக்கம் வென்று சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டால் பெற்ற பதக்கம் பறிக்கப்படும் அதுபோல நேர்மையற்றது நிரந்தரம் அன்று என்று சொல்லும் வைர வரிகள் .இதோ !
.
நேர்மையாய் ஜெயிப்பதற்கு 
நேரும் தாமதம் !
ஆனால் 
அது நிரந்தரம் 
மற்றது அந்தரம் !

செய்யும் முயற்சி எல்லாவற்றிலும் வெற்றியே கிடைக்க வேண்டும் என்று எண்ணுவது பேராசை .சில தோல்விகளும் வரலாம் அதனைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் வரவழைக்கும் அற்புத நூல் இது .

முயற்சி எல்லாமே 
ஜெயித்தே தீர வேண்டும் 
என்பதல்ல விதி !
முயற்சி அது போதும் 
நாட்கள் பெருமை கொள்ளும் !
உழைப்பு விருத்தியாகும் !
சிந்தனைத் திறன் கூர்மை பெறும் !

அட்டை முதல் அட்டை வரை உள்ள கவிதைகள் அனைத்தும் தோல்வியால் துவண்ட மனதிற்கு மயில் இறகால் வருடி ஆறுதல் சொல்வதுபோல உள்ளது .பாராட்டுக்கள் .இனிய நண்பர் நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களிடம் ஒரு வேண்டுகோள் விரைவில் நம்பிக்கையுடன்   பாகம்  -  3 எழுதுங்கள் .அதில் தங்கள் கவிதை மட்டும் தனித்தன்மையுடன் தனித்து இருந்தால் தனி முத்திரைப் பதிக்கும் .அறிஞர்கள் பொன் மொழிக்கு பல நூல்கள் உள்ளன .பொது அறிவு விடைகளுக்கும் எத்தனையோ நூல்கள் உள்ளன .நம்பிக்கையுடன்   பாகம்  -  3  தங்கள் கவிதை மட்டும் இடம் பெறட்டும் .

கருத்துகள்